Part 9

அடுத்த சனிக்கிழமை வழமைபோல் பாடசாலையைத் திறப்பதற்காக வரதேவி பாடசாலை வாசலருகே வந்தாள். வழமைபோல் கதவு திறப்பதற்கு முன்னமே வந்து நிற்கும் யதுஷா அங்கில்லாதது வரதேவிக்கு யோசனையாக இருந்தது. கதவு திறப்பதிலிருந்து பாடம் ஆரம்பிக்கும் வரை வாய் ஓயாது கேள்விமேல் கேட்டுத் துளைக்கும் அவள் வரவின்மை வரதேவிக்குக் கவலையைக் கொடுத்தது.

 “தமிழில்தான் 247 எழுத்துக்கள் இருக்கிறதே ரீச்சர். ஏன் அம்மாவின் தம்பியையும் மாமா என்று சொல்லுகின்றோம். தெரியாத ஆண்பிள்ளைகளையும் மாமா என்கின்றோம். வேறு ஒரு சொல் வைக்கலாம் தானே? தமிழ் எழுத்துக்கள் இப்படி வளைத்து நெளித்தெல்லாம் எழுதுகின்றார்களே. எப்படி ரீச்சர் கல்லில் எல்லாம் எழுதியிருப்பார்கள்? இந்த “ஃ” என்ற எழுத்துத்தான் எழுதுவதில்லையே அதை ஏன் படிப்பிக்கின்றீர்கள்? சித்திரை வருடம்தான் புதுவருடம் என்கின்றார்கள். ஏன் தைப்பொங்கலில் முதலாம் திகதி வரும் என்கின்றார்கள். நாம் ஏன் தை முதலாம் திகதியை முதல் திகதியாக எடுக்கின்றோம்? தாமரைப்பூவில் எப்படி சரஸ்வதி இருக்க முடியும். பூ நசிந்துவிடுமே! இவ்வாறாகப் பல கேள்விகளைக் கேட்டுத் துளைத்தெடுப்பாள். அத்தனை கேள்விகளுக்கும் அமைதியாக வரதேவியும் விளக்கம் கொடுப்பாள்.

 “தமிழ் பெண்கள் தமது கணவனைத் தவிர மற்றைய ஆண்களைத் தம்முடைய சகோதரர்களாகவே கருதுவதால், அவர்கள் எல்லாம் தமது குழந்தைகளுக்கு மாமா முறை கூறியே அழைக்கப் பணிக்கப்படுகின்றார்கள். கல்லில் எழுத்துக்கள் வடித்த காலப்பகுதியில் எம்முடைய எழுத்து வடிவங்கள் இப்போது இருப்பதுபோல் இருந்ததில்லை. தாமரைப்பூ எந்தளவு நீரில் நின்றாலும் அந்த நீர்மட்டத்திற்கு மேலேயே நிற்கும். கல்வி அறிவு பெற்றவர்கள் தாழ்ந்து போவதில்லை. அதனாலேயே சரஸ்வதி தாமரைப்பூவின் மேல் இருப்பதாக படம் வரைந்திருக்கின்றார்கள். ஆங்கில நாள்காட்டிப்படி தைமாத 14ம் திகதியாக இருந்தாலும், தமிழுக்கு அது முதற்திகதியே. ஆனால், புதுவருடம் என்பது சித்திரைமாத 14ம் திகதியே. அவ்வாறுதான்  எமது பஞ்சாங்கங்கள் கணிப்பிட்டிருக்கின்றன. அத்திகதியிலேயே எங்களுடைய புதியவருடம் ஆரம்பிக்கின்றது. எங்களுக்கு வருடத்தில் முதல்மாதம் சித்திரையே. தை மாதம் வருடத்தின் 10 ஆம் மாதம்”

 இவ்வாறாக யாதுஷாவிற்குப் புரியும்படியாக அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கத்தை அளிப்பாள். புரியாத கேள்விகளாய் இருந்தால்,

