Part 2

வரதேவி வாகனத்தினுள் நுழைந்தவள். இருக்கையில் அமர்ந்தாhள். கைவிரல்கள் அதற்குள் விறைத்துவிட்டன. மூக்கின் நுனி ஊசியால் குத்துவது போன்ற வேதனையைத் தந்தது. பல் கெட்டியது. ஆனாலும் கரன் அணைப்பின் கதகதப்பில் சிறிது ஆறுதலடைந்தாள். மௌனமாக வந்தவள் மெதுவாக வாய் திறந்தாள்.

                     “இதென்ன இப்படிக் குளிர்கிறதே! இந்தக் குளிருக்குள் எப்படி உங்களால் வேலை செய்யமுடியும்? எப்படி நீங்கள் இவ்வளவு காலமும் இங்கு வாழ்ந்தீர்கள். இது என்ன வாழ்க்கை. மனுசன் வெளியிலே போகத்தான் முடியுமா? கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

 சிரித்தவண்ணம் கரனும்

                        “வரா! இதுதான் நானே மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். இந்த மாரிகாலம் இருக்கிறதே… இது வெள்ளையருக்குக் கடவுள் கொடுத்த தண்டனை என்று. கோடையில் அரைகுறை ஆடையில் அலைவார்கள். மாரியில் உடலே தெரியாது உடை அணிவார்கள். ஆனாலும், குளிர் காலம் என்று அஞ்சியிருந்தால், ஐரோப்பியர்கள் இந்தளவிற்கு முன்னேறியிருப்பார்களா? அவர்கள் நாடுகள் வளர்ச்சி கண்டிருக்குமா? ஆரம்பத்தில எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், அதுவே போகப்போகப் பழக்கமாகப் போய்விட்டது. என்னைப் பற்றி மட்டும் நான் நினைத்திருந்தால் போர்த்திக் கொண்டு படுத்திருந்து விட்டு அரசாங்கப் பணத்தில் வாழ்ந்திருப்பேன். ஆனால், அரசாங்கப் பணத்தில் வாழ்பவர்கள் மனைவியை சட்டபூர்வமாக அழைக்க முடியாது. நீயும் கள்ளத்தனமாக வந்து ஊர்ஊராகக் கஷ்டப்பட்டிருக்க வேண்டும். அதை நினைக்க உனக்கு முன் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் இந்தப் பனியாய் உருகிப் போய் விடும்” என்று அன்பொழுகக் கூறினான்.

    இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த வரதேவி தன் உள்ளத்தைத் தன் கைகளில் ஏற்றித் தன் கைகளால் கரனுடைய மடியிலே வைத்து மெல்லத் தடவினாள். அநுதாபம் அவளை ஆட்படுத்தியிருந்தது. வழிவழியாய் பனிப் பூக்கள் போர்த்திய மரங்களையும் வித்தியாசமான கட்டிடக்கலை வண்ணங்களையும் பார்த்துக் கொண்டே பயணம் தொடர்ந்தாள். வழிமுழுவதும் விமானத்தினுள் இருந்து வான்வெளியில் தான்  கண்டு களித்த காட்சிகளைக் கவிதையாய் படம் பிடித்த விதத்தை விளக்கினாள்.

  “இன்னும் கொஞ்சநேரத்தில் வீடு வந்துவிடும் நீ விமானத்தினுள் இருந்து எழுதிய கவிதையை ஒரு தரம் வாசித்துக்காட்டேன்”  என்றான் கரன். இயல்பாகவே கவிதையில் நாட்டம் கொண்டவனல்லவா கரன்.

 “ஐயய்யோ …… இதெல்லாம் ஒரு கவிதையா? என்னால் முடியாது”

 என்று வரதேவி மறுப்புத் தெரிவித்தாள்.

“Please…… Please ….”  என்று கரன் கெஞ்சியபின் வரதேவி தன் கவிதையை வாசித்தாள்.

            வான்வெளியில் சிறகு விரித்ததோர் விமானம்

            வானழகு வடிவு கண்டதோர் உள்ளம்

            வஞ்சியவள் நெஞ்சினிலே வந்ததோர் கானம்

            வரிகள் கொண்டு வடிவமைந்து வந்ததிங்கு கவியும்

            வானுலகு வடிவமைத்த வானவனோ பேரறிஞன்

            வானமதில் வழிசமைத்த பார்மகனோ பேரறிஞன்

            கோலமது காட்டுகின்ற மேகங்களோ கதை கூறும்

            கோடிஇன்பம் காணுகின்ற எண்ணங்களோ கவிபாடும்

            பஞ்சுப் பொதிகள் விஞ்சியிருந்ததாலே

            பஞ்சணையால் அமைந்ததோர் உலகம்

            மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையிலோர்

            மேக ஊர்வலக் காட்சியோ!

            படையெடுத்துப் பவனிவரும் மேகக் கூட்டங்கள்

            படைக்கவிருக்கும் மகஞர்தான் பரமனுக்கோ!

            மண்ணிலே காணுகின்ற கோலங்களின் பாடுதான்

            விண்ணிலே படுத்துகின்ற தென்னவோ!

           விமானியோ தொட்டிலொன்று ஆட்டுகிறான்

            விண்வெளியோ சொர்க்கம் ஒன்று காட்டுகிறதே!

            சொற்களால் வடிக்கவொண்ணா அழகுணர்ச்சி

            சொர்க்கமென்ற ஒரு சொல்லில் அடங்கிற்றோ

            வர்க்கபேதம் அங்கில்லை, வழிப்பறித் தொல்லையில்லை

            வாகனத்தடையில்லை, வழியேதும் புரிவதில்லை

            கண்ணைக் கட்டிவிட்டதுபோல் கடக்கின்றோம் நாட்டைவிட்டு

            கண் கண்ட தெய்வமாய் கரைசேர்க்கின்றான் விமானியும் தான்

வரதேவி வாசித்து முடித்தாள். கரன் மெய்மறந்து போனான். வரதேவி நீ மனைவியாகக் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன் கவிநயம் என் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்கிறது.

 “இந்த சந்தோசம் நீங்கள் தந்ததுதானே. நீங்கள் இல்லாவிட்டால் இப்படி சுகம் எனக்குக் கிடைக்குமா. விமானப்பயணம் எனக்குக் கிடைத்திருக்குமா? இந்தக் கவிதையும் வடித்திருக்க முடியுமா?

என்றாள் வாஞ்சையுடன். பேசிக் கொண்டிருக்க வீடும் வந்தடைந்தது.

                    அவள் வாழத் தன்னால் அழகுபடுத்திய அந்த அற்புத அரண்மனையாம் வீட்டிற்குள் வரதேவியைக் கரன் அழைத்து வந்தான்.

 ‘எப்படி, வரா! இந்தவீடு உனக்குப் பிடிச்சிரிக்கே?” அன்பொழுகக் கேட்டான் அவள் கணவன் கரன். ஆனால், வரதேவியோ வீட்டை நோக்கினாள். நெஞ்சிற்குள் ஏதோ ஊசிபோல் குத்தியெடுத்தது போன்ற உணர்வு ……….

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.