Part16

             பிரயாணம் செய்யும் வாகனத்தில் சாரதியை மீறிப் பயணம்  செய்யமுடியுமா? பலரை ஏமாற்றலாம். ஆண்டவன் கண்களைக் கட்டமுடியுமா? கரன் வாழ்வில் காலம் கிறுக்கும் மாற்றங்கள் மெல்லமெல்லக் கனமானதாகவே அமைந்திருந்தன. காத்திருக்கும் வாழ்வில் காலம் தந்த பரிசை யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. கரன் கால் விரலில் கறுப்பாய் ஒரு புள்ளி அதிசயமாய்த் தோன்றியது. மெல்ல மெல்லக் கால்விரல் நிறம் மாறத் தொடங்கியது. உருக்குலையும் நிலை கண்ட வைத்தியர்கள் இவ்விரலைப் பாதத்திலிருந்து அகற்றிவிட்டனர். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அது பெரிய  வியாதியாகி விடுகிறது. எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் விஷமே. கொழுத்தபிள்ளை அழகு என்பதற்காகப் பிள்ளைக்குக் கொழுப்பை உண்ணக் கொடுக்கமுடியுமா? சர்க்கரைவியாதி கரனுக்கு முன்னமே சொல்லிக்கொள்ளாமல் உடலுள் சப்பாணி கட்டிக்கொண்டு அமர்ந்ததனால், அவனுடைய கால்விரல்கள் ஓர்விரல், ஈர்விரல் எனத் தொடந்து அனைத்து விரல்களும் பாதிக்கப்பட்டன. இதனால் கால்விரல்கள் அனைத்தும் பாதத்திலிருந்து விடைபெற வேண்டியது அவசியமானது. இதன் தாக்கத்தால் முழங்காலின் கீழ்ப்பகுதியும் பழுதடையும் நிலை கண்ட வைத்தியர்கள் முழங்காலின் கீழுள்ள பகுதியை அகற்றிவிட்டார்கள். ஒற்றைக்காலில் வாழ்வைக் கழிக்க வேண்டிய தண்டனை கிடைக்கப் பெற்றுத் தடுமாறிவிட்டான் கரன்.

                   இதை விதி என்பதா? இல்லை வினை விதைத்தான் வினை அறுப்பான் என்பதா? ஒரு மனிதன் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படும் வேளையில் அவன் ஆற்றிய புண்ணியங்கள் புதுப்பொலிவு பெற்றுத் துணை தரத் துடித்துக் கொண்டு ஓடிவரும். இந்த வகையில் ஒற்றைக் கால் இழந்த கரனுக்கு ஒரு தடியாய் யார் இருப்பார்? தாலியின் மகத்துவம் கரன் வாழ்வில் தலைநிமிர்ந்து நின்றது. தமிழர் கலாசாரம் என்றும் அழிந்துவிட மாட்டாது என வரதேவியின் பணிவிடை ஆணித்தரமாகக் காட்டியது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாகட்டும் எனத் தன் அணைப்பில் மட்டுமே எதிர்காலத்தைக் கழிக்கவிருக்கும் கணவனைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பைத் தலைமேல் கொண்டாள். ஆயினும் அன்புவார்த்தைப் பரிமாற்றம் இருவரிடமும் இருக்கவில்லை. ஒரு தாதிபோல் தாங்கினாள். உலகம் உருண்டையானது. எங்கு சுற்றியும் திரும்பவும் அந்த இடத்திற்கே வந்தேயாக வேண்டும். மருத்துவமனை கரனுக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்தது. சிந்தித்துச் சிந்தித்துத் தனக்குத் தானே பட்டை தீட்டித் தன் வாழ்வைப் பொலிவாக்கினான். தன் எதிர்கால வாழ்வைத் தன் மனையாள் கையிலே தங்கியிருக்கும் பேருண்மை புரிந்து கொண்டான். பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடக்கும் கணவனின் தேவைகளைத்  தெரிந்து புரிந்து தீர்த்து வைத்த வரதேவி, வாழ்வை மாற்றியமைக்கும் காலத்தை எண்ணிப் பார்த்தாள். தனக்குள்ளே ஒரு சிரிப்பு. இது அலட்சியச் சிரிப்பா! இல்லை வாழ்ந்து பார்த்த வாழ்வுஞானச் சிரிப்பா! தனக்கு முன் ஒரு எல்லை போட்டாள். அவசியம் கருதி உதவினாள். ஆழமாக அவன் விடயங்களில் தலையிடாது இருந்தாள்.

