Part 6

        தொழில் ஒருபுறமும் தன் சேவை மறுபுறமுமென வரதேவி வாழ்வு வசந்தமானது.  சனிக்கிழமைகளில் தமிழ்பாடசாலை வளர்ச்சியில் முழுப்பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டாள். எதிர்கால வாரிசுகளின் தமிழ் அறிவுப் பெருக்கம் அவள் உள்மூச்சாய் சுவாசமானது. பெண்ணை மனைவியாய்ப் பார்க்கும் பண்பினின்று சற்று விலகி அவளை அறிவுடையாள் என்னும் பண்பில் நோக்கும் பாங்கிலே  கரன் தமிழ்பாடசாலையை வரதேவி பொறுப்பிலேயே விட்டுவிட்டான். தன் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தமிழ்பிள்ளைகளின் பெற்றோர் விருப்பப்படி அப்பிள்ளைகளுக்கு வீடுவீடாகச் சென்று ஆங்கில வகுப்புக்கள் எடுத்தான். இதனால் இருவருக்கும் தமிழர் உறவு வலுத்தது. அறிவுடையார் தம் அறிவை மேம்படுத்தி உறவுகளை வலுப்படுத்தி ஆதாயம் பண்ணப் பார்த்தல் இயல்பே. இதன்படி ஆதரவாய் பலருக்கு உதவிகளைச் செய்வதற்கு கரன் தயங்கியதில்லை. அதன் மூலம் தனக்கும் வருவாய் குறையாத வாழ்வை தேடிக்கொண்டது அவர் புத்திசாலித்தனமாய்ப்பட்டது. எதிர்கால வாழ்வை நலமாக வாழ சாஸ்திரம் பார்த்தல் எம்மவர் நம்பிக்கை. இக்கலை கற்ற கரன் இதன் மூலம் வருவாய் பெற்றுக்கொள்ள அவர்கள் அழைப்பின் பெயரில் தெரிந்தவர் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு சாஸ்திரம் பார்த்துச் சொல்லி பணம் சேர்த்தான். பணம் ஒரு கேடு கெட்ட நோய்க்கிருமி. தன்னில் அளவுக்கு மீறி ஆசை கொள்பவர்களை ஆட்டிப்படைக்கும்ளூ அதைத் தேடிச்செல்லும் மனிதனைப் பைத்தியமாக்கும்,   சூழலையும் சுற்றத்தாரையும் நோகடிக்கும், படுகுழியில் விழுத்திவிட்டுப் பார்த்து ரசிக்கும்ளூ பை நிறைய காட்சியளிக்கும் பகட்டாகத் திட்டம்போட்டு வெளி அகற்றும் போது முழுவதுமாகக் கழன்று கொண்டு இன்னும் வேண்டும் என்று எட்ட நின்று கைகாட்டி அழைக்கும்ளூ தேடிப்போக கூடவந்து போகப்போறேன் என்று அடம்பிடிக்கும். அது போகப்போக அதனைத் தேடத்தேட மனிதன் பாடு நோயாளியை விடக் கேவலமாய் இருக்கும். பணம் இருக்கிறதே…. அதனுடன் சரியான முறையில் பழகி அவதானமாகத் தொட்டுக் கொண்டால் மட்டுமே கூடவிருந்து வாழவைக்கும்.

              கரன் பணம் தேட வழிவகைகள் பல அறிந்திருந்தான். தமிழர்கள் தம்மை வெளிப்படுத்துவதில் போதை மிக்கவர்கள். கல்வியால் உயரவேண்டும் என்பதில் ஆசை மிக்கவர்கள். கலைகளால் பிரகாசிக்க வேண்டும். பலருக்கும் தம் பிள்ளைகள் கற்ற கலைகளைக் காட்டி அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் அலாதிப் பிரியமுள்ளவர்கள். இது கரன் வாழ்வுக்கு வசந்தமானது. வழி காட்டியது.

 “அண்ண! கொஞ்சம் வீட்டிற்கு வாறீங்களே….என்ர மோன் ஹீபோர்ட் பழக ஆசைப்படுறான். வந்து சொல்லிக் கொடுப்பீங்களே…..? என்று அழைப்பு வரும். அதற்கேற்ப கரனும் அவரவர் வீடுகளுக்குப் போய் மாதம்மாதம் பணம் பெற்று தன் வசதியைப் பெருக்கிக் கொண்டான்.

