Part 8

திடீரென தாயகம் நோக்கிக் கரன் செல்வதற்கு ஆயத்தமானான். அகதி முகாம்களில் இருக்கும் பிள்ளைகளைப் பார்த்துவரச் செல்வதாக வரதேவியிடம் கூறிச் சென்றான். தனியளாய்த் தன் மகன் வேலைகள் அனைத்தும் பொறுப்பேற்றாள். கின்டர் கார்டின் ஆசிரியை டெய்சி வரனில் அன்பும் பாசமும் மிக்கவள். இங்கு வீட்டிற்குச் செல்லப் பிள்ளை தயங்குமேயொழிய  கின்டர் கார்டின் செல்லத் தயங்காது. ஆசிரியர்களின் அடக்குமுறை இல்லை. அதட்டல் பேச்சில்லை. அதிகார ஆட்டம் இல்லை. கற்பித்தல் கட்டுப்பாடில்லை. பரீட்சை தொல்லை இல்லை. சுதந்திரமான தொழிற்பாடு. விளையாட்டுடன் விளக்கங்கள்.  ஆசிரியர்கள் சிறந்த ஆயாக்களாய் பழகுவர். இங்கு பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்குப் போ என்று தொல்லை கொடுக்கும் சம்பிரதாயமே இல்லை. வீட்டிற்கு வந்தால், அடுத்தநாள் எப்போது வரும் என காத்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறே வரன் கின்டர் கார்டின் வாழ்வும் அமைந்தது. வாசல் வந்தால் தாயின் கைகளை உதறிவிட்டு ஓடிவிடும் தன் மகனைப் பார்த்து வரதேவியும் எதிர்காலத்தில் இவன் நல்ல நிலையை  எட்டிப்பிடிப்பான். பிடிக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். இதுதானே பிள்ளையைப் பெற்றவுடன் பெற்றோர் சிந்தையில் போட்டு வைத்திருக்கும் நம்பிக்கை வித்து. இதுவே வரதேவியிடமும் இருந்தது. எத்தனையோ பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கின்றாள். அதன் புண்ணியம் மகனில் தொடராமலா இருக்கப்போகின்றது.

               வீடு வந்தால் மகன் திரும்பும்போது உணவு தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக சமயலறை வந்துவிடுவாள். என்னதான் அமிர்தம் ஆக்கிப்போட்டாலும் இங்குள்ள பிள்ளைகளுக்கு பொம்மஸூம் சிக்கின் நக்கட்சும் (உருளைக்கிழங்கு மெலிதாக வெட்டிய பொரியலும் கோழியின் நெஞ்சுப் பகுதியைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ரஸ்க் துள் பிரட்டி பொரித்தெடுத்தல்) தரும் சுவையை எந்தச் சுவையும் மிஞ்சாது. வரதேவிக்குக் கூட சமையல் என்றால், இரண்டாம்படிதான். மின் அடுப்பில் தாய்ச்சியைத் தூக்கி வைத்து சமைக்கும்போது சிறிது நேரம் அதிகமாகிவிட்டால்,

 “இலண்டனில் என்றால், கேஸ் அடுப்பு கெதியாகச் சூடுபிடித்து கெதியாக உணவு தயாராகிவிடும். இது எவ்வளவு நேரமாகின்றது. பெண்ணாய்ப் பிறந்தால், ஆக்கிப் போடுவதே பிழைப்பாய்ப் போய்விட்டது. என்னதான் அயல்நாடு என்றாலும் எங்கள் சோறும் கறியும் சாப்பிட்டால்தானே சாப்பிட்டமாதிரி இருக்கிறது” என்று அலுத்தபடி சமையலில் ஈடுபடுவாள்.

              சில சமயங்களில் ஜேர்மனிய வாழ்வில் சலிப்பும் ஏற்படும். வரதேவியைச் சிலசமயங்களில் நண்பர்களின் சுவாரஷ்யமான தொலைபேசிப் பேச்சு மெய்மறக்கவைக்கும். இது உணவையும் சிலசமயங்களில் எரிய வைக்கும். அதுபோல் சுவாரஷ்யமான பேச்சொன்று அழைக்கிறது என ரெலிபோன் ரிங் கேட்டு ஓடிச்சென்று ரிசீவரைக் கையிலெடுத்தாள்.