                                 கரன் தனக்குள்ளே தான் செய்வது அனைத்தும் சரியென்று நினைக்கும் புத்தியுள்ளவன். அதனால் வரதேவி அவன் செய்கைகளை மாற்ற முடியாது என்பதை மனதுள் நினைத்துவிட்டாள். நடப்பதை ஏற்று நடந்தாள். அருகே கரன் அமர்ந்திருக்க அவன் ஒரு காலாய் நடிக்கும் கைதடி தடுமாறி கீழே விழுகிறது. கைத்தடியை எடுப்பதற்காக குனிந்தவன் கீழே சரிந்தான். ஓடிவந்து அவனை வரதேவி கைத்தாங்கலாகப் பிடித்தாள்.

 “என்னை விடு வரா…. என்னை விடு…. விழுந்து எழுந்த நிலை எனக்குப் போதும். என்னை நானே கவனித்துக் கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்கிறேன். உனக்கு நான் செய்த பாவங்கள் எல்லாமே ஒன்று திரண்டு ஒரு காலில் என்னை நடக்கச் செய்திருக்கிறது. வெட்டப்பட்ட கால் என் செருக்குகளை வெட்டிவிட்டது. துணையான கைதடி நான் செய்த புண்ணியங்களை நினைவுறுத்துகின்றது. என்னோடு கிடந்து உன் வாழ்வு வீணாகத் தேவையில்லை”

 என்று அருள் பெற்ற மகான்போல் மனம் நெகிழ்ந்து வார்த்தைகளை விதைத்தான். இவை வரதேவி மனதில் நல் எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதே அவன் எண்ணமாகியது.

 “முடியுமென்றால் எழும்புங்கள். நான் ஒன்றும் கல்நெஞ்சக்காரி இல்லை. யாராக இருந்தாலும் என் கரம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் உதவிக்கு ஓடிவரும். உங்கள் வலி உங்களுக்குத்தான் தெரியும். உங்கள் வலியை நான் தாங்கவேண்டிய அவசியமில்லை”  எதிலுமே பிடிப்பில்லாதவள் போல் பேசிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.

 தொலைக்காடசியில் ஜேசுதாஸ் பாடிய

 “ஒரு தெய்வவீணையே நீ பேசினால் என்ன

 ஒரு தேவகானமே நீ பாடினால் என்ன

 நான் அழைத்த குரல் கேட்குமா

 உன் அமுதவிழி பார்க்குமா

 திருக்கோயில் தீபம் இரு கண்களாகும்

 ஒரு பார்வை நீ பார்த்தால் உயிரொன்று வாழும்

 எனக்கென்று யாருண்டு என் காதல்தேவி

 இமைக்காது நீ போனால் எனக்கேது ஆவி”

 பாடல் கேட்டுத் தட்டித்தடுமாறி தன் கைத்தடி பற்றி மெல்ல எழுந்து நின்ற கரன் விடியலுக்காய் விரையும் மேகம்போல் எண்ணத்தை விரைவாக்கி வெளியே புறப்படத் தயாரானான். தன் உயிரின் பாதியாய்க் கருதிய மனைவி தன்னோடு ஓடும் புளியம்பழமும் போல் வாழுகின்ற வாழ்வை நினைத்து வேதனைப்பட்டான்.

