Part13

                                                                                       z

கால ஓட்டத்தில் விடுதலையாகிய கரன் நாடு திரும்பினான். உருமாறிய தன் வீட்டின் அலங்கோலங் கண்டான். நிற்காத கதிரைகளும் நிலத்தில் படுத்திருந்த படுக்கைகளும் வெட்டப்பட்ட மெத்தைகளும் கண்டு அதிர்ச்சியுற்றான். அயலவரின் அலசலின் பின் மனைவி மகன் வாழும் இடம் கண்டறிந்தான்.

              அவசரஅவசரமாக மருத்துவமனை வந்தடைந்தான். வைத்தியரிடம் விபரம் அறிந்தான்.

   “கரன்! உங்கள் மனைவிக்கு மனநிலை நன்றாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவர் என்ன செய்கின்றார் என்றே அவருக்குத் தெரியாது. சில சமயங்களில் திருத்தமான வேலை இருக்கும். ஆனால், அது எப்படிச் செய்யப்பட்டது என்பது புரியாதவளாய்க் காணப்படுவாள். இப்போது அவள் குழந்தை. உங்கள் ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவளைக் கவனிக்க முடியும் என்றால் மாத்திரமே அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்ல அநுமதி தருவேன். இல்லையென்றால் இங்கேயே இருக்கட்டும். என்ன சொல்லுகின்றீர்கள்? டொக்டர் பேச்சில் அக்கறை தெரிந்தது.

  “நான் அழைத்துச் செல்லுகிறேன் டொக்டர். நான் கவனமாகப் பார்த்துக் கொள்ளுகிறேன். இப்போது நான் திரும்ப வந்திருப்பது. அவக்கு ஒரு துணையாக இருக்கும். பழைய நிலைக்கு அவ திரும்புவா என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது டொக்டர்!

என்று ஆணித்தரமாகத் தன் நம்பிக்கையை வைத்தான் கரன். விதி செய்த கோலமோ? தன் விபரீத ஆசையின் விளையாட்டோ? பாடாய்ப்படுத்தும் காலத்தின் கோலத்தைக் கலைத்துவிடத்தான் முடியுமா? சில்லுப்பூட்டி காலம் ஓடுகிற ஓட்டத்திற்குச் சேர்ந்துதான் ஓடவேண்டும்.

        வரதேவி தங்கியிருந்த அறைக்குள் சென்றான். வரதேவியின் பொலிவிழந்த வதனம் கண்டு நெஞ்சம் உடைந்து போனான். ஆயிரம் அம்புகள் பாய்ச்சப்பட்டு பிய்ந்து போன அங்கங்கள் கொண்டு அவள் அருகே சென்றான்.  அவள் கரங்களை இறுகப்பற்றிக் கொண்டான். காந்தல் விரல்கள் களையிழந்து நரம்பு தள்ளிக் காட்சியளித்தன. கண்கள் இரண்டும் குவளையினுள் வைக்கப்பட்டது போலிருந்தன. உடல் காய்ந்து அழுக்கேறிய பாத்திரமாய் தோற்றமளித்தது. நெற்றிக் குங்குமம் அவள் நெற்றியிலிருந்து ஓய்வுபெற்றிருந்தது. ஒட்டிய உடலிலே அணிந்த ஆடை அவளைத் தொட்டுக் கொள்ளாமல் கிடந்தது. புழுதிபட்ட கிற்றார் போல் தன் மனைவியின் இத்தனை தோற்றங்களும் கண்ட அவன் கண்களிலிருந்து நெஞ்சம் உருகி கண்ணீராய்க் கன்னங்களில் வரிபோட்டது. அவளை அன்புருக அணைத்தான். அருகே அமர்ந்து தலைகோதினான்.

 “வரா! என்னைத் தெரியுதே? உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டு தனிமைப்படுத்தி தவிக்க விட்டிருக்கிறேனே…. இஞ்ச பாரம்மா…. வா… வீட்டிற்குப் போவோம்”  என்று அன்புருகக் கூறினான்.

