part11

                   அன்றையநாள் உச்சிச் சூரியன் ஜேர்மனி மண்ணுடன் மனமகிழ்ந்து உறவாடிய நாள். சிறுவர்கள் விருப்பம் போல் வீட்டை மறந்து நேரம் மறந்து விளையாடிய நாள். மகனுடன் மைதானக் கதிரையில் அமர்ந்திருந்தாள் வரதேவி. மனதினுள் இனம்புரியாத ஏக்கம் ஒன்று ஏற்பட்டது. திடீரென தோன்றிய உணர்வுக்கு அன்பாய் அணைத்து கைகளால் முதுகைத் தடவி கைகளை இறுகப்பற்றி ஆதரவான வார்த்தைகளை யாரோ பேசவேண்டும் என்று உள்ளம் ஏங்கியது. ஏன்? ஏன்? இப்படி ஒரு உணர்வு. அவளை அவளுக்கே புரியவில்லை. மனநோய் என்பது இதுதானா? உடல்நோய்க்கு மருந்துண்டு. மனநோய்க்கு மருந்தென்ன? பிள்ளைச் சிரிப்பில் உடல்உளநோய் மறந்திருந்தாலும் பிள்ளைச் சிணுங்கல் தொல்லையாய்த் தோன்றும். இச்சமயம் பிள்ளையையே வெறுக்கும் மனநிலையும் தோன்றும். “வீட்டிற்குப் போவோம்” என்பாள். வரன் “இன்னும் கொஞ்சம் நிற்போம்‘‘ என்பான். தன்னால் முடியவில்லை என்றாள். அவன் “வரமாட்டேன்… நான்…‘‘ என்று அடம்பிடித்தான். பிள்ளையை தனியே விட்டும் போகவும் முடியாது. விளையாடும் வரை பொறுத்து இருக்கவும் முடியாது. ஆத்திரத்தில் அடிக்கவும் முடியாது. காண்பவர்கள் பிள்ளையைத் துன்புறுத்துகிறாள் என்று காவல்துறையினருக்கு அழைப்புவிடுத்து விடுவார்கள். அதன் காரணத்தால் பிள்ளையைப் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி விடுவார்கள். இந்த பயங்கர விபரீதம் நடக்க விடவும் முடியாத நிலை. தன் மனதைத் திருப்திப்படுத்த முடியாது. மகனைத் திருப்திப்படுத்தி அமர்ந்திருந்தாள். விளையாடிக் களைத்த வரன். இப்போது தண்ணீர் தேடித் தாயை அணுகினான்.

 “நாளைக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டும். குளித்துச் சாப்பிட்டுப் படுக்க நேரம் போயிடும். வா…வீட்ட போவம்” என்று அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போனாள்.

             சூரியனோ இன்று அளவுக்கதிகமாக பூமாதேவியுடன் கொஞ்சிவிளையாடினான். வரன் கண் உறக்கம் காண்பதற்கு சூரியன் களைக்க வேண்டுமே! தன் வீடு திரும்பவேண்டுமே! ஆனாலும் கடமைகளை விட்டுவிடமுடியுமா. வீடுதிரும்பியவுடன் வரனைச் சுத்தமாக்கி, வாயுணவூட்டி, திரைச்சீலை போட்டு அறையை இருட்டாக்கி, உறங்க வைத்தாள். அருகே அமர்ந்து பாடல் பாடும்படி வற்புறுத்தினான். அவனுக்காய் பிள்ளைப்பாடல் பாடி உறங்க வைத்தாள். வரன் உறங்க, உறக்கம் வராத தன் கண்களுக்கு தொலைக்காட்சியை மருந்தாக்கினாள். கண்களே பார்த்தன. மனமோ அலைந்தது. அவ்வேளை சூரியனும் களைத்து மறைந்தான்.

 வரதேவி தூக்கம் விரும்பாக் கண்களுக்குச் சூழலைக் காட்டித் தூங்கவைக்க படுக்கையறையுள்ளே நுழைந்தாள். திரைச்சீலையை விலக்கினாள். படுக்கையில் இருந்தபடி வானத்தை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருண்டு கிடந்த வானத்தில் பூரணைநிலவு பரிபூரணமாகக் காணப்பட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் போது அவ்வானத்து நிலவானது சாளரம் நோக்கி மெல்லமெல்ல அண்மித்தது. கண்ணை மேலும் விழித்துப் பார்த்தாள். அறையினுள் நுழைந்துவிடத் துடிக்கும் நிலாவைக் கண்கள் மொய்த்துக் கொண்டன. சிறிது நேரம் அப்படியே பாhத்துக் கொண்டிருந்திருப்பாள், மண்டைக்குள் மின்சாரம் வெடிப்பது போன்ற ஒரு சத்தம். உடலின் தலைமையகத்தை மேலே மேலே உயர்த்தி உயர்த்திப் பாhத்தாள். முடியவில்லை. ஓவென்று அலறினாள். என்ன ஆனதென அவளுக்கே அறியாதவளாய் அன்றைய இருள் அகன்றதே தெரியாது உறங்கிவிட்டாள். எண்ணஅலைகளைத் தன்னகத்தே கொண்ட நினைவுச்சமுத்திரமாகிய சிரசின் உள்ளே ஒரு சங்காரமே அன்று நடந்தேறியது. உண்ட உணவின் ஒவ்வாமையோ தெரியவில்லை. காலைப்பொழுது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. மனதைக் கட்டுப்படுத்தினாள். அவளையும் மீறிப் பீறிட்டு வந்த வாந்தியைக் குளியலறைத் தொட்டியினுள் கொட்டிவிட்டாள். அதிர்ச்சியில் திறந்த வாயை அடைக்க முடியவில்லை. தொடர்ச்சியாக வந்த இரத்தவாந்தி தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தது.              இரத்தத்தைக் காண்டாள். அதிர்ந்துவிட்டாள்.