                                                                               ———

           முடியாது என்று வாழ்வில் எதுவுமில்லை. முடித்துக்காட்ட முனையும்போதே மூளையும் எம்முடன் இணைந்து வேகத்தைக் கூட்டும். வேதனை நோய் என்று விழுந்துவிட்டால் எழுந்து நிற்கவே மனம் துணையாகாது. கரன் “நான் இழந்தது என் ஒரு கால் மட்டுமே. அத்துடன் முடிந்துவிட்டதா வாழ்க்கை. என் மறுகால் இருகாலின் வலிமையையும் பெறும். பெட்டிப்பாம்பாய்ப் பதுங்கிக் கிடக்க நான் ஒன்றும் சோம்பேறியும் இல்லை. கோழையும் இல்லை. மருத்துவக்காப்புறுதி நிறுவனத்திற்குச் சென்றான். தன்நிலை உணர்த்தி தனியாய் நடக்க வசதியான வண்டி ஏற்பாடு செய்தான்.

           அவர்கள் உதவியுடன் பிடித்துக் கொண்டு நடப்பதற்காகத் நான்கு கால்கள் பூட்டிய வண்டி ஒன்றைப் பெற்றுக்கொண்டான். ஒற்றைக்கால் நடந்து களைத்தால் வண்டியில் இருக்கக்கூடிய வசதி அதில் வாய்த்திருந்தது. இங்கு கண்ணில்லாதவர்கள் கூட வீதியில் தனியே நடப்பதற்கு ஏற்ற கைதடி உண்டு. வீதி தாண்டி நடப்பதற்கும் வீதிவிளக்குகளில் ஒலிஅலை உண்டு. அந்த ஒலியைக் கேட்கும்போது சிவப்பு விளக்கு எரிகிறது என்று ஊகித்துக் கொள்வார்கள். அப்போது பாதையைக் கடப்பார்கள். இந்த மனிதக் கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவே! அவை எதுஎது மனிதனுக்குத் தேவையோ அவற்றைப் பற்றி ஆழமாக நோக்கி அவை பற்றிச் சிந்தித்து தேவையை நிவர்த்தி செய்வதற்குரிய கருவிகளைக் கண்டுபிடித்துவிடும்.  இதனாலேயே மனிதவாழ்க்கை இலகுவாக்கப்பட்டிருக்கின்றது. இது இருந்தால் நல்லது என்று இன்று நாம் நினைத்தால் சில வருடங்களில் அது பாவனைக்கு வந்துவிடும். இவ்வாறு இத்தனை வசதிகளும் இருக்கும்போது எனக்கொரு துணை தேட நான் ஏன் முனையவேண்டும். என்று நினைத்த கரன், வீட்டில் இருப்பதற்கு விரும்புவதில்லை. முடியுமான பொழுதுகளில் வெளியே சென்று வருவான். தன் சிந்தனையின் மூலம் இறுதியாக ஒரு முடிவு கண்டான். இயற்கைக் கால்கள் இழந்தவர்கள் தமது சொந்தக்காலில் நடப்பது போல் நடப்பதற்கு ஜெய்ப்பூரில் தயாராகும் கால்களைத் தெரிந்து வைத்திருந்த கரன், அக் கால் ஒன்றைத் தான் பெற்று நடமாடத் துணிந்தான். காலத்தை வென்று வாழ மனிதன் முயற்சிப்பது தானே இவ்வுலகத்தின் வளர்ச்சி. இல்லை என்று உலகில் எதுவுமில்லை. உள்ளதனைத்தும் கொண்டே உயர்வது மனிதன் கொள்கை. கால்கள் ஒன்றும் காட்டில் மரமாய் நிற்கவில்லை தறித்துக் கொண்டு வருவதற்கு.

            திடீரெனக் கரன் மூளைக்குள் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. சிறகடிக்கும் கடதாசிகள் ஒரு அட்டைக்குள் அடங்கிக் கிடந்தன. அவன் பார்வை பட்டு அதிலொன்று விடுதலையானது. அதன்மேல் தலைகுனிந்த பேனா விரல்கள் இடுக்கில் அடங்கிக் கொண்டு வரிகளை வரைந்தன.

 அன்புடையீர்.

