Part 18

                      வானொலி வரதேவிக்குப் பெற்றுத் தந்த சொந்தங்கள் அவள் மனநிலையில் மிகச்சிறந்த மாற்றத்தைக் காட்டியிருந்தது. அன்று தலையை உயர்த்த முடியாது முயற்சித்து எழுந்தாள். எழுந்தவள் ஏதோ மூளை வெற்றுக் கடதாசிபோல் வெறுமையாய் இருப்பதை உணர்ந்தாள். கிறுக்கி வைத்த நினைவுகள் அழிந்து போனதுபோல் ஒரு தவிப்பு மனதுள் ஏற்பட்டது. தொதைபேசி புத்தகத்தில்  N என்னும் எழுத்தின் பக்கம் திருப்பினாள் நிலாவின் இலக்கத்தைப் பெற்றாள். வழமையாகப் பேசும் அழைப்பெண். அதுகூட மனதில் நிற்பதாக இல்லை. என்ன வாழ்க்கை இது என்று நினைத்தவண்ணம் இலக்கத்தை அழுத்தினாள்.

 “ஹலோ!….நான் நிலா பேசுகிறேன்”

 “நிலா! எப்படி இருக்கிறீங்கள். எனக்கு மூளைக்குள் எதுவுமே தெரியவில்லை. மந்தமாக இருக்கிறது. அதுதான் உங்களுடன் கொஞ்சம் கதைக்க வேணும் போல் இருக்குது…..”

“ஏன்? வானொலி கேட்கவில்லையா?

 “இல்லை நிலா… எனக்கு ஏஹ்…. எதிலுமே பிடிப்பில்லாமல் இருக்கு. விசரா இருக்கு….அவர்கள் கதைப்பது எதுவுமே விளங்குதில்லை”

 “ஏன் அப்படிச் சொல்றீங்கள். நேற்று நல்ல பாட்டொன்று பாடினீங்களே. நல்ல குரல் வளம் உங்களுக்கு. அதை உள்வாங்கமுடியாமல் இருந்தது. எனக்கு முழுவதுமாக கேட்கவேண்டும் போல் இருக்கிறது. பாடிக் காட்டுவீர்களா?

 “இப்பவேயா….?

“ஓம்… ”

 “இல்லை நிலா. எனக்கு எதுவுமே இப்போது வருகுதில்ல”

 ஆனால் நிலா விட்டுவிடுவதாக இல்லை. வரதேவி மனநிலையை மாற்ற வேண்டிதன் அவசியம் அவள் புரிந்து வைத்திருக்கின்றாள்.

 “எங்கே எழுதிய பாட்டை வைத்திருக்கின்றீர்கள். எடுத்து வாருங்கள் முடிந்தவரை பார்த்துப் பாடுங்கள். பிளீஸ்….”

 அவள் வேண்டுதலைத் தவிர்க்கமுடியாமல் எழுதி வைத்திருந்த பேப்பரை எடுத்து வந்து

 மனமுருகி நின்றேன் மயில் முருகா உந்தன்

 வடிவழகு கண்ணில் தெரிகிறதே

 தந்தைக்கு உபதேசம் செய்த முருகா

 பழத்தாலே பழனி மலை வந்த முருகா

 மனமுருகி நிற்கும் மாந்தர்க் கருள்பவனே

 அன்பே வடிவான ஆறுமுக வேலனே

 மனதின் வாய்மை வழி நடப்பேன்

 மகிழ்ச்சியில் உலகை உயர வைப்பேன்

 புதுமைகள் காணத் தினம் உழைப்பேன் – உந்தன்

 அருளின் பெருமையை அறிய  வைப்பேன்

 மனமுருகி நின்றேன் மயில் முருகா உந்தன்

 வடிவழகு கண்ணில் தெரிகிறதே

 வரதேவி அழகாகப் பாடினாள். அத்தெளிவுடன் பழையநிலை பெற்றாள். நிலா வெற்றி பெற்றாள்.

 “வரதேவி எவ்வளவு அழகாகப் பாடுறீங்கள். சங்கீதம் படித்தீங்களா? அற்புதமான வரிகள். இவ்வளவு அழகாகப் பாடல்கள் எழுதுறீங்களே…… இந்த வானொலித் தளம் உங்கள் வாழ்க்கைக்கு முக்கிய தளம். உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுங்கள். முடியாது என்ற வேளை எனக்குத் தொலைபேசி எடுங்கள். உங்களுக்கும் ஆறுதலாக இருக்கும். ஷஷஉங்களுக்குப் பிரயோசனம் இல்லாத எந்த வேலையையும் நீங்கள் செய்யாதீர்கள்” என்று மகாத்மாகாந்தி கூறியிருக்கின்றார். அதனால் இவர் இப்படிச் சொன்னார் அவர் அப்படிச் சொன்னார். என்பதை எல்லாம் விட்டுவிட்டு இந்த வானொலி உங்களுக்குத் தேவை. உங்களுக்கு மருந்து. உங்களுக்குப் பொழுதுபோக்குச் சாதனம். உங்கள் நேரத்துக்குத் துணை. அதனால் அதனோடு வாழுங்கள்.