 “ஹலோ….”

 “நான் சாரதா கதைக்கிறேன். கரன் அண்ணா இருக்கிறாரா? அவரிட்ட ஒருக்காக் கொடுங்களேன்…”

 “இல்ல அவர் சிறிலங்கா போயிட்டார்….”இது வரதேவி பக்கப் பதில்.

 “என்ன…..சிறிலங்கா போயிட்டாரா?….. நாங்கள் ரிக்கற் போடச் சொன்னமே…. உங்களிட்ட ஒன்றும் சொல்லவில்லையா?

 “இல்லையே….”என்றாள் வரதேவி.

 “எப்போ வருவார் அக்கா?

 “தெரியாது பாருங்க….”

 “எப்போக்கா போனவர்?

 “ 2 மாதமாகிறது. என்னிடம் இதுபற்றி எதுவுமே சொல்லவில்லை…..எப்போது வருவார் என்றும் சொல்லவில்லை… நானும் அவர் ரெலிபோன் எடுப்பார் என்று காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை…”

 “சரியக்கா…எந்தத் தகவலாவது கிடைத்தால் சொல்லுங்கள்…..” என்று கூறித் தன் தொலைபேசி இலக்கத்தையும் வரதேவியிடம் கொடுத்து விடைபெற்றாள் சாரதா.

 “என்ன மனிசன் இவர். போனவர் ஒரு தொலைபேசியாவது எடுக்கவில்லையே. இது என்ன புதுப்பிரச்சினை. எல்லாவற்றிலும் தலையைப் போட்டு பிரச்சினைகளை விலைக்கல்லவா வாங்கப் போகிறார்”

 என நினைத்தவண்ணம் மீண்டும் சமையலில் கவனம் செலுத்தினாள்.

   சமையலறை வேலை முடிந்து தனது தாயாரை தொலைபேசியில் அழைத்தாள்.

 “யாரு….வராவா….. எப்பிடியிருக்கிறாய் அம்மா? வரன் செல்லம் எங்கே மகள்? என்ர பேரப்பிள்ளை என்ன சொல்லுது? எப்போ அவனை எனக்குக் கொண்டுவந்து காட்டப் போகிறாயோ தெரியாது? கேள்விகளைத் தாய் வழக்கமான பாணியில் அடுக்கினாள்.

 தாயின் பாசமிக்க வார்த்தைகள் அவள் மனதை இதப்படுத்தியன.

 “நல்லா இருக்கிறேன் அம்மா… வரன் கின்டர்காடின் போயிட்டான். இவர் வீட்ட வரல்லையா அம்மா?

 “யாரு கரனா? இங்கே வந்தார்……1 மாதத்திற்கு முதலே அங்கு வரப்போவதாகச் சொன்னாரே! இன்னும் அங்க வரல்லையா? மகள். நீ அன்றைக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தபோது இதுபற்றிக் கேட்கவில்லையே!

 “உங்களை ஏன் குழப்பவேண்டும் என்று நினைச்சேன் அம்மா….”

 “ஏன்? ஏதாவது பிரச்சினையா?

 தன்னுடைய பிரச்சினை விமானம் ஏறாது தொலைபேசி துணையுடன் இலங்கை செல்வதைச் சற்றும் விரும்பாத வரதேவி

 “இல்ல இல்ல அப்பிடி ஒன்றும் இல்ல…அம்மா” என்று கூறி உறவினர்களின் சுகம் விசாரித்தபடி தொலைபேசியை வைத்தாள்.

 “என்ன நடந்திருக்கும்………? அவள் மனக்கேள்வியெல்லாம் இதுவே

                                                                    ————

  கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்லும் நாளும் நெருங்குகிறது. இந்தநேரத்தில் தம்மை ஏமாற்றிச் சென்ற கரணை நினைக்க நினைக்க சாரதாவிற்கு உடலெல்லாம் எரிந்தது.

