Part 3

கணவனின் உழைப்பும் தன்மேல் அவன் கொண்ட காதலின் பிரதிபலிப்பும் ஒன்றாய் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அழகான சோபாவில் காய்த்துப் போன அவன் கரங்களின் அடையாளங்கள் தென்பட்டன. சமையலறை அடுப்பிலே நித்திரையின்றிச் சிவந்திருந்த அவன் கண்கள் தோன்றின. ரம்மியமான தளபாட அழகிலும் உழைத்து உழைத்துத் தேய்ந்து போன அவன் உடற் பொலிவு தென்பட்டது. மனம் இளகிப் போனாள். அவன் இரு கரங்களையும் இணைத்தெடுத்தாள். தன் கண்களில்  ஒற்றிக் கொண்டாள்.

                           “இஞ்ச பாருங்கோ! உங்களின்ர இந்த சின்ன இதயத்துக்குள்ள ஒதுங்க ஒரு இடம் தந்தாலே எனக்குப் போதும் பாருங்க. ஆபத்துக்கு உதவாத பிள்ளை. அரும்பசிக்கு உதவாத அன்னம், தாபத்தைத் தீராத தண்ணீர், தரித்திரம் அறியாத பெண்கள், கோபத்தை அடக்காத வேந்தன், குறுமொழி கொள்ளாச் சீடன், பாபத்தைத் தீராத் தீர்த்தம், ஆகிய ஏழும் பயனில்லையாம். எனவே தரித்திரம் அறியாத பெண்ணல்ல நான். இரத்தம் சிந்தி, நீங்க என்னை ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பெரிசா நான் கனவொன்றும் காணவில்லை. எப்படி நீங்கள் வாழுகின்றீர்கள் என்றெல்லாம் கேட்டு என் கழுத்தை நான் உங்களிடம் நீட்டவில்லை. எப்படி நீங்கள் வாழ்ந்தாலும் உங்களோடு சேர்ந்து வாழவேண்டும். அதுதான் எனக்குச் சந்தோஷம். நான் சொல்லும் ஒரு விசயத்தை நீங்கள் கேட்டே ஆகவேண்டும். உங்கள் உழைப்புக்கு நானும் கைகொடுப்பேன். இருவரும் சேர்ந்து உழைப்போம். உங்களைத் தனியாக கஷ்டப்பட வைக்க நான் விரும்பவில்லை” என்று வரதேவி வினயமுடன் கேட்டாள். அவள் மனமும் உதடும் உதிர்த்த வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்தான் கரன்.

                            “ஆடம்பரமான வாழ்வு வரும் போகும். ஆனால் ஆதரவான உள்ளம் கிடைப்பதும் அரிது, தொடர்வதும் அரிது. நீ எனக்குக் கிடைத்ததே நான் செய்த புண்ணியம். இதைவிட வேறு எதுவும் தேவையில்லை. நீ சம்பாதித்துத்தான் நாம் வாழவேண்டும் என்ற நிலை எமக்கு இல்லை. முதலில் இந்த நாடு பற்றிப் பழகவேண்டும். மொழி தெரியவேண்டும். அவற்றுக்கு முதலில் வழி செய்கிறேன். பிறகு பொழுதுபோக்கிற்கு தமிழ் தொலைக்காட்சி இருக்கின்றது. அதைவிட உனக்குப் பிடித்த இன்னும் ஒரு விடயமும் இருக்கிறது. அவை பற்றிப் பின் பேசுவோம். இப்போது உடை மாற்றிக் கிளம்பு இன்று எமக்கு விருந்தளிக்க என் நண்பர் காத்துக் கொண்டிருப்பார்” என்றான் கரன்.