           “மன்மதராசா…மன்மதராசா….. கன்னி மனசக் கொல்லாதே…….” இது  கரண் தொலைபேசி அழைப்பு. முற்காலத்தில் வீட்டில் மட்டும் தொணதொணக்கும் தொலைபேசி இப்போது சட்டைப்பைக்குள் இருந்து கூவிக்கூவி அழைக்கும். அது வில்லங்கத்தையும் இழுத்துக் கொண்டுவந்துவிடும். விபரீதத்தையும் காட்டும். சிக்கலிலும் முடியும். சிறப்பாய்ப் பல நன்மைகளும் தரும். அது தேவை. ஆனால், தேவையும் இல்லை. எந்த தொழில்நுட்ப சாதனங்களையும் அவதானமாகக் கையாளும்போதே அதன் பயன்பாட்டைப் பெறமுடியும்.

     “கரன்… என்ர மனிசியும் பிள்ளைகளும் ஸ்ரீலங்காக்கு இந்த வருச சம்மர்ஹொலிடேக்கு போகப்போகிறார்களாம். நீங்கள் மலிவாக ரிக்கட் செய்து கொடுக்கிறீர்களாமே….. ரவி சொல்லிச்சு. எங்களுக்கும் செய்ய வேண்டும்….. எப்பிடி நீங்கள் வர்றீங்களே… இல்லாட்டி நான் வரட்டே….”என்று சதீஸ் தொலைபேசி மூலம் கரனுக்கு அழைப்புவிடுத்தார்.

 “பிரச்சினையில்லை. நான் வீட்டிற்கு வர்றேன்… ” என்று கூறி அவர் அழைப்பின் பெயரில் சதீஸ் வீட்டிற்குக் கரன் சென்றான். அவர்கள் ஆசையுடன் பரிமாறிய உணவுகளை ருசி பார்த்தான். பேசிக் கொண்டிருக்கும்போதே சதீஸூடைய மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

 “சதீஸ் இது உங்கள் மகனா?

 “ஓம் அபிருவர்(Abitur) 13 ம் வகுப்பு படிக்கிறான்”

 “பாருங்கள் சதீஸ் இவன் ஒரு காலத்தில பிரபல்யமா வருவான். குறிச்சு வச்சுக் கொள்ளுங்கள். ஆனால், தான் விரும்பியவளைத்தான் கல்யாணம் செய்வான்” அளந்த பார்வையில் எதிர்காலத்தை அளவிட்டுக் கரன் கூறியபோது

 ஆர்வமடைந்த சதீஸ் மனைவி சாரதாவும் “சாத்திரம் சொல்லுவீங்களே அண்ண….என்ர மகளின்ர குறிப்பையும் ஒருக்காப் பார்த்துச் சொல்றீங்களே….. அவக்கு ஒரு வரனும் சரியாக அமையுதில்லை…”  என்று கேட்டுக்கொண்டாள்.

 கரனும் “குறிப்பைத் தா! தங்கச்சி பார்த்துவிடுவம்”  என்று கேட்டான். சாரதா கொடுத்த குறிப்பைச் சிலமணிநேரம் கணக்கிட்டுப் பார்த்த கரன்

 “என்ன கதைக்கிறாய் பிள்ள. இப்போ ஒரு சம்பந்தம் வந்திருக்க வேண்டுமே… இந்தக் கல்யாணம் பிள்ளைக்குச் சரிவரும் என்கிற பலன்தான் ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கரன் சொன்னபோது சதீஸ் சாரதா தம்பதியினர் அதிர்ந்துவிட்டனர்.

 “இதெல்லாம் சாத்திரத்தில் தெரியுமா? மனிதன் வாழ்க்கை சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொண்டிருக்கின்றது. அது முன்னமே முடிவுசெய்யப்பட்டது போலல்லவா இருக்கிறது” என்று சாத்திரசம்பிரதாயத்தில் எள்ளளவும் நம்பிக்கையில்லாத சதீஸ் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.

                       “ஓமண்ண…. ஒரு சம்மந்தம் வந்திருக்கிறதுதான். ஆனால்…… இது சரிவருமோ என்று யோசிச்சுக் கொண்டிருந்தனாங்கள்…. அந்தப் பெடியன்ர குறிப்பும் இருக்கு அதையும் தாறன் ஒருக்காப் பார்த்துச் சொல்லுங்க… நீங்க கேட்கிற காசைத் தாறம்” என்று சொன்ன சாரதா மகளுக்குப் பார்த்த வரனுடைய சாதகத்தைக் கரனிடம் நீட்டினாள்.