 “என்ன பேச்செல்லாம் பேசினார் மனிசன். இப்படி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் சிறிலங்காக்குப் போயிருக்கிறரே… ”என்று நினைத்தவண்ணம்

 “போனது போனதுதான் திரும்ப வராமலா விடப்போறார். வரட்டும்…..”என்று முணுகியபடி அமர்ந்திருந்த சாரரதாவிடம்

 “என்ன சாரதா! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது? என்று அப்போதுதான் வேலைவிட்டு வந்த கணவன் சதீஸ் வினாவினான்.

 “வெடிக்காமல் என்ன செய்யும். ரிக்கட் போடுறன் என்று காசு வாங்கிக் கொண்டு போனவர் ஒரேயடியாப் போயிற்றார். அங்கேயும் இந்த சம்மர் ஹொலிடேக்கு ஊருக்கு வருவோம்  என்று சொல்லி அவர்களுக்கும் ஆசையைக் காட்டிவிட்டன். அதுகளும் எங்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்குதுகள். என்ன செய்றதென்றே தெரியல்ல…” என்று சளித்துக் கொண்டாள் சாரதா.

 “கரனுக்கு ரெலிபோன் அடிச்சனீயே?

 “ஓ….ஓ… அந்த ஆத்திரத்தில்த்தான் இருக்கிறேன். அவர் சிறிலங்காக்குப் போயிட்டாராம். அவரிட மனிசியுடனும் தொடர்பில்லையாம்”

 “நான் இப்போதுதான் கேள்விப்பட்டன் சாரதா! நம்மட சனங்களும் கரனை நல்லா ஏமாத்தியிருக்குதுகள். இலங்கைக்குப் போயிட்டுவந்து காசுதாறம் என்று சொல்லி ரிக்கட்டை வாங்கிக் கொண்டுபோனவர்கள் திரும்ப வந்து காசைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்களாம்”

 “அதுக்கு….. நாங்கள் பழியா? அவர் ஏமாளியென்றால், எங்களையும் ஏமாற்ற வேண்டுமா? நல்ல  மனிசன் என்று நம்பித்தானே காசைத் தூக்கிக் கொடுத்தம். வரட்டும் வரட்டும். என்ர குணத்தை இனித்தான் அறியப் போறார்” என்று மனம் வருந்தி வார்த்தைகளை விட்டாள் சாரதா.

 “சரி சாரதா வரட்டும்…. கேட்பம். இப்போ வேற ஒரு இடத்தில சொல்லி ரிக்கட் போடுறன்‘‘  என்றான் சதீஸ்.

                                                                                       ———–

 நாள்கள் நகர்ந்தன. கரனிடமிருந்து எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை. செலவுக்கு கையில் எதுவுமே இல்லை. இடையிடையே தோன்றும் ஆஸ்துமாவினால் வரதேவி வருந்துவாள். அவளுக்காய் அளிக்கப்பட்ட கொட்டிசோன் ஸ்பிறே அடிக்கடி அவள் தொண்டையினுள் தெளிக்கப்பட மீண்டும் தெளிவாவாள். இலங்கையிலிருந்து அவளைவிட்டு அகலாமல் தொடர்ந்து வந்த சொந்தம் இந்த ஆஸ்துமா. அந்த வெப்பநாட்டிலேயே இவளைப் படாதபாடு படுத்திய நோய் இந்தக் குளிர்நாட்டில் எப்படிச் சொந்தம் கொண்டாடும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