 வரதேவியோ எதுவித சலனமுமின்றி கரன் கரங்கள் பட்ட ஸ்பரிசத்தில் உள்ளம் நெகிழ்ந்து போனாள். ஒரு ஆதரவுக்கரம் தன்னை அணைப்பதில் இன்பம் கொண்டாள். ஆண்டவனே தன்னை அணைத்தெடுப்பதாய் மனதிற்குள் மகிழ்ச்சி கொண்டாள். இதுவே பந்தபாசம் என்பார்களோ! கட்டிப்பிடி வைத்தியம் என்பார்களோ! கரங்களினூடு பாய்ச்சப்படும் அன்பு அலைகள் என்பார்களோ! எதுவாக இருந்தாலும் இவ்வைத்தியம் வரதேவிக்குச் சுகமானதே.

 “இன்றைக்கும் இடுப்பிலேயே ஊசி…… ஊசி குத்திக்குத்தி இடுப்பெல்லாம் புண்ணாப் போச்சு. என்னால முடியல…”என்று சிணுங்கினாள்.

 “உன் நன்மைக்குத்தானே செய்தார்கள். சரி…..சரி…… நான் வந்திட்டன் அல்லவா. உனக்கு இனி எதுவுமே தேவையில்லை. வீட்டிற்குப் போவோம்”

 என்றபடி அவள் உடைமைகளை எடுத்து ஒழுங்குபடுத்தினான். மருத்துவமனைத் தாதியிடம் வரதேவிக்கான மருந்துகளைப் பெற்றுக் கொண்டான். அடுத்த நோய்க்கட்டுப்பாட்டுப் பரிசோதனைக்கான நாளையும் குறித்துக் கொண்டான்.  அந்நாளுக்கு வரதேவி மருத்துவமனைக்கு வர வேண்டியது கட்டாயமாகிறது.  அந்தநாள் வசதியில்லை என்றால், வேறு ஒருநாள் முன்னறிவித்தல் செய்துவிட்டுப் வரதேவி மருத்துவமனைக்குப் போகவேண்டியது மருத்துவமனைக் கட்டளையாகிறது. சில கடினமான நோயாளிகள் இந்நாளுக்குச் செல்லாதுவிட்டால், மருத்துவமனையே வாகனம் அனுப்பி வரவழைத்துவிடும். அதற்கும் தவறினால், தற்கொலை முயற்சி என்று முடிவு எடுத்துவிடும். பின் அதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை நோயாளிக்கு ஏற்படும். எனவே அக்கறையுடன் பெறவேண்டிய பத்திரங்களை பெற்றுக்கொண்டு வரதேவியை அழைத்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வரன் வீட்டிற்கு வந்தான்.

                              மாற்றுத் தாயிடம் வளர்ந்த மகனைத் தன் சொந்தத் தாயுடன் கரன் இணைத்தான். ஆனால் தன் கணவனையே அடையாளம் காணமுடியாத  நிலையில் வரதேவி. வரதேவி வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டிருந்த வேளை அரசாங்க உதவியுடன் வரதேவி வீட்டைத் துப்பரவு செய்வதற்காகவும் வரதேவியைப் பராமரிப்பதற்காகவும் வந்து போன எமல் அழகாக வரதேவியால் அடித்து நொறுக்கப்படாது புதிதாய் இருந்த சோபாவைத் தன் மனைக்குச் சொந்தமாக்கி விட்டு அந்த இடத்தில் பழைய ஒரு சோபாவைப் போட்டிருந்த விடயம் வீட்டிற்கு வந்த பின்தான் உணரக்கூடியதாக இருந்தது. யாரைத்தான் நம்புவதோ இவ்வுலகில்? மகன் போல் இருப்பான். மானத்தைக் கவர நினைப்பான். உயிராய் பழகுவார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார். நல்லவராய் நடிப்பார். உண்மைக் கதை தெரிந்தும் நாலு பேருக்கு நயவஞ்சகமாய் உரைப்பார். தற்போது புத்தியில் அவள் மத்திமம் என்று அறிந்திருந்தும் அவள் நிலை புரிந்துரைக்காது இகழ்ந்துரைப்பார். இப்படி எத்தனையோ கதாபாத்திரங்கள் அவளோடு வந்து உறவாடின.