 “எனக்கு என்ன நடந்தது. கடவுளே! எனக்குப் பயமா இருக்கு. இப்போது நான் என்ன செய்வது. எனக்குக் கசம் வந்துவிட்டதா? இதுவரை இருமலே எனக்கு இருக்கவிலலையே! காய்ச்சல் கூட இல்லையே. ஆண்டவனே….” என்று பலமாகக் கத்தினாள். அந்தச் சின்னவனோ தாயுடன் இணைந்து அழுவதைத் தவிர எதைத்தான் செய்வான். தாயின் அருகே ஓடிவந்து பார்த்தான். வரனைப் பாடசாலை அழைத்துக் கொண்டு போக முடியாதவளாய் முழித்தாள். வரனோ ஓரிடத்தில் ஒதுங்கினான்.

             ஐரோப்பிய நாடு சுகமானதே. அதுவே துணையின்றி வாழ்வார்க்கு மிகப் பயமானது. திடீரென துணைக்கு யாரையும் அழைக்கமுடியாது. அவரவர் தத்தமது வேலைப்பழுவில் விடிந்ததும் விடியாததுமாக பற்பல நியமனங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கேட்பது முறையல்ல. எதற்கும் முதல்நாள் கேட்கும்போது முடியுமானவர்களைக் கண்டு கொள்ளலாம். ஆனால், நோய் சொல்லிக் கொண்டு வருவதில்லையே. இன்று உசாராக துள்ளிக் குதிப்பார், நாளை முனகிக் கொண்டு படுத்திப்பார். எதற்கும் மத்தியாஸின் தாயாருக்கு தொலைபேசி எடுத்தாள். மகனைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்படிக் கேட்கலாம் என்று இருந்தாள். ஆனால், அழைப்பிற்குப் பதில் இல்லை. ஆமாம் அவர்கள் போயிருப்பார்கள்.  தாயின் கூச்சல் காரணமாக வரனுக்கு உடலோட்டம் கொடுக்கவில்லை. ஓரிடத்தில் மௌனமாக அமர்ந்திருந்தான். மகனின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய வரதேவி

“என்ன வரன் பயந்திட்டியா? அம்மாக்கு ஒன்றுமில்ல”

 “அப்பிடியென்றா….ஏன் நீங்கள் கத்தினீங்கள்? ஏக்கமான கண்களுடன் குளமாகிய கண்ணீருடன் வினவினான் வரன்.

 வரன் இருந்ததை எள்ளளவும் நினைத்துப் பார்க்காது தான் அழுது புலம்பியது பிழை என்று மனதுக்குள் நினைத்த வரதேவி

 “அது மகன்…. அம்மா நான் கொஞ்சம் பயந்திட்டன்”

 “என்ன பயந்தனீங்கள்? மீண்டும் வினா. பிள்ளைகளிடம் ஒரு கதையைச் சொல்லிச் சமாளிக்க முடியுமா! தமக்குத் திருப்தி தராத விடையானால் துளைத்தெடுத்து விடுவார்கள். அவ்வாறே வரனும் துளைக்கத் தொடங்கினான்.

 “இலேசா வயிற்றை வலித்தது. அதுதான் திடீரென்று வலிக்குதே என்று கத்தினேன்”  ஏற்றுக் கொள்ள முடியாத விடையானாலும், சொன்னாள்.

 “வரன்…..இன்றைக்கு நேரமும் போயிட்டு நாளைக்கு ஸ்கூலுக்குப் போவோம். இப்போது அம்மாவுடன் டொக்டரிட்டப் போவோமா….” என்று கேட்டாள். தாயின் கேள்விக்குத வரனும்  தலையசைத்தான். வாழிடமொழி சரளமாகப் பேசத் தெரியாத நாட்டில் நோயென்றால், அதை விபரிப்பதற்குத் துணை தேடவேண்டியது அவசியம் அல்லவா. தனக்குத் தெரிந்த ஒரு பிள்ளைக்கு தொலைபேசி அழைப்பை விட்டாள்.

“சுபா! நான் வரதேவி கதைக்கிறன். எனக்கு உடம்புக்கு முடியல்ல. டொக்டரிட்டப் போக வேண்டும். ஒருக்கா வருவீங்களா?

           சாதகமான பதிலால் சந்தாசமடைந்த வரதேவி மகனுடன் எழுந்து பொது வைத்தியரை நாடிச் சென்றாள். இருவரும் பஸ் தரிப்பிடம் வந்தனர். ஜேர்மனியில் போக்குவரத்துசபையினர் எப்படித்தான் நேரத்தைக் கணிப்பிடுகின்றார்களோ! புரியவில்லை. குறிப்பிட்ட நேரம் டாண்……என்று பஸ் தரிப்பிடம் வந்தடையும். குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும். காலடியில் வந்து கதவைத் திறந்துவிடும். உள்ளே நுழைந்தவுடன் வயதானவர்கள் அமர்வதற்கென ஆசுவாசமான இருக்கை. யாருமில்லையென அமர்ந்தால், வயதானவர்கள் வரும்பட்சத்தில் எழுந்து இடம் கொடுத்துவிட வேண்டும். நேருக்கு நேர் பார்த்துப் பேசிப் பயணம் செய்ய நேருக்குநேர் போடப்பட்ட ஆசனங்கள். அதில் இருக்கத் தவிர்ப்போருக்குப் பார்வையாளர்கள் அமர்வது போன்ற ஆசனங்கள். ஆசனங்களின் கீழ் குளிர்வேளைக் குளிரைத் தவிர்க்க வெப்பமூட்டிகள். கோடை வெப்பத்தைத் தவிர்ப்பதற்கு பஸ் வண்டியின் கூரையில் திறந்து விடப்படும் சாளரங்கள். இருந்த இடத்திலிருந்து இறங்குவதற்காய் சைகை காட்டும் அழுத்திகள். இறங்க வேண்டிய இடத்தைக்காட்டிக் கொண்டே இருக்கும் இடப்பெயர் அறிவிப்புக் காட்சிப்படம் (இது இடத்துக்கிடம் மாறிக்கொண்டே இருக்கும்) இறங்கவேண்டிய இடத்தை அறிவிப்பதற்கு அருகிலேயே அழுத்தி. கண் தெரியாதவர்களுக்கும் உலகத்தை மறந்து கற்பனையுலகில் சஞ்சரிப்பவர்களுக்கு ஊர்பெயரை அறிவிக்கும் அறிவிப்பொலி. குப்பைத்தொட்டி, குழந்தைகள் வண்டி தரித்து வைக்கும் இடம். இத்தனை சுகங்களுடன் பிரயாணம் செய்வோர் குறிப்பிட்ட நேரம்; குறிப்பிட்ட இடத்தை அடைவர் என்பது நிச்சயம்.