 சதீஸூம் “இந்த ஜேர்மன்காரர் எல்லாம் சாத்திரம் பார்த்துத்தானே கல்யாணம் செய்றார்கள். 10 பொருத்தம் பார்த்துச் செய்துவைத்த எங்கடையளெல்லாம் நல்லா சேர்ந்துதானே வாழுதுகள்… வாழ்க்கையை எப்பிடிப் பொறுப்புணர்ச்சியுடனும் பொறுமையுடனும் வாழவேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்… என்று உன்ர மகளுக்குச் சொல்லிக்கொடு…… பெடியன் எப்படிப் பழக்கவழக்கம் உள்ளவன் என்று கொஞ்சநாளைக்கு பிள்ளையிட அம்மாவா நோட்டமிடு… நடக்கிற வேலையைப் பார்….. அத விட்டுப்போட்டு சும்மா இந்த தேவையில்லாத நம்பிக்கையெல்லாம்……” என்று தன் பக்க நம்பிக்கையைச் சதீஸ் சொன்னான்.

                       “இவர்ர கதையை விடுங்கண்ண… எதுக்கும் ஏடாகூடமாத்தான் கதைப்பார்… கல்யாணம் என்டா நாளும் பார்க்கத்தான் வேண்டும். அதுக்கு எங்கட சம்பிரதாயங்களை விடுறதே…நாளைக்கு ஒன்று நடந்திட்டா நினைச்சு நினைச்சுக் கவலைப்படுறதே…” என்றாள் சாரதாவும்.

 “என்னவாவது பண்ணித்தொலை…” என்றபடி சதீஸ் ஒதுங்கிக்கொள்ள குறிப்புப் பார்த்த கரனும் இருவருக்கும் நன்றாகப் பொருந்துகிறது என்பதற்கான காரணங்களை விளக்கிச் சொன்னான்.

 சதீஸூம் மற்றப் பக்கம் இருந்தவாறு “சந்திரன் பகைக்கிறார். கேது ஒத்துப் போறார். இதெல்லாம் என்ன? இதெல்லாம் பூமியைப் போல கல்லாலும் மண்ணாலுமான கிரகங்கள். அதுக்கும் இங்கேயிருப்பவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்று நோண்டிக் கொண்டேயிருந்தான்.

                                                       கரனும் “சரிதான் சதீஸ். ஆனாலும் கிரகங்களுக்கு சிலசில குணாம்சங்கள் இருக்குத்தானே. இவற்றை மனிதர்கள் போல் பாவனை பண்ணிப் பேசுகிறோம். சந்திரன் இழுத்தெடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கிறதுதானே. பூரணை காலத்தில் கடலலைகளை எப்படி மேலெழும்ப வைக்கிறது பார்த்தீர்களா? பூரணை காலத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கைகள் பாரதூரமாக இருப்பது அறிந்திருக்கிறீர்கள்தானே…….இதேபோல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. சும்மாவா எமது முன்னையோர் இதையெல்லாம் கணித்து வைத்திருக்கிறார்கள். இப்போது விஞ்ஞானிகள் சற்றலைட் அனுப்பி அறிந்த விடயங்களை எங்கள் முன்னையோர் நிலத்தில் இருந்தபடி கணித்திருக்கின்றார்கள். இப்படி எத்தனையோ இருக்கின்றன. எனக்குப் பிரச்சினையில்லை. தங்கச்சி கேட்டதற்கு பார்த்துச் சொன்னேன்” என்றார்.

           சதீஸூம் “இல்ல… கரன் எனக்கு இதில் ஒன்றும் நம்பிக்கையில்ல.. இதொன்றும் பார்க்காத சனங்களும் நிம்மதியா வாழுதுகள்….நாம இதுகலப் பார்த்து நிம்மதி கெட்டுப் போய் இருக்க வேண்டும். நடக்கிறது நடக்கும்தானே என்று இருப்பதுதான் என்ர பொலிசி…. இவக்கு இதுகல்ல நல்ல நம்பிக்க…நான் அதில ஒன்டும் தலையிடுறதில்ல. பிறகு என்னக் கரிஞ்சி கொட்டிக் கொண்டே இருப்பா….” என்றான்.

                 சாஸ்திரம் பார்த்த பணத்துடன் விபரங்களைச் சேகரித்து விமான ரிக்கட்டுக்கான முற்பணத்தையும் பெற்றுக் கொண்டு விடைபெற்றான் கரன். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு அநுபவங்கள். அவற்றின் மூலம் நற்பெயரையும் கெட்டபெயரையும் சிற்சில சமயங்களில் பெறவேண்டிய சூழ்நிலை கரனுக்கு ஏற்படுவது நிஜமாகிறது.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.