                      தியாகி என்பவன் கரனுக்கு பல வருடங்களாக நண்பனாக இருந்தவன். தன் குடும்பத்தினருடன் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மனைவி கீதாவும் பிள்ளைகள் ரெபெக்கா, மெலினா இருவரும் கரனில் மிக்க பாசம் வைத்திருப்பவர்கள். தனியனாய் நண்பன் குடும்பத்தினருடன் பழகிய கரன் தன் மனைவியையும் அவர்களுடன் இணைத்து வைக்க அவர்கள் வீட்டிற்கு வரதேவியை அழைத்துச் சென்றான். அழைப்பு மணி அழுத்தியவுடன் ஓடிவந்து குழந்தைகள் கதவைத் திறந்தனர். எந்த வீட்டிலும் விருந்தினர்கள் வருவதாக இருந்தால் முதலில் சந்தோசப்படுவது குழந்தைகள்தான். எந்தப் பெரியவர்களாக இருந்தாலும் தங்களைத்தான் பார்க்க வருவதாக நினைத்துக் கொள்வார்கள். அதுவும் ஐரோப்பியநாடுகளில் வளருகின்ற பிள்ளைகள் என்றால், கேட்கத் தேவையில்லை. இங்கு எல்லோரும் busy ஆக இருப்பதனால், வீடுகளுக்குச் செல்வது அருமை. செல்வதாக இருந்தாலும் அறிவித்துவிட்டே செல்வார்கள். அதனால், அப்பா அம்மா முகங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு  விருந்தினர்கள் வருவதென்றால் படுகுசிதான். அதனாலேயே பிள்ளைகள் இருக்கின்ற வீட்டிற்குச் செல்பவர்கள் அவர்களுக்கு ஏதாவது பரிசுப்பொருள்கள் கொண்டு செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதனையே நோயாளிகள் குழந்தைகளைப் பார்க்கச் செல்பவர்கள் கையுறை கொண்டு செல்ல வேண்டும் என்று பழங்காலத்திலிருந்தே சொல்லப்படுகின்றது.

             கதவைத் திறந்துவிட்டு “அம்மா! கரன் மாமா………..” என்று கத்திக் கொண்டே வெட்கத்துடன் வீட்டிற்குள் ஓடிப் பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்து மறைந்துவிட்டார்கள். கரன் மாமா பழக்கப்பட்டவர் என்றாலும் சேர்ந்தே வந்திருப்பவர் புதுமுகம் அல்லவா! வழமையாக சுட்டிகளின் சுட்டித்தனத்தில் இதுவும் ஒரு முக்கிய நிகழ்வுதானே.

 இருவரும் உள்நுழைய சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கீதா கைகளைத் துடைத்த வண்ணம்

                            “வாங்கள் அண்ணன் வாங்க‘‘ என்றபடி அழைக்க தியாகியும் முகமலர இருவரையும் அழைத்தார். முதற்சந்திப்பு, முதல் நட்பு,  வரதேவி ஜேர்மனி வாழ்வின் முத்தான சந்திப்பு. முதற்பார்வையிலே அனைவரையும் பிடித்துக் கொண்டது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். அது சிலருக்கு ஒத்துப் போவதில்லை. ஆனால், தியாகி குடும்பத்திற்கு நன்றாகவே ஒத்துப் போனது. பிள்ளைகளை அழைத்துக் கரன் கொண்டு வந்திருந்த இனிப்புப் பண்டங்களை அவர்களிடம் நீட்டினான். வாங்கிவிட்டு ஓட நினைத்தவர்களை எட்டிப்பிடித்தாள் வரதேவி. இயல்பாகவே பிள்ளைகள் என்றால் அவளுக்குக் கொள்ளை இன்பம். ஆசையாக அவர்களுடன் அளவளாவிக் கொண்டாள்.

 “களைப்பாய் இருப்பீர்கள் அக்கா! சாப்பிட்டுவிட்டு கதைத்துக் கொண்டிருப்போம்‘‘ என்றாள் கீதா.

 “பொறு பொறு சந்திரனும் வரட்டும்” என்றான் தியாகி.