           இருவரும் காலடி வந்த பஸ்ஸில் ஏறினர். தரிப்பிடம் இறங்கினர். வைத்தியரை நாடினர். அப்பொயின்ட்மென்ட் வைக்கவில்லை. ஜேர்மனியிலே வைத்தியரிடம் நோயாளி செல்வதாக இருந்தால், முன்னதாகவே அதற்கான அநுமதி பெற்று குறிக்கப்பட்ட திகதியிலும் குறிக்கப்பட்ட நேரத்திலுமே செல்ல வேண்டும். வருடம் தவறாது குடும்ப வைத்தியர் உடற்பரிசோதனைகள் முழுவதுமாகச் செய்வார்.  அங்கு வாழும் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வைத்தியர் கடிதம் அனுப்பி வருடப்பரிசோதனைக்கு நாள் குறிப்பிடும்படிச் சொல்வார். இங்கு வரதேவி எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வைத்தியரை நாடி வந்த காரணத்தினால், வரவேற்பறையில் காத்திருந்தாள். அங்குள்ள தொலைக்காட்சியில் விபரணப்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. கவனத்தை அதில் செலவு செய்து கொண்டிருந்ததனால், நேரம் கழிவது உணரப்படவில்லை. இச்சமயம் சுபா வந்தடைந்தாள். சுபாவிடம் தனக்குக் காலையில் நடந்த சம்பவத்தை விளக்கினாள்.

            காலதாமதமாகியே வைத்தியர் அவளை அழைத்தார். வைத்தியரிடம் சுபாவின் உதவியுடன் நடந்ததை வரதேவி விபரமாய்க் கூறினாள். இரத்தம் சிறுநீர் இரண்டும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. முடிவுவந்தவுடன் அறிவிப்பதாகவும் கூறி அனுப்பினார். அவள் மனஅமைதிக்கான ஒரு குளிசையை வைத்தியர் கொடுத்திருந்தார். வீடு வந்தவுடன் வரன் தனது நண்பன் மயூரனுக்கு தொலைபேசி எடுத்தான். வரதேவி வெளியே போகமுடியாது என்று கூறிய காரணத்தாலேயே வீட்டிலிருந்து விளையாடலாம் என்று தனது நண்பனை அழைத்தான்.

 “வாறியா? சேர்ந்து விளையாடுவோம்”

 “அப்பாட்டக்கேட்டிற்றுச் சொல்றன்”

 திரும்பவும் மயூரன் அழைப்பு.

 “சரி  4 மணிக்கு வாறன்”

 மயூரன் வரப்போகின்றானென்று மகிழ்ச்சியில் காத்திருந்த வரனுக்கு 4 மணி வரை காத்திருப்பு நேரமானது. வரதேவிக்கு களைப்பாறும் நேரமானது.

 4 மணியானது அழைப்பு மணியும் அழைத்தது. வரதேவியே கதவைத் திறந்தாள். அழகான ஒரு சிறு பையன் கையில் விளையாட்டுப்பொருளுடன் படி ஏறினான். உள்ளே வந்தவுடன் இருவரும் வரனுடைய அறைக்குச் சென்றார்கள்.

 “யாருடன் வந்தனீங்கள் மயூரன்…? வரதேவி வினவினாள்.

 “அப்பாவோட…………….”

 “அப்பாட பெயர் என்ன?

 “புனிதன் அன்ரி…”

 “அப்படியா……?

 “அம்மா வரல்லையா?

 “அம்மா சாமிட்டப் போயிட்டா”

 அதிர்ச்சியுடன் மீண்டும் நிதானமாக

 “கோயிலுக்குப் போயிட்டாவா? என்று கேட்டாள்

 “இல்லை அன்ரி. சாமிட்டப் போயிற்றா. திரும்ப வரமாட்டா என்று அப்பா சொன்னவர். ஆனா…. படத்துடன் அப்பாவும் நானும் கதைக்கிற நாங்கள். நான் குழப்படி செய்தால் அம்மாட படத்திற்கு முன்னுக்கு நின்று அப்பா அழுவார். அதால நான் குழப்படி செய்றதில்ல அன்ரி” என்று மயூரன் கள்ளங்கபடமில்லாது கூறிய வார்த்தைகளைக் கேட்ட வரதேவி

 திடீரென்று பிள்ளையை அணைத்தாள். மனம் வெந்தது. இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு பிரிவா? கவலையை வெளிக்காட்டாது. அவனுடைய தலையைத் தடவியபடி

 “இரவுக்கு என்ன சாப்பிட விருப்பம். அன்ரி செய்து தர்றன். சாப்பிட்டிற்று ஆறுதலாக வீட்ட போகலாம்”

 “இல்லை அன்ரி….வீட்ட போய்ச் சாப்பிடுறன்”

 “வீட்டதானே எப்போதும் அப்பா செய்து தரும் சாப்பாடு சாப்பிடுவீர்கள். இன்றைக்கு வரனோட சேர்ந்து சாப்பிடுங்கள். நான் சமைக்கிறேன்.  அப்பாக்கு ரெலிபோன் எடுத்து 7.30 போல் வந்து கூட்டிற்றுப் போகச் சொல்லுங்கள்” என்றாள்.

 அவன் பதிலுக்குக் காத்திராமல் இடியப்பமும் இறால் சொதியும் இறைச்சிப் பிரட்டலும் செய்து அன்பாகப் பரிமாறினாள். தாயில்லாமல் தகப்பன் துணையுடன் மாத்திரம் வளருகின்ற மயூரனைப் பார்க்கும் போது அவள் மனம் வேதனைப்பட்டது. எப்படி இந்தச் சின்ன வயதில் இறந்திருப்பாள்…? என்ன வருத்தம் வந்து தொலைத்ததோ! என்று கேள்விமேல் கேள்வி தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அடிக்கடி

 “எத்தனை மணி? எத்தனை மணி…” என்று நேரத்தில் அவதானமாக இருந்த மயூரனைப் பார்க்கும்போது சொன்ன நேரத்திற்கு வீட்டிற்குப் போகவேண்டும் என்ற அவனின் துடிப்புப் புரிந்தது. தந்தையின் பாசமா? இல்லை பயமா? என்று வரதேவிக்குப் புரியவில்லை.

