Part 7

வரதேவி உள்ளம் கொண்ட தீவிரம் நாளும்நாளும் தொடர்ந்தது. தொடர்ந்த ஒரு குறிக்கோளுடன் தொடர்வார் அக்குறிக்கோள் நிறைவேறப் பலவித முயற்சிகளில் ஈடுபடல் புதிதன்று.

 “இஞ்சபாருங்கோ! படிப்பிப்பது மட்டும் பிள்ளைகளுக்குப் போதாது. ஒரு பிள்ளை கேட்கிறதை மறந்து போகும். பார்க்கிறதை நினைவில் வைக்கும். செய்வதைத்தான் கற்றுக் கொள்ளும். அதனால், பரீட்சை வைப்போம், கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சி கொடுப்போம். போட்டிகள் மூலம் திறமைகளைக் கொண்டுவருவோம்” என்று கணவனுக்கு உந்துதலைக் கொடுத்தாள். ஆனால், இந்த சமுதாயம் இருக்கிறதே, இனிப்பாய் இருந்தால், விழுங்கிவிடும். கசப்பாய் இருந்தால், துப்பிவிடும். இவள் முயற்சிகளின் முடிவுதான் என்ன………

      உள்ளுரமொடு உற்றறிவது பெருத்தது

     கண்ணுறக்கமும் உடலயர்ச்சியும் வெறுத்தது

     பல்கலைகளும் பயில்பயிற்சியும் வளர்ந்தது

     நல்மதியுடன் மாணவர்களும் மகிழ்ந்தனர்

     நல்லறிஞர்கள் நாட்டுயர்வினர் நாடவே

     பற்கலையுடன் விழாவொன்று நடந்தது

     விளையாட்டுடன் விருதுகளும் கிடைத்தன.

 அன்று ஆடுகளம் அலங்கரிக்கப்பட்டது. 6 வயதிலிருந்து 18 வயதுவரை மாணவர்கள் தத்தமது திறமைகளை வெளிக்காட்ட ஒரே விதமான சீருடையுடன் காட்சியளித்தனர். மாணவர்களுடன் அவரவர் பெற்றோரும் ஆளுக்கொரு உதவிகளை வரதேவி பிரித்துக் கொடுத்ததற்கு அமைய சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தனர். வரதேவியும் சீடி(CD)யாய் சுழன்றாள். அவள் சுழற்சியில் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரவாரமானது. பரிசில்களை வழங்க டுசல்டோப் நகரத்தின் நகர மேயர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேச்சை மொழிபெயர்க்க  சுமனா தயாராகியிருந்தாள். கிழமையில் ஒருநாள் அதுவும் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும் அந்தநாளே விளையாட்டுப்பயிற்சிகளும் பெற்றோர்களுடன் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போதாத காலத்திலும் போதுமான பயிற்சி பெற்ற மாணவர்கள் தமது அபார திறமையை விளையாட்டுக்களில் காட்டியிருந்தார்கள். இலங்கைவிட்டு இடம்பெயர்ந்த   பெற்றோர்கள் தமக்குக் கிடைக்காத வசதியும் வாய்ப்புக்களும் கலை, கல்விப் பேறுகளும் தமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் கொண்டுள்ளார்கள். தம் நேரங்களையும் பொழுதுகளையும் அவர்களுக்காகவே அர்ப்பணிக்கின்றார்கள்.

        தடைதாண்டல் ஓட்டத்தில் முதல் பரிசைப் பெற்ற அனுவின் தாயார் ரதி ஓடிவந்தாள்.

 “ரீச்சர்….. மிக்க தேங்ஸ் ரீச்சர்…. அடுத்தமுறை இதைவிட பெரிதாக விளையாட்டுப் போட்டி வைக்க வேண்டும். என்னமாதிரி அனு ஓடினாள். நான் நினைத்துப் பார்க்கவே இல்லை”

 அடுத்த பக்கம் பரிசுக்கோப்பையை கையில் உயர்த்தியபடி ஓடிவந்த மதுராங்கன், “ரீச்சர்……இஞ்சபாருங்கள்…..” என்று காட்டிக் குதியாய்க் குதித்தான்.