 “யதுஷா! பொறுத்துக் கொள். இந்தக் கேள்விகளுக்கு விடையை முதலில் நான் அறிந்து பிறகு உனக்குச் சொல்லித் தருகின்றேன்” என்று ஆறுதலாக விளக்கம் அளிப்பாள். ஆசிரியர் என்பவர்கள் உண்மையில் என்றும் மாணவர்களே. கற்றலும் கற்பித்தலுமே அவர்கள் தொழில். நாளும் கற்ற ஆசிரியரே நன்மாணாக்கனை உருவாக்க முயும். தெரியாது என்று உண்மை சொல்லத் தெரியாத ஆசிரியர்கள் தம் குறை மறைப்பதனால், அறிவு குறைந்த, எதற்கும் ஆமாப்போடும்  மாணவர்களையே உருவாக்க முடியும். அவர்களால் எதிர்த்துக் கேள்விகள் கேட்பதற்கு முடியாது. யதுஷா எதற்கும் சலிக்காது கேள்விகள் கேட்டு வரதேவியுடன் வாதம் செய்கின்ற ஒரு மாணவி. அவள் வரவின்மை கண்டு  வரதேவி மனம் தத்தளித்தது. கதவைத் திறந்து உள்ளே சென்றாள். நேரம் தாமதமாகியது. ஆனால், வரவேண்டிய மாணவர்களோ வரவில்லை. காத்திருந்து காத்திருந்து காலங்கடந்தது. எந்த மாணவர்களும் சமூகமளிக்கவில்லை. புரிந்து கொண்டாள்.

                காத்திருந்து கண்கள் குளமாகிய நிலையில் வீட்டிற்குச் சென்றாள். முதலில் யதுஷா வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பு விட்டாள். யதுஷாவே தொலைபேசியை எடுத்தாள்

 “யதுஷா! ஏன் ஸ்கூலுக்கு வரல்ல?

 “அது ரீச்சர்… அம்மாதான் சொன்னா…இனி வீட்டில இருந்து படிப்போம் என்று‘‘

 “ஏன்…..ஏன்…..”

“தெரியாது ரீச்சர்…..”

 “ஓகே… அம்மாட்ட ஒருக்கா ரெலிபோனைக் கொடுக்கிறாயா ….?

“சரி ரீச்சர்…”

 மீண்டும் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. மீண்டும் தொலைபேசி இலக்கங்களை வரதேவி அழுத்தினாள். ரிங் போனது. ஆனால், யாருமே தொலைபேசியை எடுக்கவில்லை. தன்னுடன் பேச யதுஷாவின் தாய் தவிர்ப்பதை வரதேவி புரிந்து கொண்டாள். மனம் கனத்தது. என்ன நடந்திருக்கும் ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் சங்கிலியாய்த் தொடர்ந்தன. நீரூற்றி வளர்த்த தளிர்கள் எங்கோ தூரம் சென்றது போன்ற வேதனை.

          நண்பி கீதாவின் இலக்கங்கள் மூளைக்குள் பதிந்திருக்கின்றதால், பட்பட்டென்று இலக்கங்களை விரல்கள் தடவின. காதினுள் தொலைபேசி அழைப்பு மணி கேட்டது.

“ஹலோ…..” கீதா. கீதாவேதான். குமுறி வந்த அழுகை அவள் அழைப்பினால் மேம்பட்டது. விக்கி நின்ற அவளை,

“என்ன வராக்கா என்ன நடந்தது….” கீதா பேசினாள்.

 “ஏன் பிள்ளைகளை நீங்கள் ஸ்கூலுக்கு அனுப்பல்ல….” வரதேவி கேள்விக்கு

“அது…அது… பிறகு கதைப்பமே. இப்போ… ஆறுதலா இருங்க வீட்ட வாறன்”  கீதா மழுப்பினாள்.