             வாசல் அழைப்புமணி அலற  “”அப்பா வந்திட்டார்…”என்று கத்தியபடி போவதற்கு ஆயத்தமான மயூரனிடம்

 “பொறுங்கள்….அப்பா மேலே வரட்டும்” என்று கூறினாள்.

 மேலேறி வந்த மயூரனின் தந்தை வாசற்படியில் நின்றவண்ணம்

 “வணக்கம்” என்று வரதேவியிடம் சொல்லியபடி

 “போவமா? மயூரன்”  என்றான்.

 “நீங்கள் இந்த ஸ்ரட்ற்குப் (city ) புதிதா? என்று கேட்டாள்.

 “ஆம் இரண்டு  கிழமைதான் வீடு மாறி வந்தோம். உங்கள் மகனுடன் தான் மயூனர் படிக்கிறார்”

 “உள்ளுக்கு வந்து ஒரு ரீ குடிச்சிட்டுப் போங்களேன். மயூரனின் அம்மா பற்றிக் கேட்க வேணும்போல் இருந்தது….”என்றாள்

 “சரி…..” என்றவர் உள்ளே வந்து அமர்ந்தார். தேநீரை நீட்டியபடி

 “பிள்ளை சொன்னது அம்மா சாமிட்டப்போயிட்டா என்று. கேட்கக் கஷ்டமா இருந்தது. என்ன நடந்தது.  இறந்து நீண்டநாள்கள் ஆயிட்டே….ஏதாவது வருத்தமா இருந்தவவா?

 “வருத்தமா! அப்படியென்றால்த்தான் மனம் ஆறியிருக்குமே. தற்கொலை அல்லவா செய்திட்டா. இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதுதான் அந்த ஸ்ரட்டில(வழறn) இருந்து இடம்மாறி வந்தோம். அங்க இருந்தா எனக்குப் பயித்தியமே பிடித்திடும். எனக்கு அவ மனைவியாக் கிடைச்சது நான் செய்த புண்ணியமே. அவவை நான் இழந்தது நான் செய்த பாவமே….”

 “ஏன்? அப்படியென்ன நடந்தது….?

 “ஒருநாள் மயூரனுடன் வூல்வேர்த் என்ற கடைக்குப் போனவ. சாமான்களெல்லாம் வாங்கிட்டு காசுகட்டியபின் வீட்டிற்குத் திரும்ப வாசலுக்கு வந்தபோது வாசலில் இருந்த அலாரம் அடித்திருக்கிறது. அதனால், இவவைக் கொண்டுபோய் ரெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். இவட அடுத்த பேர்க்கிற்குள்ள ஒரு விளையாட்டுச்சாமான் காசுகட்டாமல் இருந்திருக்கிறது. அதனால், அவவைப் பிடித்து வைத்துக்கொண்டு எனக்கு ரெலிபோன் அடித்தார்கள். நான் போய்த்தான் தண்டனைப்பணம் கட்டிக் கூட்டி வந்தேன். அது மயூரன் தான் இவக்குத் தெரியாமல் பைக்குள்ளே  போட்டிருக்கிறான். பிள்ளைக்கு அம்மா காசு கட்டவேணும் என்ற விசயம் எல்லாம் தெரியாது. தான் களவெடுத்ததாக நினைத்துவிட்டார்கள் என்று மனவருத்தத்துடன் ஒன்றுமே பேசாமல் வந்தவ, திடீரென்று வீட்டிற்கு வந்த உடனே பல்கணியில் இருந்து கீழே பாய்ந்திட்டா. அவட மன இறுக்கம் எனக்குத் தெரியல்ல. அநியாயமா ஒரு சின்ன விசயத்திற்கு வெட்கப்பட்டு எங்களையெல்லாம் விட்டிற்றுப் போயிற்றா…. இந்தச் சின்னப் பெடியன் செய்ததை அவர்களும் ஏற்றுக் கொள்ளல்ல. கடவுளும் ஏற்றுக் கொள்ளல்ல. அதுதான் தண்டனையா அம்மாவை எடுத்துட்டார். எனக்கு உலகமே வெறுத்திட்டு. என்ன செய்வது ஒரு பிள்ளையைப் பெத்திட்டன். அவன் புத்திபிடிபட்டு வாழும்வரை நான் வாழவேண்டும்‘‘ என்று தன் மனைவியின் இறப்பின் வேதனையை விளக்கினார்.

                “ஒரு நிமிட குற்றவுணர்வைக் கட்டுப்படுத்தியிருந்தால், அருமையான இந்த வாழ்வை இழந்திருக்க மாட்டா. இதெல்லாம் சொல்லி வருவதில்லை. சிலர் அப்படித்தான். ஒரு சிறிய அவமானத்தையும் தாங்க மாட்டார்கள். என்ன செய்வது ஒருவர் இழப்புடன் வாழ்க்கை முடிந்து போய்விடுவதில்லை. மனிதன் தொடர்ந்து வாழவேண்டியது அவசியமாகின்றது. இப்படிப் பல விடயங்கள் இங்கு நடந்திருக்கிறன. வாழவேண்டிய வயதிலே வாழ்க்கையை இழந்து உறவுகளைத் தவிக்க விட்டவர்கள் சம்பவம் இங்கு அநேகமாக நடைபெற்றிருக்கிறன. இப்படித்தான் இன்னும் ஒரு பெண் வேலைக்குப் போய்வரும்போது ஸ்னோவில் சறுக்கி விழுந்து கிடந்திருக்கின்றா. இரவுநேரம் வரும்வழியில் யாருமே காணவில்லை. உயிர் போய்விட்டது. பின்தான் அவ்வழியிலே போன மைத்துனர் கண்டு கணவனுக்கு அறிவித்து மற்ற விடயங்கள் நடந்திருக்கின்றன. அவக்கும் ஒரேயொரு மகளேதான். இப்படி ஏதோவெல்லாம் நடக்கிறது. நடப்பதற்குக் காரணம் சொல்லமுடியாது. கவலைப்படாதீங்கள். இனிமேல் நடப்பவை உங்களுக்கு நல்லவைகளாகவே அமையும் என்று நம்பிக்கை வையுங்கள். அடிக்கடி மயூரனை வரனுடன் விளையாடவிடுங்கள். அவருக்கும் பொழுதுபோகும். என்னால் இயன்ற உதவிகளை உங்கள் இருவருக்கும் செய்கிறேன்” என்று புனிதனை ஆறுதல்படுத்தினாள்.