 வரதேவியும் “கெட்டிக்காரன்…எனக்குத் தெரியும்தானே. நீதான் இந்த கப் எடுப்பாய் என்று. அடுத்தகிழமை ஸ்கூலுக்குக் கொண்டுவா! என்று கூறினாள்.

திரும்பும் முன் பிள்ளைகள் எல்லோரும் தமக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களுடன் ஐஸ்கடைக்குள் நுழைந்த பிள்ளைகள்போல் ரீச்சர்…ரீச்சர்…ரீச்சர்….என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைப் பகிர்ந்தபடி இருந்தார்கள். வரதேவியும் அவர்களை அவர்கள் மனம் மகிழும்படி வாழ்த்தினாள். அவ்வேளை அவள் கண்கள் பரிசுகள் இன்றி ஒதுங்கிய பிள்ளைகளை நாடியது. அவர்கள் அருகே சென்று அவர்களைச் சாந்திப்படுத்துவதில் இறங்கினாள்.

 “இஞ்சபாருங்கள்… ஏன் இப்படி சத்தமில்லாமல் ஒதுங்கி நிற்கிறீங்கள். இன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்த பரிசுகள், அடுத்த வருசம் உங்களுக்குக் கிடைக்கும். திறமை என்பது சிலருக்கு மட்டும் சொந்தமானது இல்லை. அது எல்லோருக்கும் இருக்கிறது. பயிற்சி மூலமே ஒவ்வொருவரும் தமது திறமையை வெளிக் கொண்டுவர முடியும்….. எமக்குக் கிடைக்காது என்று மனதினுள் நினைத்துவிட்டீர்கள் என்றால், நிச்சயம் அது கிடைக்காது…… கிடைக்கும் என்று நீங்களும் முயற்சி செய்தால், இதைவிடச் சிறப்பாக விளையாடுவீர்கள். பாருங்கள்…. அடுத்த வருசம். இன்னும் சில விளையாட்டுகள் நடத்துவோம். பயிற்சிகள் செய்வோம். உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைப் பழகி நீங்களும் பரிசுகள் எடுக்க வேண்டும். இப்படி ம்….என்று இருந்தால், ரீச்சருக்குக் கவலையாக இருக்கும். சரியா?… இப்போது சிரியுங்கள்…எங்கே சிரியுங்கள் பார்ப்போம்…..”என்று கூறி ஒவ்வொருவருக்கும் கைகளில் இனிப்புகள் வழங்கினாள். விளையாட்டுப்போட்டி நினைத்ததைவிட சிறப்பாகவே நடந்தேறியது.

   எல்லோரும் விடைபெற வீட்டிற்குச் சென்ற கரனும் வரதேவியும் களைப்பாறினார்கள்.