 என் கால்களில் ஒன்று சர்க்கரை வியாதி காரணமாக அகற்றப்பட்டுவிட்டது. இரண்டு கால்களும் இல்லாத நிலையில் என்னால் நடப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. கால்கள் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜெய்ப்பூர் என்னும் இடத்தில் செயற்கைக்கால்கள் பொருத்துவது பற்றி அறிந்தேன். அங்கு சென்று எனக்குச் செயற்கைக்கால் பொருத்துவதற்கு பணம் தேவையாக உள்ளது. அதற்குத் தேவையான அளவு பணம் என்னிடம் இல்லாத காரணத்தினால் தயவுகூர்ந்து உங்களால் முடிந்த உதவியை எனக்குச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

                            இந்த உதவியை என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்

 நன்றி

அன்புடன்

த. கரன்

               காலிழந்த தனக்குக் கரம் கொடுப்பார்கள் என்று நம்பிய சிலரிடம் கரன் வீடுதேடிச் சென்று இக்கடிதத்தைக் காட்டினான். பரிதாபப்படும் சில நல்ல உள்ளங்கள் தம்மால் முடிந்த தொகையைக் குறிப்பிட்டுக் கரன் மீண்டும் மகிழ்வுடன் நடமாடப் பணவுதவியைச் செய்தார்கள். ஆண்டவன் நேரில் வருவதில்லை. மனிதர்கள் வடிவில் உலகில் கண்முன்னே நடமாடுகின்றார். இவ்வாறான உள்ளங்கள் பல சந்தர்ப்பங்களில் இலகுவில் ஏமாந்துவிடுவதும் உண்டு. ஆயினும் வாழ்க்கையில் ஆயிரம் முகங்கள் எண்ணற்ற குணங்களுடன் எம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களை நாளும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

         பணத்தைச் சேகரித்த கரன் ஜெய்ப்பூர் செல்லவில்லை. திரும்பவும் மருத்துவக்கப்புறுதி நிறுவனத்திடமே தஞ்சமடைந்தான். தான் செயற்கைக்கால் பொருத்த விரும்புவதாகவும் அதற்கான உதவிகளைச் செய்யும்படியும் கேட்டான். அவர்களும் அதற்கு உடன்பட்டு செயற்கைக்கால் பொருத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் முழுத்தொகையையும் அவர்களால் வழங்கமுடியாது எனவும் ஒருசிறிய தொகை கரன் செலவு செய்யவேண்டும் எனவும் கூறினர். உடன்பட்ட கரன் இழந்த காலுக்குப் பதிலாக மீண்டும் அதே வடிவில் செயற்கையாய் ஒரு கால் வந்து அமர்ந்து கொண்டது.

            இயற்கையை வெல்ல மனிதன் போட்டாபோட்டி போடுகின்றான். இதயத்தை மாற்றுகிறான். இரத்தத்தை மாற்றுகிறான். முகத்தின் தோற்றத்தை மாற்றுகிறான். உடல் உறுப்புக்களை மாற்றித் தேவை கருதி தானம் செய்த உறுப்புக்களுடன் வாழ்கின்றான். இளமையை மீட்க ஆராய்வுகள் மேற்கொண்டு பலனும் கண்டான். ஒரு மனிதனைப் போல் இன்னும் ஒரு மனிதனைக் குளோனிங் முறையில் உருவாக்குகின்றான். ஆயினும் மரணத்தை வெல்ல மனிதனால் இன்னும் முடியவில்லை. ஆனால், அவ் அதிசயமும் நடந்து விடுமோவென நம்பிக்கை கொள்ள வைக்க விஞ்ஞானம் முயற்சி மேற்கொள்கிறது.