                  தன் மனைவி நிலைக்குக் காரணகர்த்தா தானே என்று முழுவதுமாக உணர்ந்த கரன் சமையல் முதல் அனைத்துக் கடமைகளையும் பொறுப்பேற்றான். அடிக்கடி வந்துபோகும் வரதேவி அத்துமீறிய அடக்கவொண்ணா காரியங்கள் கண்டு பொறுமை இழப்பான். பாடலும் பரிவும் மகிழ்வும் குதித்து விளையாடிய வீட்டில் சாத்தான் குடிகொண்டுவிட்ட நிலை கண்டு அவன் நெஞ்சில் வேதனை குடிகொண்டது. விரக்தியின்  விளிம்பில் வீட்டைவிட்டு அடிக்கடி வெளியேறுவான். வீட்டில் இருந்து மனைவியின் அட்டகாசங்களைக் காண்பதற்கும் பொறுப்பதற்கும் அவன் ஒன்றும் மகாத்மா இல்லையே. சாதாரண ஒரு மனிதன் பொறுமையும் எல்லையைத் தாண்டும் அல்லவா… தன் சோகத்தை மறக்கத் தோழர்கள் துணை நாடினான். மதுவைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.

                 சிலவேளை சிறப்பான பெண்ணாகவும் சிலவேளை கொதித்தெழும் பெண்ணாகவும் நேரம் ஒரு நிறம் காட்டும் வரதேவி பழைய வரதேவியாய் உருமாறும் போது அன்பான கரன் மனைவியாய் அனைத்துக் கடமைகளையும் செய்வாள். திடீரென ஆக்ரோஷம் கொண்டு செய்வது என்னவென்றே தெரியாது பேயாட்டம் ஆடுவாள்.

          வந்தது வியாதி.

          வாட்டுது அவள் உடலை

          சொந்தக் கணவன் புரியணும்

          அவளால் சொல்லமுடியாத

          உளஉழைச்சலை.

          வல்ல இந்நோய் வந்ததற்கு

          வளமான காரணம் நானுமேயெனெ

          நல்ல கணவனாகில் புரியணும் – அவன்

          வலிந்து பொறுமையை மேற்கொள்ளணும்.

                     குடும்ப வாழ்க்கை என்பது கண்ணாடிப்பாத்திரம் போல் பேணிப்பாதுகாக்க வேண்டியது. அத்தனை உறுப்பினரும் அவதானமாக அதனைப்  பயன்படுத்தாவிட்டால் கண்ணாடி வாழ்க்கை உடைந்து சுக்குநூறாகிவிடும். அதனாலேயே இல்லறத்தை நீள்கடலுக்குள் பயணம் செய்யும் படகுக்கு ஒப்பிடுவார்கள். துடுப்புக்கள் இரண்டின் துடிப்பும் சீராய் இராது போனால், படகில் பயணம் செய்வது எப்படிச் சாத்தியமாகும். வாழப்படுதலே வாழ்க்கை. அவ்வாழ்க்கை எப்படியோ வாழ்ந்து விடுவதற்கானதல்ல. அதை நரகமாக்குவதும் சொர்க்கமாக்குவதும் வாழுகின்ற முறையிற்தான் தங்கியிருக்கிறது. சட்டரீதியாய் அத்தாட்சிப்பத்திரம் பெற்று உறவு சொல்ல ஒரு பிள்ளையைப் பெறுதல் மாத்திரம் குடும்ப வாழ்க்கையல்ல. அன்புத் தொடர்பு ஆக்கிரமித்து இருத்தல் வேண்டும். இது உடல், உள்ளம், ஆன்மீக வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு ஏற்படுத்தும் ஆழமான உறவாகும். போதைக்கு அடிமையாகிய மனிதனால் குடும்ப வாழ்க்கை வேதனைப்படுகிறது சமுதாய வாழ்க்கை சஞ்சலப்படுகிறது. பணம், சொத்து, அந்தஸ்து போன்றவையே குடும்ப சக்தி என நினைத்து அன்புள்ள உறவுகளை மனிதன் மறந்து விடுகின்றான்.