                             அத்துடன் கையில் பணம் இல்லாது காலம் கழிப்பதுதான் எப்படி? உண்ண வேண்டாமா? உடுக்க வேண்டாமா? வீட்டிற்கு வாடகை கட்ட வேண்டாமா? எந்தவித தகவலும் தராது மாயமாய் மௌனமான தன் கணவன் நிலை அவள் மனதுக்குள் வேதனையைத் தந்தது. வேறுவழியின்றி அரசாங்கப் பணத்தை நாடவேண்டியிருந்தது. தனக்கும் தன் மகனுக்கும் வாழ்வாதாரம் தாருங்கள். என் கணவன் என்னை விட்டுப் போய் நீண்ட நாள்களாகிவிட்டன என்று சமூகப் பாதுகாப்பு அலுவலகத்திடம் கையேந்தி நின்றாள். அவர்கள் ஆதரவுடன் அங்கு கிடைக்கும் பொதுநல உதவியுடன் தன் வாழ்வைச் செலுத்தத் துணிந்தாள்.

            ஜேர்மனியிலே உள்ள சராசரி சனத்தொகை 81.8 மில்லியனாகக் காணப்படுகின்றது. இதில் சமூகப் பாதுகாப்பு அலுவலகத்திடமிருந்து பொதுநலஉதவித் தொகை பெறுவதில் முதலிடம் பெறுபவர்கள் துருக்கி இனத்தவர்கள். இரண்டாவது இடத்தைப் பெற்று வாழ்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஜேர்மனியில் வாழும் இலங்கையைச் சேர்ந்தோரின் சனத்தொகையில் 40 வீதத்தினர் இவ்வுதவி பெற்று வாழ்கின்றனர். வேறுவழியில்லாது இவ் உதவி பெறுபவர்களும் உண்டு. வேலை செய்ய விரும்பாது இவ்வுதவி பெறுபவர்களும் உண்டு. ஒவ்வொருவருக்கும் மாதச் செலவுக்குப் பணமும், வீட்டு வாடகையும், மின்சாரக்கட்டணமும், தண்ணீர், வெப்பமூட்டிக்கான கட்டணமும், தொலைபேசிக்கட்டணமும், மருத்துவக்காப்புறுதிப் பணமும், தொலைக்காட்சி பார்ப்பதற்கான வானொலி கேட்பதற்கான  கட்டணமும், பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும்போது அவர்கள் புத்தகச் செலவுக்கான பணமும், அவர்கள் பாடசாலையால் சுற்றுலா செல்லும்போது அதற்கான பணமும், அவர்கள் கலைகள் பயின்றால் இசைப்பாடசாலைக்குச் சிறுதொகைப்பணமும் என அனைத்து உதவிகளையும் வழங்கி மாதாந்திரத் தொழில் செய்து ஒருவர் பெறும் சம்பளத்திற்கு ஈடான உதவிகளை ஒவ்வொரு நகரமும் அவரவர் பகுதிகளில்  வாழும் உதவிப்பணம் பெறும் மக்களுக்கு வழங்கி சந்தோசமாக வாழ வழிவகை செய்யும்.

                  வேலையற்று வளமான வாழ்வு வாழும் இந்நாடு விட்டு தாய்நாடு நாட எந்த மனிதன் தயாராக இருப்பான். தாய்நாட்டில் நாம் வாழவேண்டுமானால், சுயமாகத் தொழில் செய்ய வேண்டும். அல்லது அரசாங்கத் தொழில் செய்யவேண்டும். அல்லது கூலித்தொழில் செய்யவேண்டும். எந்தவிதத் தொழிலும் செய்யாது எந்தமனிதனாலும் சகலவசதிகளும் பெற்று வாழமுடியுமா?  கணவனைப் பிரிந்து வாழும் நிலை ஆசியநாடுகளில் சிரமமே. இங்கு கணவன் இல்லாவிட்டாலும் பெண்கள் வறுமையின்றி தமது வாழ்க்கையைச் செலுத்தமுடியும். அதனால்த்தான் என்னவோ இங்கு பெண்கள் ஆதிக்கம் அதிகரித்து விவாகரத்து மலிந்துவிட்டது. கணவன் என்னை அடித்துத் துன்புறுத்துகின்றான் என்று எந்தப் பெண்ணாவது ஆலோசனை நிறுவனங்களுக்குச் சென்று அறிவித்தால் போதும் கணவன் சிறைச்சாலை அறையினுள் கம்பிகளினூடாகவே வெளி உலகம் நோக்கவேண்டும். பெண்களோ அரசாங்கப்பணத்தில் ஆனந்தமாய் வாழமுடியும்.