          முதன்முதல் நடைபயிலும் குழந்தைபோல் செயற்கைக் கால் பூட்டிய கரனுக்கு அக்காலுடன் நடப்பதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பலனும் கிடைத்தது. ஆனால் உடலினுள் ஓடும் இரத்தம் சுத்தமாய் இருந்தால் சுகம் செய்யும். அசுத்தமானால் உடலை அழித்துவிடுவது அசைக்கமுடியாத  உண்மையல்லவா. கரன் இரத்தத்துடன் இணைந்தே ஓடிய மதுபானம் இத்தத்தின் சுத்தத்தைச் சூறையாடிவிட்டது. அல்ககோல் மருந்துகளிலும் சேர்க்கின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் மருந்தை விருந்தாய் அருந்தலாமா? உடலுக்குள்ளே தன் அத்துமீறிய தொழிலை மதுபானம் காட்டத் தொடங்கியது. கரன் உடலும் தோலால் போர்த்தப்பட்ட நோய்க்கிருமிகளின் தொழிற்சாலையானது. பழுதுபட்ட இயந்திரங்களைத் தாங்கும் பேழையானது. இப்போது கரன் வாழ்வு தர்மசேத்திர காலகட்டத்தை அடைந்தது. இது அதர்மத்தில் இருந்து தர்மம் நோக்கித் திரும்பும் காலம். தீராத நோய் கண்ட காலங்களில் மனிதர்களால் தவறான பழக்கவழக்கங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படுகின்றன. கரன் மனதில் தவறுகள் மின்னல்கள் போல் தெறித்தன. அதனால் வாழும் காலம் அனைத்தும் நல்லதே நினைக்கவும் செய்யவும் துணிந்தான். ஆயினும் உள்ளத்துக்குள்ளே தவிப்பு அவ்வப்போது செட்டைகட்டிப் பறக்கத் தொடங்கியது.

    பிட்ஸாப் பெட்டிகளைக் கையிலே தாங்கி வந்த மகனை கரன் அழைத்தான்.

 “எங்கே வரன் போய் வருகிறாய்? கொஞ்சம் அப்பாக்குப் பக்கத்தில் வருகிறாயா?

 “அம்மாக்குச் சுகமில்லையப்பா. அவ சமைக்கல்ல. அதுதான் பிட்ஸா வாங்கிவந்தேன். இதை வச்சிட்டு வாறன் அப்பா”

 “ஒரே வீட்டில் இருக்கும் மனைவி உடல்நிலை சரியில்லாது இருக்கின்றாள். அதுகூடத் தெரியாது நான் இங்கு குத்துக்கல் மாதிரி இருக்கிறேன். இப்படி ஒரு வாழ்க்கை தேவையா….” என்று மனதுள் நினைத்த கரன் பக்கத்தில் வந்து அமர்ந்த மகனின் மேற்கால்களில் தட்டியபடி.

 “வரன். அப்பாக்கு உடம்பு முடியல்ல. மதியை யார் வேண்டுமானாலும் வெல்லலாம். விதியை வெல்ல யாராலும் முடியாது. எப்போது என் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கப் போகிறதோ தெரியல மகன். நான் பிறந்த மண்ணைப் பார்த்து வரவேண்டும்போல எனக்கு மனஏக்கமாய் இருக்கு. என்னதான் இந்தநாடு சுகங்களை எல்லாம் எங்களுக்குச் செய்தாலும் நான் கால்பதித்து நடந்த பூமி. எனக்குள் ஆதாரசக்தியைத் தந்த மண். என் தாய் என்னைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடிய தேசம் என் மனதுள் மாங்காய் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழுகின்ற நாடு ஒரு மனிதனுக்கு வசதியைத் தரலாம். அந்தஸ்தை உயர்த்தலாம். ஆனால் தாய்நாடு தாய்க்கு நிகரானது. அந்த மண்ணை ஒரு தடவை என் கால் தொட்டு என் வரவை அதற்கு உணர்த்தவேண்டும். எனது மனிதப்பிறப்பு இத்துடன் முடிவுற்றால் என் நாட்டை என் ஒரு கால் தொடமாட்டாது போன ஏமாற்றம் என் ஆத்மாவிற்கு தீராத ஏக்கமாய்ப் போய்விடும்”  சிறைப்பட்டு நின்ற கண்ணீர் கரனுக்கு வெளிப்பட்டது.