 சொல்லிக் கொண்டிருக்கும் போதே சந்திரனும் சங்கற்பமாகினான். சந்திரன் கரனுடைய உடன் பிறந்த சகோதரன். சகோதரர் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்திருந்து பின் வேலை நிமிர்த்தம் வேறு நகரத்தில் வாழ்கின்றார். அனைவரும் இணைந்து உணவுண்டு மகிழ்ந்திருந்தனர். சேட்டையும் கும்மாளமுமாக சிரிப்பும் சத்தமுமாக இருந்த அந்தப் பொழுதை நினைத்து நினைத்து வரதேவி மகிழ்ந்து போனாள். எப்படி குதூகலமாக இருக்கின்றார்கள் என்று மனதுக்குள் நினைத்தவளாய்  இந்த வாழ்வும் அவளுக்குப் பிடித்துப் போனது.

ஒன்றாக கதைத்துக் கொண்டிருந்த போது  தியாகி உள்ளே சென்று கிற்றாரை எடுத்து வந்தான். இது கரனுடையதே ஆனாலும், மிகுதியான பொழுதுகள் நண்பனுடன் இணைந்தே இன்பம் காண்பதனால், இந்த வீட்டிலேயே கிற்றார் அடைக்கலமாய் இருந்தது.

 “அக்கா கரன் எப்படி கிற்றார் வாசிப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? மகா கெட்டிக்காரன்”

 “இவர் எனக்குச் சொல்லவே இல்லையே” என்று கரன் முகத்தைப் பார்த்தாள் வரதேவி.

 “தியாகி இன்னும் ஒரு விசயம். வரதேவி பாடுவதில் வரம் பெற்றவள். அவளுடைய பாட்டை நீங்கள் கேட்க வேண்டும்” என்றான் கரன்.

 “சும்மா இருங்கள். இவர் நன்றாகவே புழுகிறார். எனக்குப் பாட வராது…” என்றபடி கரனை முறைத்துப் பார்த்தாள்.

 இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளைகள் ஒன்றாக இணைந்து “பாடுங்கள், பாடுங்கள் அன்ரி‘‘  என்று வறுத்தெடுத்து விட்டனர். கீதா கூட

 “பாடுங்கள் அக்கா. நாங்கள் தானே இருக்கின்றோம்” என்று தெண்டித்தாள்.

 “சந்திரனும் அண்ணி pடநயளந என்று கெஞ்சினான்”

 கரன் “வரா எல்லோரும் கேட்கின்றார்கள் ஒரு பாட்டுப் பாடேன். நான் கிற்றார் வாசிக்கின்றேன். ஒரே ஒரு  பாட்டுப் பாடினால் போதும்” என்று வேண்டிக்  கேட்டான்.

 முடிவில் இணைந்தவளாய் வரதேவி

 “வாவெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே” என்னும் பாடலைப் பாட கரன் கிற்றார் இசைத்தான்.  அனைவரும் பாராட்ட இன்பமாக ஜேர்மனியில் முதல்நாள் பொழுது மறக்க முடியாத பொழுதாக வரதேவிக்கு அமைந்தது.