              வரதேவி கூறிய வார்த்தைகள் புனிதனுக்குத் தைரியத்தைக் கொடுத்தது.  பின் தந்தையும் மைந்தனும் விடைபெற வரதேவி வரனைப் படுக்கைக்கு அழைத்துச் சென்றாள். இன்றைய பொழுது நடந்தவைகளை மீட்டிப் பார்த்தாள். எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், வரனின் நிலை என்ன? தந்தையும் இல்லாதநிலையில் பிள்ளை என்ன செய்வான். இதை நினைக்கும்போது வரதேவிக்குத் தூக்கமே வரவில்லை. இன்று எனக்கு என்ன நடந்தது. இரத்தவாந்தி எடுக்கும் அளவிற்கு என்ன நோயாக இருக்கும். நிச்சயமாக ஏதோ பிரச்சினை இருக்கிறது. அதற்கிடையில் வரனை யாருடைய கையிலாவது ஒப்படைக்க வேண்டுமே. எதற்கும் எடுத்த ரெஸ்ட் முடிவுகள் வரட்டும் பார்ப்போம் என்று சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டாள்.

         கண்விழித்தபோது தாங்கமுடியாதபடி வயிற்றை வலித்தது. வரன் பிறந்தபோது கூட இப்படி நோவை அநுபவிக்கவில்லை. எழுந்து குளியலறைக்கு ஓடிச் சென்றாள். உணவு செரித்து மலமாவது இயற்கை. அது மயிராவதன் மாயம்தான் என்ன? கத்தைகத்தையாய் உடல் வெளியேற்றிய மயிர்க்குவியல் கண்டு மலைத்துப் போனாள். மலத்துடன் இணைந்தே மயிர்க்குவியல் சிக்கிக்கிடந்தது. இவ்வளவும் எங்கேயிருந்து வருகின்றது. புரியவில்லை. திகைத்துப் போனாள். எனக்கு என்ன நடக்கிறது. அலறினாள். துடித்தாள். நேரத்துக்கு நேரம் புத்தியில் தடுமாற்றம் புரியாதவளாய் உடலுள் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகளைப் புரியாது தவித்தாள். ஆயிரக்கணக்கான ஊசிகளால் ஆயிரம் பேர் சேர்ந்து உடலிலே குத்தி எடுப்பது போன்ற வலி உடலிலே தோன்றித்தோன்றி மறைந்தது. மனதுக்குள் ஏதோ அரித்தெடுப்பது போல் வேதனை போட்டு ஆட்டியது. நேற்று நடந்தது என்னவென்று இன்று புரியவில்லை. இன்றைய நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க மனம் இடந்தரவில்லை.

            குளியலறைவிட்டு வெளியே வந்தாள். வீடு, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தன்னைத் துரத்துவது போல் அவள் கண்களுக்குத் தெரிந்தன. கைகளால் விரட்டினாள். மனதுக்குள் குரூரமொன்று தாண்டவமாடியது. பறிபோன பாடசாலை மூளைக்குள் மாறாட்டத்தை ஏற்படுத்தியது. விட்டுப்போன கணவன் சில்லறையாய் செய்துபோன செயல்கள் ஒவ்வொன்றும் ஆடை களைந்து நிற்பதுபோல் அவமானத்தைத் தந்தது. தனிமை அரக்கன் பக்கத்திலே நின்று பயமுறுத்துவதுபோல் இருந்தது. அமைதியான சூழல் மயானஅமைதியைத் தந்தது. சுற்றும் முற்றுமும் தலையை அசைத்து அசைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் இரண்டும் அளவுக்கதிகமாக விரிந்தன. சுவரின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தாள். அவள்  உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்து வந்தாள். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தினாள். உடல் இறுக்கமானது. அவள் அவளாய் இல்லை. வாயைத் திறந்தாள். வழமைக்கு மாறான இடிமுழக்கம் போன்ற குரலில் கர்ச்சித்தாள். அவளுள்ளே இருந்து எழுந்த வந்த பெண் இப்போது தன் நடவடிக்கைகளை ஆற்றத் தொடங்கினாள்.

                            நோய் வந்தால் கட்டிலை அணைப்பார் நோயாளிகள். கட்டிலை உடைப்பாரோ! வீட்டுத்தளபாடங்கள் அவள் கைபட்டு சுக்குநூறாயின. அனைத்தையும் தன் இரு கரங்களால் அடித்து நொறுக்கி ஆண்வலுவுடன் வீட்டின் வெளிப்பகுதியில் அடுக்கி விட்டாள். ஒரு பெண்ணால் இப்படி முடியுமா? பெண்ணின் மறுபக்கம் அசுரவேகத்திலும் தொழிற்படும் என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டல்லவா? மனிதர்கள் எல்லோருக்குள்ளேயும் ஒரு மனிதன் ஒழிந்து கொண்டிருப்பான். உறங்கிக்கொண்டிருக்கும் அவன் தட்டி எழுப்பப்பட்டால், தன் வேலையை தாராளமாகக் காட்டத் தொடங்கிவிடுவான். அவ்வாறே தட்டி எழுப்பப்பட்ட பெண் தன் வேலை முடித்து மீண்டும் உறக்கம் கொண்டாள். இப்போது வரதேவி தரையிலே சுவரில் சாய்ந்தவண்ணம் அமைதியாக அமர்ந்தாள். மீண்டும் அவளுள் இருந்து எழுந்து வந்தவள் அடங்கிவிட்டாள். சிறிதுநேரம் அமைதியை அணைத்துக் கொண்டாள். அடங்கி ஒடுங்கி கைகள் இரண்டினாலும் கால்கள் இரண்டையும் அணைத்தபடித் தரையிலே சரிந்துவிட்டாள்.