                விளையாட்டுப் போட்டி நிறைவேறும் காலங்களில் வரதேவி கரன் இரத்தபந்தமொன்று, இரு உயிர்களின் சங்கமத்தால் உருவாகிய உயிரொன்று, தம் அன்பான திருமணபந்தத்தின் அத்தாட்சிக் கருவொன்று, வரதேவி கருவறையில் சுருண்டு மிதந்து வளர்ந்து வந்தது. வரதேவி முத்தொன்றை தாங்கிய சிப்பியாய் கருப்பையினுள் வளரும் தன் வாரிசைச் சுமந்தாள். தாயின் கருப்பை நோக்கி நீந்திச் செல்லும் விந்தணுக்களில் ஒரேயொரு விந்தணு மட்டும் பெண்ணின் முட்டைக்கருவுடன் இணையும்போது ஆண்விந்துக்கலங்களின் தலைப்பகுதி சினைமுட்டையின் சவ்வுப்பகுதியை  உடைத்துக் கொண்டு உட்செல்கிறது. விந்தின் வாற்பகுதி வெளியே துண்டிக்கப்பட தலைப்பகுதி உட்செல்ல முட்டையின் சவ்வு இறுக்கமடைந்து மூடிக்கொள்ளும். வேறு எவ்வித விந்தணுவும் உட்செல்லாதவகையில் சவ்வு இறுக்கமடைந்து கருவைப் பாதுகாக்கும். விந்தணுவும் முட்டைக்கருவும் இணைந்து ஒரு கலமாகிப் பின் 12 மணித்தியாலங்களில் இரண்டாகப் பிரிந்து பின் 12 மணித்தியாலங்களில் நான்காகப் பிரிந்து 6 நாள்களின் பின் சிறு உருண்டையாக உருமாறும். இப்போது பலோப்பியன் குழாயிலிருந்து கருப்பை நோக்கிக் கரு நகர்ந்து செல்கின்றது. 7 நாள்களில் தன்னை நோக்கி வந்த கருவைக் கருப்பையானது ஓரிடத்தில் தங்கவைக்கின்றது. அங்கிருந்து அழகான குழந்தையாய் வளர்த்தெடுக்கிறது. இயற்கையின் அற்புதநிகழ்வை எண்ணும்போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. அங்கிருந்து கரு உருவாகி வெளியுலகு காண வெளியேறும் வரை தாய் படும் வேதனையைத் தாயே அறிவாள்.

                    குழந்தை என்பது ஒரு பெண் என்ற உறவைத் தாய் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துகின்ற உறவு, எப்படியென்று எடுத்துரைக்க முடியாத தாய்ப் பாசமென்ற உணர்வைத் தாய்க்கு ஊட்டும் உறவு, குடும்பத்தைக் குதூகலமாக்கும் உறவுள, தந்தையின் பெயரைத் தாங்கி அவர் காலங்கடந்தும் அவர் பெயரை நிலைநிறுத்தும் உறவு. இவ்வுறவு ஒரு ஆண்குழந்தையாய் கருவறையுள் வளர்வதை வரதேவி ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்தாள். தன் மகன் ஆரோக்கிமாய் வளரத் தேடித்தேடி ஆகாரங்களை வரதேவிக்குக் கரன் ஊட்டினான். வரதேவி விரும்பிய உணவுகளை அவள் நண்பர்கள் தயாரித்துக் கொடுத்தனர். குழந்தை பிறக்கும் வரை தாய் அநுபவிக்கும் வலி என்பது வார்த்தைகளால் வடிக்கமுடியாத வலி. இவ்வுருவை உடல் ஏற்கும்வரை வயிற்றைக் குமட்டி ஒவ்வாமையை உணர்த்தி வாந்தி வடிவமாய் உணவுகளை வெளியேற்றும். வயிற்றினுள் தன் கூடப்பிறக்காத வேறு ஒரு இரத்தபிண்டம் உறுப்புகள் தாங்கி வளர்ந்து வருகின்றபோது, அத்தாயின் உடல் அவ்வுருவை ஏற்றுக் கொள்ளும்வரை அந்நியமாய்க் கருதும், 10 மாதங்களும் அவ்வுடலினுள்ளே இருந்து தாயுடனே வளர்ந்து உடலாலும் உணர்வாலும் இணைந்து பிணைந்து வளரும்போது ஏற்படும் இரத்தபாசம் தாய்ப்பாசமாயும் பிள்ளைப்பாசமாயும் பிரதிபலிக்கும். இத்தாயுணர்வு பெற்ற வரதேவி குழந்தைவளர வளரத் தன் கடமைகளிலும் கண்ணானாள். வலி ஒருபுறமானாலும் குழந்தையின் எதிர்பார்ப்பு வலியை இதமாக்கியது. அவள் வாழ்வுக்கு பிடிப்பை ஏற்படுத்தியது.