               நண்பர்கள் வருகையின் போது மாத்திரம் ஏதாவது சிற்றுணவாய்க் கடிக்கவும் குடிக்கவும் பயன்பட்ட பழக்கம் நாளுக்குநாள் உற்ற தோழனாய், உற்சாக பானமாய் உடலுள் சென்று தீவிர உணர்வுடன் தீவிரமாய்த் தொழிற்பட்டு அன்புக்கு விரோதியானது. நீரோடும் உடல் வேண்டும். நீரோடு வாழ வேண்டும். அந்நீரோடு மது சேர்ந்தோடினால், நரகவோட்டம் நெருங்கிவிடும்.  உளநெருக்கடி கண்டுவிடும்.

               அன்று அளவுக்கு மீறிய குடிபோதையில் கரன் கத்தி எடுத்தான். கத்தி என்றால், வெட்டும் என்று அறிந்திருந்தும் தீட்டிய கத்தியில் கூர்பரிசோதனை செய்யத் துணிந்தான்.

 “விடுங்கோ! உங்களுக்கென்ன விசரே பிடிச்சிருக்கு. விடுங்கோ கத்தியை விடுங்கோ’’ வரதேவி போராட்டமானது புனிதம் இழந்த அவன் போக்கால் தோல்வி கண்டது.

 “கிட்டே வந்தீயென்றால் வெட்டிப் போடுவன்….. தள்ளிப் போ….. ”உத்தரவிட்டான்.

 தனது கையைக் கத்தியால் சீவி எடுத்தான். கையிலிருந்த வடிந்த இரத்தத்தைப் பார்த்து “ஹா….ஹா…..ஹா…..” என்று ஒரு கோரச்சிரிப்புச் சிரித்தான். பாதங்களால் பரதம் ஆடினான். 5 விரல்களால் குருதியை அள்ளி எடுத்தான். வீட்டுச்சுவரிலே அச்சடித்தான். விரல் ஓவியங்கள் குருதிக்கலவையில் விசித்திரமாய்த் தோன்றின.

 “உன்னால் மட்டுமே உத்தரதாண்டவம் ஆடமுடியுமா? இப்போது பார் நானும் ஆடிக்காட்டிறன்…. பார். நீ பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு. மயிலின் சாயல் குயிலின் குரல், புறாவின் மென்மை, தேனின் இனிமை கூட்டிக் குழைத்து அதோடு கொஞ்சம் நல்ல பாம்பின் விஷத்தையும் கலந்தால், அதுதான் நீ….”  என்று  பாரசீக மொழியிலுள்ள ஒரு வாசகத்தை வரதேவிக்கு ஒப்பிட்டான். என் மகாராணி, என் இராச்சியத்து இராணி என்றெல்லாம் கரனால் வர்ணிக்கப்பட்ட வரதேவி இன்று கரனால் வசைமொழியால் வையப்பட்டாள். இதுதான் மனிதமனமா? நரம்பில்லா நாவால் வளைத்து வளைத்துப் பேசும். வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும். சொர்க்கம் காட்டுவதாய் சொல்லி நரகத்தை சொந்தமாய் வாங்கிக் கொடுக்கும்.