         சங்காரம் நடக்குது வீட்டிற்குள்ளே

         சஞ்சலம் தெரியுது மனதுக்குள்ளே

         வஞ்சனை புரிந்தது வேதவனோ

         மிஞ்சிய வாழ்வது வேதனையோ

              வீட்டிற்குள்ளே நடந்த பிரளயம் அடங்கி ஓய்ந்தது. எந்தவித சத்தமும் இல்லை. அமைதி கண்ட வீட்டின் நிலைமையை உணர்ந்த வரன் கட்டிலைவிட்டு மெல்ல அடிஎடுத்து வைத்தான். சுற்றும்முற்றும் பார்த்தவண்ணம் பூனைபோல் பதுங்கிப்பதுங்கி வரவேற்பறைக் கதவை நாடினான். கதவினூடாக மெல்லப் பார்த்தான். அமைதியாகப் படுத்துக்கொண்டிருந்த தாயாரைக் கண்டான். இரண்டு கைகளாலும் தன்னுடைய வாயைப் பொத்தியபடி மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டான். பச்சைப் பாலகன் நிலைமையானது பாசமுள்ளவர் அனைவர் நெஞ்சையும் நெகிழவைக்கும். சிறிதுநேரம் அப்படியே இருந்திருப்பான்.

              சில மணிப்பொழுதுகள் கழிந்தன. மெல்லத் தன் கண்களை வரதேவி திறந்தாள். புதிய ஒரு உலகத்தினுள் புகுந்த ஒரு பிள்ளைபோல் மனம் தெளிவானது. உடலோ அடித்துப்போட்டதுபோல வலி எடுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். நிலத்திலே கிடக்கும் தன் உடலை எழுப்பி நிறுத்தினாள்.  அலங்கோலமாகக் கிடந்த அறையை ஒருமுறை நோட்டமிட்டாள். இவையெல்லாம் நானாகவே செய்தேனா!…… எனக்கு என்ன நடந்தது? மூளையை மந்தமாக்கி அசுரத்தனமாக விளையாடிய தன் உடலை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது. இப்போதுதான் தன் பிள்ளையை நினைத்தாள்.

 “வரன்…வரன்…..வரன்” என்று அழைத்தபடி மகனின் அறைக்குள் நுழைந்தாள்.

        மெல்லத் தன் அறை திறக்கப்படும் சத்தம் கேட்டது. தாயைக் கண்ட சேய் ஒருபுறம் ஒதுங்கியது. அச்சத்தில் உடலை ஒடுக்கினான். கிட்டே வரும் தாயை விலத்தினான். புரிந்து விட்டது. நன்றாகப் புரிந்துவிட்டது. தன்னைக் கண்டு மகன் பயங்கொள்வது அவளுக்கு ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவள் கண்கள் குளமாகின.

      விதிதேவன் விளையாட்டில்

      விளைந்துவிட்ட சோதனைகள்

      விளக்கிட முடியாது

      கலங்குகிறாள் காரிகையாள்

      அணைக்கும் கையை

      விலக்கும் மகனை

      நினைக்க நினைக்கப் புலம்புகிறாள்

 “பயப்பிடாதே மகன். அம்மா உன்னை ஒன்றும் செய்ய மாட்டன். என்ர செல்ல மெல்லா. நீயும் என்ன ஒதுக்கிடாத கண்ணே. உன்ன விட்டா எனக்கு யாரிருக்கிறார் செல்லம். என்ர ஒரே ஆதரவு நீதானே. வாடா…. செல்லம்….”அவன் வரவில்லை. அணைக்கப் போகும் அவள் கைகளை விட்டு ஓடினான்.

         வரதேவி தலையிலே கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

 “ஐயோ…….”  கண்ணீர் வற்றும்வரை அழுது தீர்த்தாள். புத்தி தடுமாறிய நிலையிலும் அதிவிசேடபுத்தி அவளுக்குத் தொழிற்பட்டது.  தொலைபேசியை எடுத்தாள். எண்கள் தட்டப்பட்டன.

 “உடனே ஒருக்கா வரமுடியுமா? தயவுசெய்து மறுப்புச் சொல்லாமல் வருவீர்களா? கெஞ்சலில் வேண்டுதல் பலித்தது. தன் எண்ணங்கள் செயல்கள் அனைத்தையும் தன் மனதுக்கிணைந்த இரு மாணவர்களை அழைத்து விளக்கினாள். நாளும் நடக்கும் தன் திருவிளையாடல்களைத் திரைவிமர்சனமாய் விளக்கினாள்.

 “எனக்குப் புரியவில்லை. எதிர்காலம் எப்படியாகும் என்று விளங்கவில்லை. ஏதோஏதொவெல்லாம் செய்றன். என்னவென்று செய்து முடிச்சாப் பிறகுதான் விளங்குது. என்னையே நானறியாது இருப்பதனால், என்ர பிள்ளைக்கு ஏதாவது நடந்திடுமோ என்று பயமா இருக்கு. இப்பவே ஏதாவது செய்ய வேணும். இல்லாட்டால் பிறகு கவலைப்படுறதில பிரயோசனமில்ல. உடலில உள்ளத்தில இருக்கிற தென்பெல்லாம் கரைஞ்சு போனமாதிரித் தெரியுது. ஆனால், நினைக்க முடியாத வேலையெல்லாம் செய்து முடிக்கிறன். உங்களிட்ட வேண்டிக் கேட்கிறன். என்ர பிள்ளைய இந்த வீட்டுக்காரரிட்ட ஒப்படைச்சு விடுங்கள். அவர் அவனை வளர்க்கிறதுக்கு ஏதாவது செய்வார். பிளீஸ்….. இந்த உதவியைச் செய்வீங்களா?