            ஐரோப்பியநாட்டில் ஆரோக்கியம் குறைந்து பிள்ளையை வளர்த்தெடுப்பது என்பது இல்லவே இல்லை. ஆனால், தனிப்பிள்ளையாய் வளர்ப்பதென்பது கடினமான காரியம். சேர்ந்து விளையாட யாருமின்றி பிள்ளை வீட்டினுள் இருந்தவண்ணம் ஜன்னலினூடாக வெளியே பார்த்தபடி இருக்கும். இல்லையென்றால், விளையாட வா அம்மா! என்று அடம்பிடிக்கும். இதற்கு வரன் ஒன்றும் விதிவிலக்கல்ல. மாரிகாலம் முழுவதும் வீட்டினுள் அடைந்து கிடக்கும் வரன் கோடைகாலம் வந்துவிட்டால்,

“வெளியே வா அம்மா! ஸ்பீல் பிளட்ஸ்க்குப் (விளையாட்டு மைதானம்) போவோம்………” என்று அடம்பிடிப்பான்.

               கோடை காலம் என்பது ஐரோப்பிய நாடுகளில் விசேடமான காலமே. இருள்காண இரவு 10 மணியாகும். பகல் 5 மணிக்கே சூரியன் சிரித்துக் கொண்டு வந்துவிடுவார். பகல் நேரம் அதிகரித்து இருண்டபொழுது குறைவாகவும் காணப்படும். உடைகழட்டிய  மரங்கள் மீண்டும் பச்சை ஆடையில் பசுமையாய்க் காணப்பட வீட்டுமுற்றங்களில் மலர்வனங்கள் மலிந்து கிடக்கும். மீண்டும் மாரிக்கு மரங்கள் உறைந்துவிடுமே…… மலர்களை இழந்துவிடுமே….. கிட்டத்தட்ட 6 மாதங்களே அழகுறும் இவ்வாறான இம்மலர்வனம் அவசியம்தானா? என எள்ளளவும் சோம்பியிராது. குறுகிய மாதங்களே கண்ணைக் குளிர்ச்சிப்படுத்தும் பூந்தோட்டங்களையும் பலகணிகளையும் அழகுபடுத்துவதில் ஜேர்மனியர் இறங்கிவிடுவர். சிறுவர்கள் கைப்பந்து, கால்பந்து, ஸ்கேட்போர்ட், ரோல்சூ (Roll Schuh ) என வீட்டிற்கு வெளியே பொழுதுகளை கழிப்பர். இதில் வரன் மட்டும் விதிவிலக்கா…. அடம்பிடிக்கும் மகனை அழைத்துக் கொண்டு விளையாட்டு மைதானம் போவாள். அவன் கேட்கும் பக்கமெல்லாம் இழுபடுவாள்.

          அன்று வரன் கின்டர்கார்டின் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் பந்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

“அம்மா! நான் ரெடி. நீங்கள் ரெடியா? தன் வாழ்வின் சோகம் வாட்ட. வந்த சுகம் தொலைதூரம் தெரிய

“அம்மாக்கு இன்றைக்கு உடம்பு சரியில்லை மகன். நாளைக்கு  போவமே? என்றாள்.

“நைன்(இல்லை) …. இன்டைக்குப் போகவேணும்…. வாங்கள் அம்மா….” என்று கால்கள் இரண்டும் தாம்தோம் போட வாசல்படியில் நின்று தொண்டை திறந்து கத்தினான். முடியாதபோதும் போக முடிவெடுத்து வெளியே வந்தாள். மூளையெங்கும் கரன் நினைவு. வழமையாகச் செல்லும் இடமானதால் வழி பார்க்காமலே மூளை அவ்விடம் அழைத்துச் சென்றது. மகனை விளையாடவிட்டு மரநிழலில் மெல்ல அமர்ந்தாள். உடலிங்கே மனமெங்கோ. முழுவதுமாக எந்தவிதத் தொடர்புமின்றி இலங்கை சென்ற கரனைப் பற்றியே சிந்தனை சுழன்றது. இலங்கையிலிருந்து தொலைபேசி மூலம் வந்த செய்தி அவளை மிகவும் குழப்பியது. இலங்கையிலிருந்து 2 வாரத்திலேயே கரன் திரும்பி விட்டதாக வரதேவி தாயார் அச்சமயம் அவளருகே அமுதா வந்து அமர்ந்தாள்.