 வழமைபோல் கதிரவன் வரவு கண்ட ஜேர்மனி கண்விழித்துக் கொண்டது. தம் கடமைகளைக் கடுதியாய்ச் செய்ய மக்கள் துரிதமானார்கள். வரதேவி படுக்கைவிட்டு எழுந்தாள். ஒவ்வொரு வேலைகளையும் கரனிடம் கேட்டபடி தொடர்ந்தாள். குளிப்பதற்காக நீர் சாதாரணமாகத் திறந்தாள். பனிக்கட்டிக்குள் விரல்கள் புதைத்தது போன்ற உணர்வைக் குழாய்நீர் தந்தது. பின் சூடான நீரைத் திறப்பதற்குரிய முறையில் திறந்து உடல்நனைத்தாள். கிணற்றிலே நீர் மொண்டு சாரைசாரையாக உடலிலே வார்த்த இன்பம் இங்கு சவர் தெளிக்கும் நீரிலே அவளுக்குக் கிடைக்கவில்லை. கதிரவன் வரவு கண்டு பாடும் குயிலின் பாடலும் கொக்கரிக்கும் கோழியின் சத்தமும் ம்மே…. என்று கத்தும் ஆடுகளின் சத்தமும் கா….க்கா என்று கத்திக் கொண்டே பறக்கும் காகங்களின் இரைச்சலும் அவளை நாடவில்லை. அமைதி… அமைதி… எங்குமே அமைதி நிலவியது. ஆசைக்கு சாளரம் திறக்க அவளால் முடியவில்லை. முண்டியடித்துக் கொண்டே குளிர்காற்று வீட்டினுள் நுழைய எத்தனித்தது. வெப்பமான ஆடைகளைப் போட்டபின் 10 நிமிடங்கள் சாளரங்களைத் திறந்துவிட்டு காற்றை ஆசுவாசமாக வீடெங்கும் பவனிவரச் செய்து பின் சாளரங்களை இறுக்கமாகப் பூட்டி வெப்பமூட்டியை இயங்க விடும்படி கரன் வரதேவியைப் பணித்திருந்தான். அதன்படியே வரதேவியும் செயல்பட்டதனால் எந்தவித வெளியுலக இரைச்சலையும் அவள் காது உள்வாங்கவில்லை.

                                     ஒருநாட்டினுள் புகுந்துவிட்டால், அந்த நாடு வந்தோம் இருந்தோம் என்று இருக்க அநுமதி தந்துவிடுமா? அந்த நாட்டிற்குள் புகுந்துவிட்டோம். இங்குதான் வாழப் போகின்றோம் என்னும் விபரங்களை நாம் அந்நாட்டிற்குத் தெரிவித்து அநுமதி பெற்றாக வேண்டும். இல்லையென்றால், தேடிப் பிடித்து சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட வேண்டிய குற்றவாளிகளாகி விடுவோம். எமது பல்கணியில் கூடுகட்டும் குருவிகளைக்கூட நாம் விட்டுவைப்பதில்லை. பத்திரமாய்க் கொண்டுசென்று மரத்திலேயும் மரநிழலிலேயும் விட்டுவிடுகின்றோம். எது எங்கே எப்படி வாழவேண்டுமோ அது அங்கே அப்படியே வாழவேண்டும். இவ்வாறே வாழவந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய நாம் வாழவேண்டியது அவசியமாகின்றது.

                                     வரதேவி கரனுடன் தான் வாழ்வதற்கான அநுமதியைப் பெறுவதற்காய் வெளிநாட்டுத் தூதரகம் நோக்கிப் பயணமானாள். பார்க்கும் மனிதர்கள் எல்லாம் வெள்ளைத் தோல்களுடன் பளிச்சென்று இருந்தனர். படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், பேதம் இலகுவாய்க் கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் தோற்றம் அவள் பார்வைக்குப் பட்டது. அவள் முன்னே வந்துநின்ற பஸ் வண்டி கதவைத் திறந்து அவளை அழைத்தது. படிக்கட்டுகளில் பாதம் படிய வேண்டிய அவசியமின்றி எடுத்து வைக்கும் காலடி உடனே உள்நுழையும் படியாக இலகுவாய் இருந்தமை அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. விமான ஓட்டுநனர் போன்று பல அழுத்திகளுக்கு முன் அமர்ந்திருந்த சாரதியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இதமான வெப்பத்துடன் ஆளையாள் முட்டிமோதாமல் இருந்த இருக்கைகளின் இருப்பிடம் இரசிக்கும்படியாக இருந்தது.