               “இஞ்ச பாருங்கப்பா…. என்னால் முடியாது என்று யார் சொன்னார்கள்? பிள்ளை பிறந்தால் கொஞ்சக்காலம் தமிழ்பாடசாலைக்குப் போகமுடியாது. இப்படியே தள்ளிக் கொண்டு போயிடும். பிள்ளைகளுக்கும் ஆசை காட்டிவிட்டோம். அவர்களும் நல்லாப் பழகிட்டார்கள். காலங்கடத்தாது கலைவிழாவைச் செய்வோம். நமக்குத்தான் பெற்றோர்கள் உதவி இருக்குத்தானேப்பா….. துணிந்து செய்வோம். எல்லாம்  நல்லா நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது”  என்று வரதேவி கரனை வற்புறுத்தினாள்.

                  அவள் முயற்சியின் பயனாய் கலைவிழாவிற்கான ஆயத்தங்களை கல்வி பயிலும் பெற்றோர்கள் சகிதம் இருவரும் மேற்கொண்டார்கள். கலைவிழாவிற்கான கூட்டம் கூட்டப்பட்டது. வரதேவி எழுந்தாள்

 “இங்கே நாங்களெல்லாம் கூடியிருப்பது. எங்கள் பிள்ளைகளுடைய கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காகவே… இங்கே பல நிகழ்ச்சிகளைப் பார்த்தபோது இவ்வாறான தவறுகள் எங்கள் நிகழ்ச்சிகளில் நடக்கக் கூடாது என்று ஒவ்வொருமுறையும் நினைப்பேன். அதனாலேயே இந்தக் கூட்டத்தைக் கூட்டினேன். பிள்ளைகள் அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பற்காகவே சேர்த்தோ தனித்தோ நிகழ்ச்சிகளை எடுத்தேன். 3 மணித்தியாலத்தில் எங்களுடைய கலைவிழா நடந்தேற வேண்டும். இடையில் ஒரு இடைவேளை விடவேண்டும். இந்த இடைவேளையில் மட்டுமே உணவுப் பொருள்கள் விற்பதற்கான நேரத்தை ஒதுக்குவோம்.  எந்தநேரமும் விற்பனை நடந்தால், எல்லோரும் நடந்து கொண்டே திரிவார்கள். கேவலமாக இருக்கும். பிள்ளைகள் கஷ்டப்பட்டு பழகியதை எல்லோரும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். உணவுப் பொருள்கள் சம்பந்தமான வேலைகளுக்கு ஒரு குழு அமைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட நேரத்திற்கு விழா ஆரம்பிக்க வேண்டும். முதல் நிகழ்ச்சிக்குரிய பிள்ளைகள் வரவில்லையானால், அடுத்த நிகழ்ச்சிக்குரிய பிள்ளைகளை விடுவோம். எல்லோரும் நேரத்திற்கே தயாராகிவிட வேண்டும். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இடைவேளை இன்றி வரல் வேண்டும். உடைமாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் நமது சிரிப்பு மன்னன் ரவி நகைச்சுவை செய்வதற்கு ஆயத்தமாக வரவேண்டும். ஏற்றுக் கொள்ளுகின்றீர்கள்தானே ரவி! உங்களுக்குத் துணையாக வேறு ஒருவரை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வருவதற்கு இடையூறு ஏதாவது ஏற்பட்டால், அவர் தனியாக நிகழ்ச்சி நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். வருகின்ற போது பார்வையாளர்கள் எப்படி வந்தார்களோ, அதேபோலே போகும்போதும் சளிப்பில்லாமல் முழுத் திருப்தியுடன் வீடு திரும்பக் கூடியதாக நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். 3 மணித்தியாலத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது கைதட்டி ஆரவாரமாய் முழுமகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துவோம். சோம்பி இராது. தேவைப்படும்போது எழுந்துநின்று கைதட்டி முழுஆர்வத்துடன் பிள்ளைகளை ஆர்வப்படுத்துவோம். எங்கள் பாராட்டே அவர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாகும். இவற்றில் கவனம் எடுத்து எங்கள் கலைவிழா நடைபெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது இவ்வாறு செய்வதிலுள்ள இடையூறுகள் பற்றி நீங்கள் தெரிவிக்கலாம்….”என்று நீண்ட விளக்கத்தைத் தந்த வரதேவி அமர்ந்தாள்.