 “ஏனப்பா இப்படிக் கதைக்கிறீங்கள்…. எனக்கு உங்களின் பாசம் போல் ஒரு பாசம் கிடைக்குமா அப்பா… நீங்கள் இரண்டுபேரும் என்னதான் பிரச்சினைப்பட்டாலும் என்னில் எந்தவித பாதிப்பையும் காட்டவில்லையே. உங்களுக்குக் காலில்லாத வேதனையை விட நீங்கள் என்னைவிட்டிற்று இலங்கைக்குப் போற பிரிவுதான் என்னால தாங்கமுடியல்ல. ஒருமுறை போய் நடந்தவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே. வேண்டாம் அப்பா…..” தன் மறுப்பை ஆறுதலாகவும் ஆழமாகவும் தெரிவித்தான் வரன்.

                                          பொதுவாகவே இவ்வாறான குடும்பங்களில் வளருகின்ற குழந்தைகள் தறுதலையாகப் போவார்கள் என்பதே மனநிலை வைத்தியர்கள் முடிவு. ஆனால் வரனோ மிதிக்கும் புல்லுக்கு நோ வந்துவிடுமே என்று கலங்குகின்ற மனம் உள்ளவன். கட்டுப்பாட்டைத் தனக்குத்தானே விதித்துக் கொண்டு அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அன்பான இதயம் படைத்த ஆண்மகன். ஐரோப்பியநாடுகளில் சுதந்திரம் சொர்க்கம் என்று கருதி தம் வாழ்க்கையைத் தவறான பொழுதுபோக்குகளுக்கு அடிமையாக்கி வாழ்வைச் சீரழிக்கும் இளந்தலைமுறையினர் அதிகம். பெற்றோரைக் குருடர்களாக்கி தம் அகக்கண்களைக் குருடாக்கி வாழ்க்கையைத் தவறான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எதிர்காலத் தலைமுறையினர் அதிகம். இந்தநாடு சுதந்திரத்தை அளவுக்கு அதிகமாகத் தந்திருக்கிறது. ஆனாலும் 18 வயதுவரை கல்வியைக் கற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் வைத்திருக்கின்றது. இதனால் கொதிநீரில் கால் வைத்தபின் எப்படியும் வெளியே வந்துவிடவேண்டும் என்று துடிப்போர்போல் 18 வயதுகடந்தபின் பாடசாலைப் படிப்பை விட்டு வெளியே வந்து தொழிற்கல்வியை மேற்கொள்வோர் அதிகம். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்து மேற்கல்வி மேற்கொண்டு நல்ல நிலையில் வளருகின்ற எமது இளந்தலைமுறையினரும் ஜேர்மனியில் இருக்கின்றார்கள்.

                             வரனோ பிள்ளைப்பருவத்தில் கூடவே இருந்து குறிப்பான  காலப்பகுதியில் பராமரிக்க பெற்றோர்கள் இன்றி வளர்ந்த காரணத்தினால் பாடசாலைக்கல்வியை ஓகோ என்று சொல்லும் அளவிற்கு வளர்க்க முடியவில்லை. தான் இழந்த குழந்தைப்பருவ சுகங்களைப் பிறர் குழந்தைகளில் காணும் உள் மனத் தூண்டல் காரணமாக பாலர்பாடசாலை ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டான். குழந்தைக் குறும்புகளைக் கண்டுகழித்தான். தானும் ஒரு குழந்தையாய் மாறி பாலர்பாடசாலையில் தன் மேற்கல்வியை மேற்கொண்டான். அவன் இதயம் பெற்றோர் அன்புக்காக ஏங்கும் இதயம் அல்லவா. தந்தை இலங்கை சென்றால் மீண்டும் பிரிவுத் துயர் தன்னை வாட்டும் என்று புரிந்த இளைஞன் அல்லவா. தந்தையின் இலங்கைப் பயணத்தை மறுத்தான். தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான். ஆனால் கரனோ