             தரிப்பிடம் வந்த வரதேவி விரல்பிடித்து நடக்கும் சிறுகுழந்தையாய் கரண் கரம்பிடித்து வெளிநாட்டுத் தூதரகம் நோக்கி நடந்தாள். போகும் வழியெங்கும் இடங்களைப் பார்த்தபடி நகர்ந்தவள் உரிய இடம் சென்றாள். அங்கு ஒரு இயந்திரத்தின் அழுத்தியை அழுத்தியபோது ஒரு நம்பர் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு ஒரு ஆசனத்தில் அமர்ந்தாள். எதிரே தொங்கிக் கொண்டிருந்த அடையாளப்பலகையில் அறைநம்பரும் அழைக்கும் நம்பரும் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. தனது அழைப்புக்காய் காத்துக் கொண்டிருந்தவள் எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாய் தமது அழைப்புக்காகக் காத்திருந்த மக்களைப் பார்க்கும்போது இலங்கையிலே ஒரு அலுவலகம் சென்றால், அங்கு மக்கள் முட்டிமோதி முன்னேறுவதையும் காது அடைக்கப் பேசுவதையும் ஒழுங்கின்றி மக்கள் அழைக்கப்படுவதையும் நினைத்துப் பார்த்தாள். தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். கண்சுருக்கிய கரனிடம்,

 மெதுவாக “இலங்கை முன்னேற ஆயிரக்கணக்கான வருஷங்கள் இருக்குதுப்பா”

 என்று சொல்லிச் சிரித்துக் கொண்டாள்.

 ஏன் என்று கேட்ட கரனிடம்

 “யாழ்ப்பாணத்தில் அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு நின்றோம். எங்கள் பின்னே அதுவும் நன்றாக பின்னே நின்ற ஒருவரை முதலில் அழைத்தார்கள். ஏனென்று நான் போய்க் கேட்டபோது அது அப்படித்தான் என்று டொக்டர் சொன்னார். எப்படி? என்று நான் மீண்டும் கேட்டபோது நான் டொக்டர்  எனக்கு வேண்டியவர்களை முதலில் அழைப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்றார்.  தாறுமாறாக முடியுமானவரை திட்டிவிட்டு அம்மாவைக் கூட்டிக் கொண்டு வேற டாக்டரிடம் சென்று காட்டினேன்”  என்று மெதுவாக தனது அநுபவத்தை இச்சூழ்நிலையில் ஒப்பிட்டு எடுத்துரைத்தாள்.

 அன்றைய தினம் அவளுக்கு ஜேர்மனியில் வாழ்வதற்கான அநுமதி வழங்கப்பட்டது (aufenthal erlaubnis) .

         முறையாக சட்டரீதியாக அரசாங்க அநுமதி பெற்று வேலை செய்து நல்ல விசா வைத்திருக்கின்ற ஒருவர் தன்னுடைய மனைவியை வேறுநாட்டிலிருந்து ஜேர்மனியில் வாழ்வதற்கு அழைக்கும் போது அந்நாட்டில் இருவரும் வாழக்கூடிய வருமானத்தை கணவன் கொண்டிருப்பாரேயானால், அவர் மனைவி இவ் அநுமதியைப் பெற்றுக் கொள்வாள். இவர்கள் சமூகநல சேவைத் திணக்களத்தில் (Job center ) இருந்து எவ்வித உதவியும் பெற்றுக் கொள்பவர்களாக இருத்தல் கூடாது.

       ஆனால், கணவன் வேலை எதுவுமே செய்யாது அரசாங்கப்பணத்தில் அதாவது சமூகசேவை திணைக்களத்திலிருந்து (Job center ) பெறும் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் கணவனுக்கோ மனைவிக்கோ வரையறுக்கப்பட்ட அநுமதியே வழங்கும். அதாவது 6 மாதங்களுக்கு ஒரு தடவை என்ற வீதத்தில் வாழ்வதற்கான அநுமதியை ஜேர்மனிய அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கும். இவர்களை இவர்கள் நாட்டுக்கு விரும்பிய நேரத்தில் திருப்பி அனுப்பும் சட்டத்தை இந்நாடு கொண்டிருக்கின்றது.