                அவள் அசையவில்லை கண்கள் இமைக்கவில்லை, விறைத்த பார்வையில் விடுபடவில்லை. முதலுதவி செய்ய முன்வரவில்லை. அவள் இரக்கமுள்ளவள். ஆனால்  இரக்கமற்ற விலங்குகளிடம் அவ் இரக்கம் துடிப்படைய மாட்டாது. அவள் பாசமுள்ளவள். ஆனால், பண்பில்லாதவர்களிடம் அது அடிபணிய மாட்டாது. வெட்டியவனே கட்டுப் போட்டான். பின் மருத்துவரிடம் சென்றான். எப்படிப்பட்டவனானாலும் காயம் மாற்ற மருத்துவர்கள் தயங்காது தொழிற்படல் மருத்துவதர்மம் அல்லவா. அதனால், பிழைத்துப் போனான்.

                 நாளுக்குநாள் வீட்டில் பேயாட்டம். அடித்து நொறுக்கும்  கண்ணாடிப் பாத்திரங்களே நாளும் அவ்வீட்டில் ஒலிக்கும் இசைக்கச்சேரி. குருதிவாடையே அவ்வீட்;டின சாம்பிராணி வாசனை. அவன் எறியும் பாத்திரங்களுக்கு எதிர் பாத்திரம் வரதேவி விட்டெறியும் கண்ணாடிப் பாத்திரங்கள். அவனுக்கு அவள் பயந்தவளல்ல. அவளை அவன் வெருட்டுகின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளாலும் வரதேவிக்கு அவன் மேல் இருந்த வெறுப்பு பன்மடங்காகியது. ஒரு வீட்டிற்குள் சிங்கமும் புலியும் கணவன் மனைவியாய் சேர்ந்து குடித்தனம் நடத்தின.

          “எப்படியெல்லாம் வாழவேண்டும் என்றிருந்தேனே என்னைக் கொண்டு புதைகுழியில் தள்ளிவிட்டாயே…. என்ர வாழ்க்கையைக் கெடுத்துவிட்டாயே….. நல்லவனாய் நடித்து நயவஞ்சகனாய் வாழ்கிறாயே. இன்று சொல்கிறேன் கேட்டுக்கொள். இன்றிலிருந்து என் கணவன் என்னும் இடத்திலிருந்து உன்னை எரித்துவிடுகிறேன். நீயும் நானும் இந்த வீட்டில் பாம்பும் கீரியுமே. நீ அன்பு என்று சொல்லிக் கொண்டு நான் வாழும் வரை என்னிடம் நெருங்கக் கூடாது. உனக்கும் எனக்கும் உள்ள உறவு அத்துப்போய்விட்டது. நோய் என்று படுத்தாலும் என் உயிர்தான் போனாலும் உரிமை என்று சொல்லி என் அருகிலே வந்துவிடாதே. ஆனால், உன்னோடுதான் வாழ்வேன். உனக்கு உரிமை இல்லாது வாழ்வேன். என் சுகங்களைக் கண்டு இன்பம் அடையவோ என் துக்கத்தைக் கண்டு கவலை கொள்ளவோ நீ தேவையில்லை. இன்றிலிருந்து நான் வரதேவி கரன் இல்லை. நன்றாக மனதில் வைத்துக்கொள் நான் வரதேவி வரதராஜன். என் தந்தையின் பெயரையே மீண்டும் இணைத்துக் கொள்ளுகிறேன். இதைவிட கேவலம் உனக்குத் தேவையா? நீ உயிரோடு இருக்கும் போதே உன்னைக் கைகழுவி விட்டேன்”

 இத்தனையும் பேசிவிட்டாள். ஆனால் எப்படிப் பேசினாள் என்றுதான் அவள் உணரவில்லை. இப்போதெல்லாம் அவள் வார்த்தைக்குள்ள வலிமை உடலுக்கு இல்லை. களைந்த கேசமும் கண்ணீர் வடிந்த வதனமும் அவளுக்கு நிரந்தரமாகியது. தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

             கரனோ அரைப்பார்வையில் அரைப்பேச்சு ஏறி மிகுதிப்பேச்சு வெளியேறிக் கால்கள் இரண்டும் விரிந்துகிடக்க சோபாவில் மல்லாந்து கிடந்தான்.