                  தொடர்ந்து எழுந்த பிரதீபன் “ரீச்சர் இப்படித்தான் எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் ஒழுங்கு செய்கின்றார்கள். ஆனால், நிகழ்ச்சிகள் நடைபெறும் போது எல்லாம் மாறிவிடும்” என்றான்

                  தொடர்ந்த கீதன் “அதற்குக் காரணம் சாப்பாட்டுச் சாமான் விற்பனை. அடுத்தது மண்டபம் நிறையட்டும் என்று காத்திருப்பது. நிகழ்ச்சியை சரியான நேரத்திற்குத் தொடங்குவதற்கு பார்வையாளர்கள் காலதாதமாக வருவதே காரணமாக இருக்கின்றது” என்றான்.

                  தொடர்ந்த கீதா “பார்வையாளர்கள் வரும் நேரத்தை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் நிகழ்ச்சி செய்தால், இப்படித்தான் காலம் முழுவதும் எங்கள் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு நிகழ்ச்சி சொன்ன நேரத்திற்கு ஆரம்பித்தால் இனிமேலாவது நேரத்திற்கு வருவதற்கு ஆரம்பிப்பார்கள். என்னுடைய சந்தேகம் இடைவேளையின்போது உணவுப் பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்வது எப்படிச் சாத்தியமாகும் என்பதே…..” என்று கூறி கீதா அமர வரதேவி எழுந்தாள்.

  “நமது நோக்கம் உணவு விற்பனை அல்ல. நிகழ்ச்சி மட்டுமே. 3 மணிநேரம் பொறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமே. செவிக்கு உணவில்லாத போது சிறிதளவு வயிற்றுக்கும் தரப்படும் என்று நினைத்துக் கொள்வோம். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சிலவற்றைக் கொள்வனவு செய்து கொண்டுவந்தால், பிள்ளைகளுக்குப் பசி எடுக்கும் போது அவற்றைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்……” என்றாள்.

         வரதேவி ஆலோசனைகளின்படி கலைவிழா களைகட்டட்டும் என அனைவரும் சம்மதிக்க நிகழ்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டது. மற்றைய நடைமுறைகளைகளும் பேசி அனைவரின் தீர்மானங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

         பின் பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. கரிதாஸ் நிறுவன மண்டபத்தில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. முற்றுமுழுதான ஒத்துழைப்பை பெற்றோர்கள் வரதேவிக்கு வாரிவழங்கினார்கள். ஒவ்வொருவரும் செய்து வந்த தின்பண்டங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டன. கவிதை சொல்வதும், நாடகம் நடிப்பதும், பாடல்கள் பாடுவதும், நடனம் ஆடுவதும் என நிகழ்ச்சிகள் விரிந்து கிடந்தன. சிறகு விரித்த சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான சத்தத்துடனும் ஆட்டஓட்டத்துடனும் அலங்காரஅறை நிறைந்திருந்தது.

         வரதேவியும் அடிக்கடி வயிற்றினுள் உதைக்கும் மகனை கண்களை மூடிக்கொண்டு தன் கைகளால் தடவிக் கொள்வாள். மீண்டும் துடிப்புடன் கலைவிழா வேலைகளில் ஈடுபடுவாள். வரதேவியினுடைய வயிறும் அளவுக்கு அதிகமாகவே பெருத்திருந்தது. உயரம் குறைந்தவர்களுக்கு வயிறு இப்படியே காட்சியளிக்கும் என்று வைத்தியர் அறிவுறுத்தினார். பெருத்தவயிறு ஓடியாடி வேலைகள் செய்யும் போது இடுப்பிலே வலியைத் தந்தது. கழிவறையினுள் சென்று “அம்மா…..‘‘ என்று சத்தமில்லாது உச்சரித்துச் சில நிமிடங்கள் இருந்து கண்கள் இரண்டையும் இரு கைகளால் இறுக்க மூடி நோவைத் தாங்கிப் பின் வெளியே வந்து பெற்றோர்கள் கேள்விகளுக்கு நிதானமாய்ப் பதிலளிப்பாள். இடையிடையே வருகின்ற வயிற்றுக்குமட்டலைப் பொறுத்துக் கொள்வாள். தன் வேதனை பெரிதென்று போற்றாது. மாணவர்கள் பெருமை காணத் தன்னை அர்ப்பணித்தாள்.