             வரதேவி வரம் பெற்று வந்த காரணத்தால் கரனிடமிருந்து நல் வரங்களையே பெற்றாள். அதன்படி நல் வதிவுரிமையும் பெற்றாள். காரியம் முடிந்தவுடன் அடுத்து மருத்துவக் காப்புறுதி பெறுவதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இடையில் களைப்புத் தீர்க்கக் கோப்பிக் கடையினுள் நுழைந்தனர். சுவையான கப்புச்சினோ (Cappuccino) காப்பியை அருந்திய போது புதியதோர் சுவையை  புரிந்து கொண்ட வரதேவி நா கொத்தமல்லியும் சீரகமும் வேர்க்கொம்பும் போட்டு அரைத்துக் குடித்த கோப்பியின் சுவையை நினைத்துப் பார்த்தது. கோப்பியுடன் ஸ்ரோபரி பழம் வைத்துச் செய்த கேக்கையும் சுவை பார்த்தாள். வேறு சுவை பெற்ற நா தித்திப்பதை அவள் மனம் உணர்ந்தது.

 இச்சமயம் மகளுடன் உள்நுழைந்த சாம்

 “கரன் எப்படி சுகம்? என்றான். அருகே வந்த மகளும்

 “மாமா எங்கே எனக்குப் படம் கீறித் தருவேனென்று சொன்னீங்கள். தாங்கோ படம் கீறித்தாங்கோ” என்று அடம்பிடித்தாள்.

 கரனும் “இங்க பாருங்க சாரு! இந்த அன்ரியப் பாருங்க. இவ நேற்றுத்தான் இலங்கையில் இருந்து வந்தவ. hallo சொல்லுங்க. இவவுடைய வேலைகள் எல்லாம் முடித்தவுடன் உங்கள் படத்தைக் கீறித் தருகிறேன். சரியா‘‘ என்றான்.

 வரதேவியைப் பார்த்த சாருவும் “ஓகே…..” என்றாள். அருகே இருந்த சாம்.

 “அது பாருங்க சாருவைப் பார்த்துப் படம் வரைவதாக கரன் சொல்லியிருந்தான். அதுதூன் கரனைக் கண்டவுடன் சாருவும் அடம்பிடிக்கின்றாள். எப்படிப் பிரயாணம் எல்லாம்….”என்று கேட்டான்.

 “பிரச்சினையில்லை…. இடம்தான் புதிது. இனித்தான் பழக வேண்டும் ….”என்றாள்.

 “நேரம் கிடைக்கும் போது எங்கள் வீட்டிற்கும் வாருங்கள். நான் சாருவை மக்டோனால்ஸ்க்குக் கூட்டிப் போக வேண்டும்” என்று கூறியபடி விடைபெற்றார்கள் இருவரும்.

 கரனுடைய மற்றைய நட்பையும் இன்று சந்தித்தாள். மற்றைய திறமையையும் அன்று கேட்டாள். இவருக்குள்ளே இத்தனை திறமைகளா என்று மனதுக்குள் பெருமைப்பட்டாள். ஒருவரைப் பார்த்து வரையக்கூடிய அபாரதிறமை இவருக்குள் இருப்பதை நினைக்க நினைக்க மகிழ்ச்சியும் கரன்.3 மேல் இருக்கும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்தது. கலைகள் மனிதனுக்குக் கிடைப்பது கடவுள் கொடுக்கும் வரமல்லவா!