 “இல்ல…இல்ல…இப்ப சொல்லுங்கள்…என்னால அதுவரைக்கும் காத்திட்டு இருக்க முடியாது. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்துவிட்டீர்கள்தானே…  என்னை எல்லோரும் முட்டாளாக்கி விட்டீர்கள் தானே. எத்தனை மணித்தியாலங்கள் ஸ்கூலில காத்திட்டிருந்தேன். ஒரு வார்த்தை உங்களுக்குச் சொல்ல முடியாது போய்விட்டது அல்லவா…. என்னோட உழைப்பெல்லாம் வீணாப் போயிற்று. எல்லாமே பொய்யா?  சொல்லுங்க கீதா… எல்லாமே…. பொய்யா? பொதுத் தொண்டு என்று பணம் வாங்கித் தமது வங்கிகளையும் நிரப்பித் தாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் மத்தியில் எதையுமே எதிர்பார்க்காமல் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டும் நினைத்து உங்களிடமிருந்தெல்லாம் எதையுமே எதிர்பார்க்காமல் செயல்பட்ட எனக்கு எல்லோருமாகச் சேர்ந்து நல்ல பாடம் படிப்பித்து இருக்கின்றீர்கள்”

 “இல்லக்கா…. வந்து உங்களோட கதைப்பம் என்டுதான் இருந்தேன்…..”

 “அப்படி என்ன நடந்தது…..?

 “உங்களுக்குத் தெரியாமல் இல்லை அக்கா! எங்கள் நாட்டில் நாம் இருக்கும்போது எதைக் கதைப்பதென்றாலும் பயந்து ஒடுங்கியே கதைப்போம். மாற்றாக எதையாவது கதைத்துவிட்டால், எமது பிணம்தான் மிஞ்சும். இப்படியான நிலையிலிருந்து விடுபட்டே இங்கு வந்தோம். ஆனால், இங்காவது நிம்மதியாக இருக்க முடிகின்றதா…. இவர்களை எதிர்த்து வாழமுடியாது. அதனால், ஒதுங்கிவிட்டோம். எல்லோருக்கும் பயந்து பயந்தே  தமிழன் வாழ்வு கழிகிறது. உங்களுக்குத் தெரியாமல் இல்லை அக்கா… எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும். உங்கள் முகத்திற்கு முன்னே எப்படி இதுபற்றிக் கதைப்பது என்றுதான் எல்லோரும் மெல்ல ஒதுங்கிவிட்டோம். ஆனால் அக்கா! என்ர பிள்ளைகள் உங்கள் வீட்டிற்கு வந்தாவது உங்களிடம்தான் தமிழ் படிப்பார்கள். எல்லாவற்றையும் உங்களிடம் கதைப்போம் என்றுதான் இருந்தனான்”

 “புரிகிறது புரிகிறது. நல்லவனுக்குக் காலம் இல்லை. எல்லாத்துக்கும் ஒரு காலம் வரும். நல்லதே நினைத்தேன், செய்தேன். அது இந்த உலகத்துக்குப் பிடிக்கல்ல. எல்லாப் பெருமையும் தமக்கே சேரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருநாள் இடந்தெரியாமல் போவார்கள். இதுதான் நிச்சயம். சரித்திரம். என் ஆத்மா இந்தப் பள்ளிக்கூடம். இதைத் தட்டிப்பறித்துவிட்டார்கள். இந்த ஆத்மா இல்லாத உடம்போடு எப்படி வாழப்போகிறேன். என்று எனக்குப் புரியல்ல….சரி கீதா நான் வைக்கிறன்”

“சரி அக்கா பொறுமையா இருங்கள். பார்ப்போம்…. கரன் அண்ணா வரட்டும். நான் பிள்ளையை வீட்ட கூட்டிக் கொண்டு வருகிறேன்”

 கரன் வருவதுதான் கேள்விக்குறியாகி விட்டதே. மனதைச் சாந்திப்படுத்தினாள். உடலுக்கு உற்சாகமூட்ட கோப்பி ஒன்றைப் போடுவதற்கு ஆயத்தமானாள். நீர் கொதிக்கும் ஓசையுடன் தொலைபேசியும் சேர்ந்தே அலறியது. கையிலெடுத்த தொலைபேசியைக் காதுக்கும் தோளுக்கும் இடையில் புதைத்தாள்.

 “ஹலோ….”