                   அம்மாக்களின் “தலையை ஆட்டாத…., திரும்பு….. என்ற செல்லமெல்லே… கொஞ்சம் பொறுமகள்….. அதுக்குள்ள எங்கே ஓடிட்டாய்…. நில்லுநில்லு… அந்தா அந்தா உன்னைத்தான் கூப்பிடுறாங்கள்… ஓடுஓடு…‘‘ இவ்வாறு சத்தங்களுடன் சந்தைக்கடையான அறையினுள் இருந்து, தம்முடைய பிள்ளைகளை ஆயத்தமாக்கிய பின் ஓடிப்போய் முன்னே இருந்து, அவர்கள் செய்கின்ற நிகழ்ச்சியைப் பார்த்தபின் திரும்பவும் ஓடிவந்து அவர்களுடைய ஆடைகளை மாற்றி, அலங்காரங்களை மாற்றி, அவர்களை ஆயத்தப்படுத்தி மீண்டும் ஓடிவந்து முன்னே அமர்ந்து ஆரவாரமாகத் தொழிற்படும் தாய்மாரைக்காண “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதன் மாண்டுவிட்டான்….”   என்னும் பாரதி வரிகள் கண்முன்னே விரிந்து கிடந்தன. பெற்றோர் வேவ்வேறு தோற்றங்களுடனும் விதவிதமான ஆடைஅலங்காரங்களுடனும் தமது பிள்ளைகளை அலங்கரித்திருந்தனர். தமது ஆசைக்குத் தம்முடைய நேரத்தை அர்ப்பணித்து, கலைவிழா நாளை கண்கவர் நாளாய் கண்டுகழித்தனர். மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. போற்றுவார் போற்ற வரதேவி மாணவச் செல்வங்களின் பெற்றோர்கள் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்து கொண்டாள்.

                                                                   —————

பிரமாண்டமான இவ்விழாக்களும் விளையாட்டுப்போட்டிகளும் நடந்தேறி சூழல்சுற்றங்களின் கண்களும் இக்கல்விச்சாலையிலே மொய்த்தன. அக்கல்விச்சாலையைத் தம்பக்கம் அபகரிக்கத் தமிழ்க்கல்வி நிறுவனம் போட்டா போட்டி போட்டது.  மாணவர்களைத் தம்;பக்கம் இழுக்கவும், அவர் மனதை மாற்றவும், தம் கல்விச்சாலையுடன் வரதேவி வளர்த்தெடுத்த கல்விக்கோயிலை வலுக்கட்டாயமாக இணைக்கவும் பல கஷ்டங்களைக் கொடுத்தது. ஒருநாள்

 “இங்கே பாருங்கள் நீங்களும் நன்றாகப் படிப்பிக்கிறீங்கள். தனியாக ஏன் நீங்கள் கஷ்டப்பட வேண்டும்? உங்கள் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு எங்கள் பாடசாலையுடன் இணைந்து தொழிற்படலாமே?

        என்று மற்றைய தமிழ்ப்பாடசாலை அதிகாரி  வரதேவி வார்த்தெடுத்த பிள்ளைச் செல்வங்களையும் பாடசாலையையும் தம்முடன் இணைத்துத் தமக்குப் பெருமை சேர்க்க மயக்க வார்த்தைகளால் தூபம் போட்டார். வரதேவியோ அன்பென்றால் அடங்கிப் போவாள். சூழ்ச்சியின் சூத்திரதாரிகளை ஏறெடுத்தும் பாராள். நேர்மைக்கு எதிரானவர்களிடம் பொல்லாதவள் என்னும் பட்டம் சுமந்தவள். ஒருவருக்கு நல்லவராகத் தெரிபவர் வேறு ஒருவருக்கு பொல்லாதவராய்த் தெரிவது இயற்கையே. மனிதன் மாறுபட்ட குணங்கள் அவரவர் குணங்களுடன் ஒத்தவர்களை நாடி உறவுகொள்ளும். மறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்களும் ஆதரவாளர்களும் வரதேவி ஆத்மதொழிலுக்கு அடிக்கடி இடையூறுகள் கொடுக்கத் தொடங்கினார்கள். பிரச்சினைகள் தலையெடுக்கத் தொடங்க, வரதேவியும் ஆண்மகவொன்றைப் பெற்றெடுத்தாள்.