வருகின்ற காலங்களில் எவையெல்லாம் வரா கரனிடமிருந்து அறிந்து கொள்ளப் போகின்றாளோ

 அடுத்து மருத்துவக் காப்புறுதி பெறுவதற்காக கரன் பதிவு செய்திருக்கும் A.O.K என்று அழைக்கப்படும் (Abkürzung für Allgemeine Orts-Krankenkasse)   மருத்துவக் காப்புறுதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றான். இக் காப்புறுதி நிறுவனம் 1894 ஆம் ஆண்டு முதன்முதலாக நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் தமது பங்குப் பணத்தைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். மருத்துவரிடம் செல்லும் போதோ மருந்துகள் கொள்வனவு செய்யும் போதோ மருத்துவசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ள போதோ ஏற்படுகின்ற அனைத்துச் செலவுகளையும் இந்நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும். நோய் காணும்போது நாம் இக்காப்புறுதி நிறுவனத்திற்கு செலுத்துகின்ற பணத்தை விட மேலதிக செலவுகளை பெற்றுக் கொள்ளலாம் இல்லையேல் நாம் குறைவான நோய்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் செலுத்துகின்ற பணத்தைவிட குறைந்த செலவுகளைப் பெறலாம். நாம் செலுத்துகின்ற பணம் எமக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ பயன்படுத்தப்படும். எல்லைமீறிய தாங்கவொண்ணாச் செலவுகளைச் சில நோய் தந்துவிடும் அப்போது இக்காப்புறுதிப் பணம் எமக்கு மிக உதவியாக இருக்கும். இதை ஜேர்மனிய அரசாங்கம் மனித உரிமை மேம்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தி மிகப் பிரபல்யம் அடைந்துள்ளது. இதனால், வறிய மக்கள் மிக இலாபம் அடைகின்றார்கள். இவர்களால் இக்காப்புறுதிப் பணம் செலுத்தமுடியாத நிலைமையில் இவர்களைப் பராமரிக்கின்ற சோசல் நிறுவனம் இவர்களுக்கான பணத்தைச் செலுத்தும்.

 வரதேவியும் இக்காப்புறுதி நிறுவனத்தில் தன்னைப் பதிவு செய்து அதற்கான அட்டையைப் பெறுவதற்கான அநுமதியைப் பெற்றாள். முக்கிய கடமைகள் இரண்டும் முடிந்த இரண்டாம் நாள்ப்பொழுது வீடுவந்ததும் வராததுமாக உருபார்த்து உரு வரையும் உன்னதக் கலை தேர்ந்த தன் கணவன் வண்ணம் காணத் தவித்தாள்.

 மெல்லத் தன் கை விரல்களால் கரன் சட்டைப்பொத்தானைத் திருகியபடி

“நான் ஒன்று கேட்பேன் செய்வீங்களே” என்றாள்

 “என்ன இந்த மகாராணிக்கு வேண்டும். இனி நீதானே எனக்கெல்லாம். நீ கேட்டு நான் ஏதாவது செய்யாமல் விடப் போகிறேனா? வருகின்ற காலங்கள் வசந்தமே நீ வாழப் போகும் வாழ்க்கையும்  வசந்தமே. கேள் முடியுமோ முடியாதோ முயற்சிக்கிறேன்”

 “இல்லை……”தயங்கினாள். பின் ஒருவாறாக

 “நீங்கள் ஒருவரைப் பார்த்து அப்படியே வரைவீர்களாமே. என்னைப் பார்த்து வரைய முடியுமா? என்று கண்சிமிட்டியபடி தன் ஆசையை வெளியிட்டாள்.

 “இதில் என்ன சந்தேகம் வரைந்தால் போயிற்று. நிச்சயமாக. ஆனால், உன் கண்ணைப் பார்த்தால் அவை பேசும் கதைகளும் அல்லவா என்னைத் தொல்லை செய்யும். பறவாயில்லை. கலைஞன் கட்டுப்பாடு என்றுமே கலையக் கூடாது வரா. உன் படம் எங்கள் வீட்டுச் சுவரில் விரைவில் தொங்கும். சரிதானே‘‘

 “ம்….” என்றபடி வரதேவி மகிழ்ச்சி கரன் கன்னத்தில் தடம்பதித்தது.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.