“எப்படி இருக்கின்றீர்கள்?

“பறவாயில்லை இருக்கிறேன்”

“வீட்டிற்கு வரவேண்டுமென்றுதான் இருந்தேன்”

 “அப்படியா! வாருங்கள். கொஞ்சநேரத்தில் போய்விடுவோம்”

“இல்லை…இப்போது கண்டுவிட்டோம்தானே…எப்படிப் பொழுது போகிறது”

 “போகிறது. தமிழ்பள்ளிக்கூடமும், வீடும் மாறி மாறிப் போகிறது”

 “என்ன பள்ளிக்கூடத்தை வேறு ஆட்கள் நடத்தப் போகின்றார்கள் என்று கதை அடிபடுதே. உண்மையா ரீச்சர்?

 “சீச்சீ அதெல்லாம் பொய்க் கதை. கேட்டவர்கள்தான். நான் விரும்பல்ல. கஷ்டப்பட்டு உருவாக்கிய பள்ளிக்கூடத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதா”

 “மாஸ்டர் வந்திட்டாரா ரீச்சர்? சிறிலங்காக்குக் கொடுப்பதற்குப் பணம் கொடுத்தேன்…. அங்கு கொண்டுபோய்க் கொடுக்கவில்லையாமென்று தங்கச்சி சொன்னார்….. வரட்டும், கேட்பமென்று இருந்தன். என்ரையவர் கேட்கல்லையா கேட்கல்லையா என்று கரைச்சல் கொடுத்ததாலேதான் உங்களிட்டக் கேட்கிறேன்” என்று அமுதா மெல்ல மெல்ல கரன் விடயம் பற்றி வரதேவியிடம் போட்டு வைத்தாள்.

“அப்படியா! எனக்கு எதுவுமே தெரியாது அமலா. எனக்கு அவர் ஒன்றுமே சொல்வதில்ல. நானும் எல்லாம் நடக்கும்போது அவர் முன்னே கண்மூடி இருந்திருக்கிறேன். கொஞ்சம் பொறுக்கும்படி உங்கள் ஹஸ்பன்டிடம் சொல்லுங்கள். அவர் வந்ததும் பேசுவோம். மன்னித்துக் கொள்ளுங்கள் அமலா”  என்று மனம் வெந்து வார்த்தைகளை வெளியிட்டாள்.

“பறவாயில்லை ரீச்சர். நான் சொல்லிக் கொள்றன். நீங்கள் இதுபற்றி ஒன்றும் யோசிக்காதீங்கோ….நான் போயிட்டு வர்றன்” என்று சொல்லி விடைபெற்றாள் அமலா.

 ஏதேதோ நடக்கிறது. எதுவென்று புரியவில்லை. கண்ணாய்; நினைத்த கணவன் மண்ணாய்ப் போன மாயம் புரியாது வாழ்வின் திருப்பத்தை வரதேவி உணர்ந்தாள். கரன் நல்லவனா? கெட்டவனா? தனக்குள்ளே கேள்வி கேட்டாள். துணைக்குப் பேசத் துணையாய் இருக்கும் மகனோ கள்ளங்கபடமில்லாச் சிறுவன். ஆறுதலுக்கு யாரிடம் பேசுவாள். அவமானத்தை யாருக்கு உரைப்பாள். விளையாடிக் களைத்த வரன் தாயருகி வந்தமர்ந்தான். வரதேவியும் அவன் களைப்பையுணர்ந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.