         மருத்துவமனையிலே குழந்தை பிறந்தபோது வரதேவி அருகிலேயே நின்று கொண்டிருந்தான் கரன். அவள் படும் வேதனை கண்டு இனி ஒரு பிள்ளை வேண்டாம் என்று முடிவெடுத்தான். பிறந்த குழந்தையைக் கரன் கைளில் தூக்கிக் கொடுத்தாள் தாதி. குழந்தையைத் தன் கரம் தாங்கிய கரன் “தாயும் தந்தையும் வாழ்வில் வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு முழுத்துணையாக பிறந்து வலம்வரக் காத்திருக்கும் கண்மணியே!

                  என விளித்துக் குழந்தையை உச்சி மோந்தான். தந்தையைப் பார்த்துச் சிரித்த பிள்ளையை “என் வரன்! என் வரன்!  என்று வாயார அழைத்தான். தாய்க்கும் பிள்ளைக்கும் எந்தவித இடையூறுகளும் தோன்றவில்லையானால், சுகப்பிரசவமாய்ப் பிறந்த குழந்தையையும் தாயையும் இரண்டாவது நாளே தமது இருப்பிடம் அனுப்புவது மருத்துவசாலை வழக்கம். அதுவரை குழந்தையைத் தமது குழந்தையாக ஏற்றுக்கொண்டு பெற்றதாயைவிட பாசமாய்த் தாதியர் பராமரிக்கும் பாங்கை வரதேவி பார்த்து வியந்து போவாள். பிரசவவலி வந்து துடிக்கும்போது அவள் தலைதடவி அன்பாய் நோவைத் தாங்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளும் பாங்கை நினைக்கும்போது தாயகத்தில் பிரசவ அறையினுள் தன் சகோதரி பிரசவத்தின்போது அழுது புலம்பியபோது ஏறெடுத்தும் பார்க்காத மருத்துவத் தாதியரை நினைத்துப் பார்த்தாள். தன் அருகே நிற்கும் தாதியரின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று உள்ளம் துடித்தது. அவர்கள் கைகள் இரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றி நன்றிப் பெருக்கை தன் நயனங்களால் உணர்த்தினாள்.

  குழந்தையோ

          பஞ்சுடலெடுத்து பார்த்துச் சிரிக்கும் பாலகனாய்

          அஞ்சன நிறத்தானாய் அழகனாய் – அன்னை

          விஞ்சிக் கிடக்கும் மணம் நுகர்ந்து

          நெஞ்சிலே முகம் புதைத்தான்.

 கைகளில் குழந்தை தவழும்போது 10 மாதங்களும் பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்து போம். மறந்துபோம். இதுவே சொல்லவொண்ணா இயற்கை இயல்பு. அதனாலேயே ஒரு குழந்தையைப் பெற்ற அடுத்த வருடமே அடுத்த குழந்தையைச் சுமப்பதற்குத் தாய் தயாராகிவிடுகின்றாள்.

                 அன்றையநாள் கரன் மகன் வரன், தன் வீடு நோக்கிச் செல்லும்நாள். கரன் மருத்துவமனைத் தாதியர் அனைவருக்கும் இனிப்புகள் பகிர்ந்தளிப்பதன் மூலம் தன் நன்றியைத் தெரிவித்தான். அவர்களும் வரன் பிறந்தவுடன் எடுத்த புகைப்படத்தை அட்டைப்பிறேமில் போட்டுப் பிறக்கும்போது இருந்த வரனுடைய நிறை, உயரம், தலைச்சுற்றளவு போன்றவற்றை குறிப்பிட்டு கரன் கையில் கொடுத்தார்கள். ஒரு ஹொட்டலில் இருந்து திரும்பும் மனநிலையுடன் மருத்துவமனை விட்டு விடைபெற்றாள் வரதேவி.