 “நான் எசன் ஸ்ரட்டிலிருந்து ரகு கதைக்கிறன். உங்களுடைய ஹஸ்பன்டிட நண்பன்தான் கதைக்கிறன். கரன் வந்திட்டாரே?

 “அவர் ஊருக்குப் போற விசயத்தை உங்களிட்ட சொல்லிட்டா போனவர்? என்று வினவினாள் வரதேவி.

 “ஓம் எனக்குத் தெரியும். என்ர விசயம் ஒன்றும் பார்க்கத்தான் போனவர். என்ர தங்கச்சிய இங்க கூட்டிவரப் போனவர்”

 ஆஹா…. அப்படியா விசயம். எல்லாருக்கும் ஏன் போனார் என்ற விசயம் தெரிஞ்சிருக்கு. எனக்குத்தான் தெரியல்ல என்று மனதுள் அசை போட்டாள்.

 “உங்களிட்ட என்ர விசயம் பற்றி ஏதாவது கதைத்தாரா? எந்தத் தகவலும் இல்லை. அதுதான் கேட்பதற்காக எடுத்தேன்‘‘ என்று ரகு விபரம் கேட்டான்.

 “இஞ்சப் பாருங்கோ. அவரோடு நீங்கள் வைத்துக்கொண்ட விசயங்களை அவரோடயே பாருங்கள். எனக்கு எதுவும் சொல்வதில்லை. எனக்கு இவைபற்றி  எதுவுமே தெரியாது. தயவுசெய்து என்னை எதுவும் கேட்கவேண்டாம். பிளீஸ்……” மறுபக்க மறுமொழி கேட்க மனமின்றி ரிசீவரை அடித்து வைத்தாள். தொலைபேசி அலறினால், பாம்பைத் தூக்குவது போலல்லவா தூக்கவேண்டியுள்ளது.

 ரகுவும் “என்ன இந்த மனிசிக்கு விசரே… கதைக்க முதல் ரெலிபோனைக் கட் பண்ணுது. யாராவது தன்ர மனிசிக்கு ஒரு கதையும் சொல்லாமலே இருப்பார்கள். இது ஒரு பொல்லாத கேஸ் போல இருக்கு” என்று மனதுக்குள் முணுமுணுத்தான்.

            வரதவியும் தெரியாது என்று நான் சொன்னால், யார் நம்பப் போகின்றார்கள். மனைவியிடம் மறைத்துக் கணவன்மார்கள் செய்கின்ற விடயங்கள் இப்படித்தான் ஒருநாள் புகைந்து புகைந்து நெருப்பாகும். கடைசியில் முழிபிதுங்கி வெட்கப்படுவது நாம் தான். சீச்சீ இது என்ன வாழ்க்கை. எல்லாவற்றையும் மூடிமறைத்து. நாடகம்தான் என்னிடம் போட்டாரா! பனி மூடிய அழுக்காக வாழ்வை மூடி வெள்ளை மனம் கொண்டவராக வாழ்ந்தாரா? என்ன நாடகம் நடக்கிறது. சுமையான வாழ்வு என்று இதைத்தான் சொல்வார்களா? என் வாழ்வில் சுமைகள் அல்லவா சொல்லிக்கொள்ளாமல் வந்து அமர்ந்துவிட்டன. இவர் எல்லாம் செய்து தருவேனென்று கூறி எதையுமே செய்து முடிக்காத மனிதனா? அல்லது கெட்டநேரம் எதையும் செய்யவிடாது தடுக்கின்றதோ. இல்லை….. இல்லை…. என்ன கெட்ட நேரம்? இவருடைய மூளை எங்கே போகிறது? முடியாது என்னும் விடயத்தில் கை வைக்க முடிவெடுக்கக் கூடாது அல்லவா… என்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்று காட்டிக் கொள்வதற்காகவோ இப்படி படுகுழியில் விழுகின்றார். இல்லை ஆசை கூடிவிட்டதோ! அடுத்தடுத்துச் சிந்தனைகள் வரதேவி மூளையில் அலைமோதின.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.