      “வரன்! நான் அங்க போய் தங்கிவிடவா போறன். என்னோட சொந்தக்காரர்களை எல்லாம் ஒருதடவை பார்த்துவிட்டுத் திரும்பவரத்தானே போறன். கொஞ்சநாளைக்கு அந்தக் காற்றைச் சுவாசிப்பேன். அந்த மணலில் புரண்டு எழுவேன். அந்தச் சூரியனின் கதிர்களை என் வெற்று உடம்பினால் உடைப்பேன். ஒரு காலால் இலங்கை மண்ணைத் தட்டித்தட்டி ஒத்தடம் கொடுப்பேன். உறவினர் மனதுக்குள் நுழைந்து திரும்புவேன், தியேட்டருக்குள் சென்று படம் பார்த்து மூட்டைப்பூச்சிகளுக்கு இரத்ததானம் வழங்குவேன். பள்ளிவாசலிலே நாசிசோறு உண்பேன். பொடிமெனிக்கா வீட்டில் பாற்சோறும் கட்டச்சம்பலும் உண்பேன். விகாரையிலே தாமரைப்பூ வைத்து வணங்குவேன். கோயில் குளத்திலே மூழ்கி எழுவேன். சின்னத்தம்பிப் படத்துப் பிரபுபோல் ஏரியிலே குளிப்பேன். அநாதைப்பிள்ளைகளைப் பார்த்து நம்பிக்கை விதைத்து வருவேன். மாமரநிழலிலே ஆறுதலாய் அமர்ந்திருந்து கறுத்தக் கொழும்பான் மாம்பழம் கடித்துத் தின்பேன். நீண்டிருக்கும் பனைக்கு என்னை நிறுத்திய காலை எடுத்துக்காட்டுவேன். பழஞ்சோற்றுக் கஞ்சியிலே ஊறுகாய் சேர்த்தெடுத்து வாசற்கட்டிலே அமர்ந்து காற்று வாங்கி கஞ்சி குடிப்பேன். இப்படி எத்தனையோ ஆசைகள் எனக்குள் இருக்கு. இறுதியில் அந்தமண் என்னை ஏற்றுக் கொண்டால், அம்மண்ணுக்கு உரமாவேன். இல்லையென்றால், உங்களைத் திரும்பவும் வந்துகாண்பேன்” மூச்சுவிடாமல் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆசைகளை முழுவதுமாகச் சொல்லிமுடித்தான்.

             தந்தையின் ஆசைகளை ரசித்துக்கேட்டான் வரன். “ம்ஹ்…..” என்றபடி அறைக்குள் இருந்து சிரித்துக் கொண்டாள் வரதேவி.

 “அப்பா! நீங்கள் இலங்கை போவது எனக்கென்றால் விருப்பமில்லை. இந்தக் காலோட தனியே போய்க் கஷ்டப்படப் போறீங்கள்..”

“கஷ்டமா….ஹா…..ஹா….” என்று பலத்துச் சிரித்தான். “இதையெல்லாம் தாண்டிவிட்டேன் மகன்”

 அக்கதை அப்படியே இருக்க மூவரும் பிட்ஸாவை உண்டனர். மகனும் தன் அறை சென்று விட இருளும் சேர்ந்து கொள்ள இரவு கழிந்தது. நாளொன்று அன்றைய நாள் நிகழ்வுகளை மூட்டை கட்டிக் கொண்டு சென்றுவிட்டது. அடுத்தநளும் அன்றையநாள் நிகழ்வுகளை மூட்டை கட்டிக் கொண்டு வந்துவிட்டது. காலை பாடசாலைக்கு வரதேவி அறியுமுன்னே பஸ் ஏறிவிட்டான் வரன். சூரியன் விளக்கெரிக்க கண்திறந்தள் வரதேவி. எழுந்தவுடன் வானொலி காதில் நுழைதல் நாள் தொடக்க நிகழ்வு. தொடர் காரியங்கள் தொடர்ந்தது. கரன் வீட்டிலா வெளியிலா இதுபற்றி அவளுக்கென்ன கவலை. அவன் சொல்லிக் கொண்டு போவதும் இல்லை. அவள் சொல்லச் சொல்லிக் கேட்பதும் இல்லை. ஆனால் கரன் வீட்டில் இல்லை. இது ஒன்றும் வரதேவிக்குப் புதுமையுமில்லை. சிலநாள்கள்  வீட்டில் தங்குவான். சில நாள்கள் வெளியில் நண்பர்கள் வீட்டில் தங்குவான். சொந்தவீட்டிலும் அவன் ஒரு விருந்தாளிபோல்த்தானே.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.