                             குழந்தைக்கும் தனக்கும் சேர்த்தே உணவருந்தினாள். வீட்டிற்கு வந்த அடுத்தநாளே குழந்தை மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டுசெல்ல வேண்டியது ஜேர்மனிய நடைமுறை. அன்றிலிருந்து அக்குழந்தையின் அனைத்து ஆரோக்கிய நடைமுறைகளையும் அந்தக் குழந்தை மருத்துவரே பொறுப்பேற்பார். அவரிடம் முதல்நாள் இருந்து குழந்தையின் சுகநல பிரச்சினைகள் அத்தனையும் பதிவில் இருக்கும். மருத்துவருக்குப் பணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை. தந்தை உழைப்பில்லாது அரசாங்கப் பணத்தில் வாழ்ந்தால் கூட அரசாங்கம் மருத்துவப்பணத்தைப் பொறுப்பேற்கும். இத்தனை வசதிகள் இங்கிருக்க சொந்தநாடு தேடி யாராவது போகச் சிந்திப்பார்களா…. குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் சகல போசாக்குடனும் வளர குழந்தை பராமரிப்புப் பணமாக ஜேர்மனிய அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 600 ஒயிரோக்களை வரதேவிக்கு வழங்கும். இது தவிர பிள்ளை 18 வயதுவரை மாதம் மாதம் குழந்தைக்கு 184 ஒயிரோக்களை நன்கொடையாக வழங்கும். ஜேர்மனி நாட்டில் வளரும் பிள்ளை 25 வயதுவரை கல்வியை மேற்கொண்டால், இப்பணத்தை 25 வயதுவரை கொடுப்பதில் இந்நாடு தயங்காது. அப்பிள்ளை சுயமாகப் பணம் சம்பாதிக்கத் தொடங்கும்வரை இப்பணத்தை வழங்கிக் கொண்டே இருக்கும். இந்நாட்டில் எந்தத் தந்தையும் “கஷ்டப்பட்டு உழைத்து உன்னை வளர்த்தேனே……‘‘என்று பிள்ளையை எதிர்காலத்தில் கேட்க முடியாது. பிள்ளை தந்தையைத் திரும்பக் கேட்கும் “ஓரளவாவது சொந்தம் பந்தமில்லாத இந்த நாடே நான் வாழ பணவசதி செய்தபோது உங்கள் பெயர் சொல்லப் பிறந்த என்னை வளர்க்க எனது பணத்தையும் சேர்த்துத்தானே எடுத்திருக்கின்றீர்கள்‘‘ என்று.

                         “நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது இங்கு தவறு‘‘

              ஆண்டுகள் கடந்தன. அன்புமகன் அடியெடுத்தான், எழுதுகோல் பிடித்தான், வரி தொடுத்தான். பாலர் பாடசாலை நோக்கி அவனது தினசரி வாழ்வு திருப்பம் கண்டது. ஒருபுறம் பாடசாலை, மறுபுறம் தொழில், அடுத்து தாய்ப்பாசத்தின் ஆதாரம், இவ்வாறான வாழ்வின் சுமையில் வாழ்வாதார தொழிலை தன் வசதிக்கேற்பக் கொண்டுசெல்ல நேரமும் பொழுதுகளும் இடமளிக்கவில்லை. பாடசாலை செல்லும் பாலகனை பாடசாலை கொண்டு செல்லவும் வீட்டிற்கு அழைத்துவரவும் வீட்டுவேலைகளை செய்யவும் எனப் பொழுதுகள் கழிந்தன. சுத்தம் செய்யும் மாதாந்திரத் தொழில் நின்றது. மீண்டும் கரன் உழைப்பே தொடர்ந்தது.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.