           அவள் வேண்டுதலின் பெயரில் வீட்டுக்குச் சொந்தக்காரன் அழைக்கப்பட்டார். அவரிடம் விபரமாக அனைத்தையும் அவள் மாணவர்கள் ஜேர்மனி மொழியில் விளங்கப்படுத்தினர். அவரும் அவதானமாக அனைத்தையும் செவிமடுத்தார். பின் பிள்ளைகள் பராமரிக்கும் அலுவலகத்துடன்(துரபநனெயஅவ) தொடர்பு கொண்டார். அங்கு வரனைக் கொண்டு சேர்ப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார். அவர்களும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்காக வந்தனர்.

           “எனது மகனை அங்கு விட்டு வளர்ப்பதை நான் விரும்பவில்லை. தயவுசெய்து யாராவது நல்ல குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படிச் சொல்லுங்கள்.                  நான் திரும்பி வந்தவுடன் வரன் என்னிடம் வந்துவிட வேண்டும். அவர்கள் பிறகு பிள்ளையை எனக்குத் தரமாட்டார்கள்”

 என்று தனது மாணவர்களிடம் முறையிட்டாள்.

          வீட்டிலே பிள்ளைகளைப் பெற்றோர் அடித்தால், அல்லது பிள்ளைகள் சத்துக்குறைந்தவர்களாகக் காணப்பட்டால், பாடசாலைக்கு ஒழுங்காகப் பிள்ளைகளை அனுப்பாது விட்டால்,  பிள்ளைகளின் சுதந்திரத்தைப் பெற்றோர் வலுக்கட்டாயமாகத் தடுத்தால், பாராமரிப்பு அலுவலகமாகிய யூகன்ட் ஆம்ற் பிள்ளையைப் பறிமுதல் செய்து கொள்ளும். இவ்வாறே வரதேவி அறிந்த ஒரு பெண் நோயாளியாகக் காணப்பட்டாள். அவளால் தனியே பிள்ளையை வளர்க்க முடியாது என அறிந்த அலுவலகம் அப்பிள்ளையை பொறுப்பெடுத்துக் கொண்டது. ஓரளவு சுகமாகிய பெண், தன்பிள்ளையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி வாதாடியிருக்கின்றாள். ஆனால், அவர்கள் அப்பிள்ளையைத் தாயிடம் கொடுக்கவில்லை.

 “நீ பூரணமாகக் குணமாகிய பின்னேயே பிள்ளையை உன்னிடம் ஒப்படைப்போம்” என்று மறுத்துவிட்டார்கள்.

 “தனிமை என் நோயை மீதப்படுத்துகின்றது. என் பிள்ளை என்னுடன் இருந்தால்,  என் நோய் பாதி குணமாகிவிடும்” என்று அவள் கூறியபோது

 “உன் நோய் தீர்ப்பதற்கு பிள்ளையைப் பயன்படுத்துகின்றாய். அப்படிச் செய்யமுடியாது….நன்றாகக் குணமாகிய பின் உன்னிடம் ஒப்படைக்கின்றோம்…”

 என்று மறுத்துவிட்டார்கள். இவ்வுண்மையை அறிந்த வரதேவி, வரனை தனியாக யாரிடமாவது விட்டு வளர்க்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அவள் விருப்பத்தை வரதேவி மாணவர்கள் விளக்கிச் சொன்னார்கள். உடன்பட்ட அவர்கள் சரியான குடும்பம் கிடைக்கும்வரைத் தாம் பொறுப்பேற்பதாகச் சொல்லி வரனை அழைத்துச் சென்றனர்.

         தாயைப் பிரிகிறது சேய். குஞ்சொன்று அஞ்சிப் பிரிகிறது தாயை. தாயைப் பார்த்து பிள்ளை பயப்படும் சம்பவம் எங்கேயாவது நடக்குமா? இங்கு நடந்துவிட்டது. மாற்றான் கைக்கு மாறப் போகும் பிள்ளையைப் பிரிய முடியாத சோகம் அவளை வாட்ட, அவனைக் கட்டி அணைத்து முத்தமிடத் துடித்தாள். அவனோ தள்ளித் தள்ளி விலகிச் சென்றான். பின் ஒருவாறாக முயற்;சி பலிக்க மனதில் ஏதோ மாற்றம் கண்ட வரன்.

 “எப்போ அம்மா என்னை உங்களிட்டக் கொண்டு விடுவார்கள்? உங்களுக்கு எப்போ சுகம் வரும்? நான் போகத்தான் வேண்டுமா?

அநாதரவாகப் பிள்ளை அடுத்தவர் கைகளுக்குப் பரிமாறப்படுகிறது. வேதனை ஆனாலும், பொருத்தமான இடத்திற்கே பிள்ளை செல்கிறது என நினைக்கும் போது ஓரளவு மனதில் மகிழ்ச்சி கீறலாய் தென்பட

“அம்மாவை அடிக்கடி வந்து பார் மகன்… இவங்கள் உன்னை நல்லாக் கவனிப்பார்கள். அம்மா சுயநினைவு இல்லாத நேரம் உன்னைக் கவனிக்க முடியாமல் போய்விடும். அதனாலேதான் உன்னை இவர்களிட்ட விடுறன். உன்ன நல்லாக் கவனிப்பார்கள். கொஞ்சநாளில எல்லாம் சரியாயிடும். பிறகு  அம்மாட்ட வரலாம். அம்மா விரைவிலே சுகமாகி வீட்டிற்கு வரவேண்டும் என்று சாமியைக் கும்பிடு… அவர் எல்லாத்தையும் பார்ப்பார். போயிட்டு வா…. மகன் போயிட்டு வா……” என்று மகனை வழியனுப்பி வைத்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதாள்.

    ஜேர்மன் மண்ணைத் தொட்டபோது அவள் பெற்ற மகிழ்ச்சியையும் இன்று தன் நிலையையும் நினைக்கும்போது அறியாத வாழ்வின் இரகசியங்கள் ஆச்சரியமாக இருந்தது. இப்பிரபஞ்சம் முழுவதிலும் ஏதோ ஒரு சக்தி பரவியிருக்கிறது. உலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் அதுவே ஆதாரம். இது உயிரினங்கள் அனைத்திலும் காணப்பட்டாலும் மனிதனிடத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. இதுவே உலக அதிசயம். உலகில் என்ன காரியம் நடந்தாலும் அக்காரியம் ஏதோ ஒரு காரணத்தாலேயே நடைபெறுகின்றது. விதையிலிருந்து செடி பிறத்தல் போல் எண்ணத்திலிருந்தேதான், செயல் பிறக்கிறது.