            இத்தனை சமர் வீட்டிலே நடக்கிறது. நான்கு சுவருக்குள்ளே சின்னப் பையன் இதயம் உடைந்த போனது. பயங்கர மிருகங்களிடையே அகப்பட்ட சின்னப் பூனை போல் வரன் உடல் நெளிந்து நெளிந்து ஒளிந்து அமர்ந்திருந்தான். சுற்றவர போராட்டம். சுவர்களிலே இரத்தச்சித்திரங்கள். இவ்வாறான பெற்றோரின் போராட்டத்தில் பிள்ளை வாழ்வு சின்னாபின்னமாவது ஒன்றும் புதுமையில்லையே. அவன் கண்களோ நடக்கும் சம்பவங்களை வீடியோ எடுத்து மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தது. தாயிடம் வரத் தயங்கினான்ளூ தந்தையிடம் பேசத் தயங்கினான்ளூ உறக்கத்தில் விழித்தெழுந்தான் நண்பர்களுடன் உறவாட மறந்தான் கற்பதொன்றும் மனதில் பதியவில்லை. எங்கும் மௌனம் எதிலும் மௌனம்.

           தம் இரத்தம் தம்மால் உயிர் கொடுக்கப்பட்ட ஒரு ஜீவன் தாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அத்தாட்சி. இன்று பயந்து ஒதுங்கி ஓரிடத்தில் இருப்பதை இந்த இரண்டு மனங்களும் உணர்ந்து பார்க்கவி;ல்லை. வரனின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அவர்கள் மனங்களுக்கு எட்டவில்லை. “கல்லினுள் தேரைக்கும் கருப்பைக்குள் முட்டைக்கும் விருப்புற்று அமுதளிக்கும் ஈசன் உருப்பெற்றால் ஊட்டி வளர்க்க மாட்டானோ” என்பதுபோல் உயிரொன்று உருவானால் அது உலகினிலே நடமாட வழிதான் இல்லையா? எத்தனையோ  வழிகள் இருக்கின்றன. ஜேர்மனியிலே பிள்ளைகள் வளர்வது ஒன்றும் பெரியவிடயமல்ல. அதை நினைத்துத்தானே வரதேவி வரனை பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில்(Jugendamt) விட்டு வளர்த்தாள். ஆனால் நான் பார்த்துக் கொள்வேன் என்று கரன் அழைத்துவந்து இப்போது சொல் மறந்து நிற்கும்நிலை வரனின் எதிகாலத்தைப் பாழடிப்பதாக இருந்தது.

          கணவன் மிருகமானால் ஒதுங்கிப்பதுங்கி வாழும் அப்பாவியான ஒரு பெண் எப்படி வாழ வேண்டும். தீமையைத் தட்டிக் கேட்கும் தீவிரவாதியாகவோ அதட்டலுக்கோ மிரட்டலுக்கோ அடிபணியாத மனத் தைரியம் மிக்கவளாகவோ வாழ்ந்தால் அவள் வாழ்வு ‘குரங்கின் கைப்பூமாலையே  திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பார்களே. சொர்க்கம் கண்மூடிக் கொண்டுதான் மானுக்கு மதயானையை நிச்சயிக்குமோ.

             அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்கினி வலம் வந்து மாங்கல்யம் அணிவிக்கின்றார்களே அது ஏன்? அம்மி போல் கல் மனம் கொண்ட ஆண்மகனும் உண்டு என்பதற்காகவோ! அருந்ததி காட்டுகின்றார்களே கற்புக்கரசியாய் கணவன் தவறுகளைக் கண்டு கொள்ளாதே என்பதற்காகவோ. அக்கினி வலம் வருகின்றார்களே அது ஏன்? வாழ்க்கை என்னும் தீக்கு அருகே வந்துவிட்டாய். எட்டி அவதானமாய் நில். உன் வாழ்வை எரித்துவிடும் வல் அரக்கர்களும் இருக்கின்றார்கள் என்று அச்சுறுத்துவதற்காகவோ! இத்தனை சடங்குகளும் செய்து பத்துப் பொருத்தம் பார்த்து குடும்பமாய் இனமாய் நண்பர்களாய் சேர்ந்து குதூகலமாய் ஒரு கொடுமைக்குள் அல்லவா வரதேவி வாழ்க்கையைத் தள்ளிவிட்டார்கள். இந்த சாத்திர சம்பிரதாயங்கள் சொன்ன நற்பலன்கள் இங்கு எப்படித் தீப்பலன்கள் ஆயிற்று. கண்ணதாசன் திருமணநடைமுறைகளுக்குச் சொன்ன விளக்கம் இங்கு எப்படி மாறிநிற்கின்றது.

                                                       ———

               போதையில் மிருகமாயும் போதை மாறிய நிலையில் ஏதுமறியாதவனாயும் கரன் வாழ்வு தொடர்ந்தது. காலஓட்டத்தில் நிகழ்வுகள் பனி மூடிய மணலாய் தெரிவதுண்டு. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்க நடப்பவைகள் நல்லவைகளாக நடக்க முயற்சிகளை மெல்ல மெல்ல கரன் எடுத்தான். ஆயினும் நட்டமடைந்தோர் வாய் மூடி ஊமைகளாய் இருப்பாரோ! தம்மை ஏமாளிகளாக மாற்றித் தன் திறமையைக் காட்டி கரன் செய்த காரியங்கள் அவர்களால் பொறுக்க முடியவில்லை. கரனுக்கு அவர்கள் தந்த நெருக்கடிகள் அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. சட்டரீதியற்ற செயல்களைச் செய்வதற்குத் தூண்டுதலாக இருந்தமை அவர்களின் குற்றமுமல்லவா! நேரடி வழிமுறைகள் இருக்க பிறரின் உதவியைத் தேடிப் போனதும் அவர்கள் தவறல்லவா! “வெறுங்கை முழம்போடுமா” கடனைத்தான் திரும்பக் கொடுக்குமா? ஒன்றுமில்லாதவன் திரும்பத் திரும்பக் கடன்பட வேண்டிய நிலையே ஏற்படும். தொழில் இல்லை. செய்த காரியங்களும் செய்த தவறுகளால் தொடரவில்லை. கரன் நிலையோ இப்போது திண்டாட்டம். வீட்டிலும் நிம்மதியில்லை. வெளியிலும் கெட்டபெயர். ஆயினும், வாழ்வில் நடந்த பல தவறுகள் தொடர இப்போதெல்லாம் அவன் விரும்புவதில்லை.

               கரன் சமைக்கப்பட்ட உணவைத்தானாய் உண்பான் வீட்டில் மகனுடன் சிறிது நேரம் விளையாடுவான். மனையாளோ அவன் எதிரே வருவது கிடையாது. வரதேவி மனதில் ஆழமாக அவன் பற்றி அச்சடிக்கப்பட்ட பதிவுகளைக் காலம் அழிக்குமோ காலன் அழிப்பானோ தெரியவில்லை. அந்த அளவு கரனில் வெறுப்பு அவளிடம் இருந்தது. ஒரே வீட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் காண்பதே கிடையாது. இவ்வாறு வாழும் வாழ்வு இருவருக்கும் இயல்பாகிவிட்டது.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.