            வரதேவி சிந்தனையானது அவள் அறிவிற்கும் அநுபவத்திற்கும் பொருத்தமில்லாததாக இருந்தது. நினைவாற்றல் குறைவானதாக இருந்தது.  அர்த்தமற்ற பயம் ஏற்பட்டது. இவையெல்லாம் வரதேவி மனநிலையில் ஏற்பட்ட குறைபாடாகவே பட்டது

                மௌனமாய் எந்தவித வார்த்தைகளுமின்றி சோபாவின்மேல் சாய்ந்தாள். அனைத்தும் ஒரு திரைப்படம்போல் நடந்தேறியது. நொறுக்கப்பட்ட தளபாடங்கள் உயிரிழந்து அழகிழந்து கிடந்தன. தன் செய்கை அவளுக்கு அனைத்தும் விநோதமாகப்பட்டது. உடைத்தது, உடைந்தவற்றை அடுக்கி வைத்தது, சோபாவை விட்டுவைத்தது. இது எல்லாம் ஏனென்று புரியாதவளாய் அமர்ந்திருந்தவளை அவள் மாணவர்கள் இருவரும் அணுகினர்.

 “இப்படியே எவ்வளவு நேரத்துக்கு இருக்கப் போறீங்கள் ரீச்சர். ஹொஸ்பிட்டலுக்குப் போவமா? இப்போது அவள் உடலும் உள்ளமும் சோர்ந்திருந்தது.

 “எனக்கு யாரிருக்கிறார்? எங்கே போகவேண்டும்? என்ன செய்யவேண்டும்? எதுவுமே எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் வாழவேண்டும் என்றும் எனக்குத் தெரியவில்ல‘‘ என்று விரக்தியுடன் கூறினாள்.

 “என்ன ரீச்சர்!….எவ்வளவு தைரியமான நீங்களே இப்படி மனம் வெறுத்துப்  பேசுறீங்கள். இதெல்லாம் இங்கு ஒரு வருத்தமே இல்லை. உங்கள் மகனுக்காகவாவது நீங்கள் ஹொஸ்பிட்டலுக்குப் போகவேண்டும். நீங்கள் சுகமாக இருந்தால்த்தானே வரனும் சந்தோசமாக இருக்கமுடியும்”

               இவ்வேளை தொலைபேசி அழைப்பு ஒன்று சிணுங்கியது. கையிலே எடுத்த மாணவி,

 “யாரோ ரகுவாம் ரீச்சர். என்ன சொல்ல ரீச்சர்? என்றாள்.

 “இவர் இன்னும் ஜேர்மனிக்கு வரவில்லை என்று சொல்லி ரெலிபோனை வையுங்கள்” என்றாள்.

 அவ்வாறே கூறப்பட்டு ரெலிபோன் வைக்கப்பட்டது. வரதேவியோ மனதிற்குள் சிரிக்காமல் சிரித்தவளாய்,

           “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

            அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ

            மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

            வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்

            சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்

            தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்

            கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

            குருக்களோ தட்சணை கொடுவென்றாரே”

 என்னும் இராமச்சந்திரக்கவிராயர் பாடிய பாடலைப் பாடினாள்.

 “ஏன் ரீச்சர் இந்த நேரத்தில் இந்தப் பாடல்‘‘ என்றாள் ஒரு மாணவி.

 “ஒருவர் வீட்டிலே பசு கன்று போட்டிருக்கிறது. ஆனால், வெளியிலோ மழை பெய்துகொண்டிருக்கிறது. கடுமழை காரணமாக வீடு விழுந்து விடுகிறது. ஆனால், வீட்டில் மனைவிக்கோ சுகவீனம். வேலைக்காரனோ இறந்து விட்டான். மழை பெய்த ஈரத்திலே விதை நெல்லை நட்டுவிடலாம் என்று விதை நெல்லை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் அவர். அப்போது வழியிலே கடன் கொடுத்தவன் நெல்லைப் பறித்துவிடுகின்றான். இந்தவேளை சாவுச்செய்தி கொண்டு ஒருவர் இவரைப் பார்க்க வருகிறார். அவர் வரவும் அச்சமயம் தவிர்க்கமுடியாத ஒரு விருந்தினர் எதிரே வருகிறார். அவரைப் பார்த்தபோது பாம்பு ஒன்று அவரைக் கடித்துவிடுகிறது. இதேநேரம் உழுதுண்பாரிடம் வரிகேட்பார் அரசசபையிலிருந்து வருகின்றார். அதேவேளை குருக்களும் இவர் செய்த காரியத்திற்காக தட்சணை கேட்டுவந்தார். இவ்வாறு ஒரே நேரத்திலே அத்தனை துன்பமும் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டதாக இராமச்சந்திரக்கவிராயர் பாடியிருக்கிறார். இப்போது என் நிலைமையும் அப்படித்தான். எல்லாம் ஒன்றாக என்னைப் போட்டு வாட்டுகிறது”

 “பார்த்தீர்களா ரீச்சர்! எவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அதுபோல்த்தான் உங்களுக்கும். இதுபற்றி அதிகம் யோசிக்காதீர்கள். வாங்க ஹொஸ்பிட்டலுக்குப் போவோம்” என்று மாணவர்கள் கூறினார்கள்.

           “இங்கே பாருங்கள்… இந்தக் கொப்பியில் கீதாவின் நம்பர் இருக்கிறது. ஒருதரம் நடந்தவற்றைக் கீதாவிடம் சொல்லிவிட்டு ஒரு ரெக்ஸி பிடித்து என்னை ஹொஸ்பிட்டலில கொண்டுபோய் விட்டுவிடுங்கள். பிறகு நடப்பவற்றைப் பார்ப்போம்” என்று கூறிய வரதேவி கொப்பியைத் தன் மாணவர்களிடம் நீட்டினாள்.

                          அவர்களும் கீதாவிடம் விபரம்கூறி வரதேவியை மனநிலை வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர்

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.