         ஆழமான அறிவு படைத்த நீங்கள் முடியாது என்று படுத்துவிடாதீர்கள். யார்தான் நோய் இல்லாது வாழுகின்றார்கள். எலும்பும், சதையும் நரம்பும் இரத்தமும் நீரும் இணைந்தே படைக்கப்பட்டது இந்த உடம்பு. இரசாயணம் கலந்த உலகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அழகான பூக்களே மலருகின்ற போது அலர்ஜி என்னும் நோயைத் தருகின்றது என்றால் சுவாசிக்கும் காற்றைத்தான் நாம் நம்ப முடியுமா! வாழும்வரை உலக வாழ்க்கையை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். வானத்துக்குக் கீழே வீடுகட்டி விட்டு வானம் இடிந்துவிழும் என்று பயப்படத்தான் முடியுமா!

 நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நிலா வாயிலிருந்து கொட்டியதும் மனப்பேழயில் அப்படியே அள்ளி எடுத்தாள் வரதேவி. எங்கிருந்தோ உற்சாகம் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது.

 “கரன் வந்துவிட்டாரா வரதேவி?

 “இல்லை நிலா. அவர் எப்போது வருவார்? எங்கே நிற்கிறார்? இதெல்லாம் சொல்லிக் கொண்டா இருக்கிறார். இதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் அவருடன் தேவை கருதிப் பேசுவேன் ”

 “நீங்கள் சொல்வது தவறு வரதேவி. அதுமட்டும் போதுமா. அதற்கும் மேல் அவர் ஏதோ உங்களிடம் எதிர்பார்ப்பார் அவர் உங்கள் கணவன்”

 “அந்தச் சொந்தம் எப்போதோ முறிவடைந்துவிட்டது”

 “இல்லை. நீங்கள் உங்கள் பெயரை மாற்றலாம். ஆனால் கணவன் என்ற உறவை மாற்ற முடியாது. இனி உங்களுக்குப் பிடிவாதம் போதும். இப்போது அவர் ஒரு கால் இழந்து நோய்வாய்ப்பட்டு வேதனையில் இருக்கின்ற நேரம். நடந்ததை எல்லாம் மறந்து அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் வந்தபின் அவருடன் மனம் திறந்து பேசுங்கள். நீங்கள் ஒன்றும் சின்ன வயசுக் காதலர்கள் இல்லை. ஊடல் கொள்வதற்கும், வஞ்சம் தீர்ப்பதற்கும். நினைவுகள் அப்படியே இருந்துவிடுவதில்லை. அது அழிக்கப்படும் அறிவுப்புப்பலகையாகும். அதை அறிவிப்புப்பலகையாக்குவதும், அழியாத கல்வெட்டுக்களாக்குவதும் அவரவர் மனதைப் பொறுத்தது. இனிமேல் இப்படி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இப்போது வைக்கிறேன். நாளை உங்கள் புதியபாட்டைக் கேட்கிறேன்” என்று கூறிய நிலா குரல் வரதேவி காதிலிருந்து வெளியேறியது.

        வரதேவி தொலைபேசியை நிறுத்தக் கதவு கிறீச்சிட்டு கரன் வரவுக்கு வழிவிட்டது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி உள்நுழையும் கரனை நோக்கினாள் வரதேவி.

 “எங்கே வரன்? பள்ளிக்கூடத்திற்குப் போயிற்றானா?”

 “ ம்…” எந்தவித மறுபேச்சும் வாயிலிருந்து வெளிவரவில்லை. இத்தனைநாள் எவ்வித தொடர்புமின்றி துண்டிக்கப்பட்ட தொலைபேசிபோல் வாழ்ந்த கரனிடம் “எங்கே இவ்வளவு நாளும் போயிருந்தீர்கள்” என்று கேட்க மனம் விரும்பியது. வாய் கேட்கமறுத்தது. வாடி மெலிந்திருந்த அவன் தோற்றம் கண்டு மெல்லிய ஒரு அநுதாபக் கீற்று வரதேவி மனதில் விழுந்தது. ஆனால் மனம் கொண்ட வைராக்கியம் பேச மறுத்தது. தானாகவே உள் நுழைந்து குளித்து உடை மாற்றி வெளியே போகக் கிளம்பிய கரனிடம், முதன்முறையாக அக்கறையுடன்

 “எங்கே போகப் போறீங்கள். சமைக்கப் போகிறேன். சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”

 கல்லுக்குள் ஈரமா? இந்த வரதேவிக்குள் பாசமா? விடுவானா கரன் இந்த சந்தர்ப்பத்தை. பயன்படுத்திக் கொண்டான்.

 “டொக்டரிட்ட போகப் பேறேன் வரா… இலங்கையில் நிற்கும்போது உடம்புக்கு முடியாமல் போனது. இலங்கை இப்போது முன்னம் மாதிரி இல்ல. நன்றாக திருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு அங்கே நிற்கத்தான் விருப்பமாய் இருந்தது. பிறகு வருத்தம் மேலும் கூடிற்றால், வரமுடியாமல் போய்விடும்….” வார்த்தைகளை அடுக்கினான். ஆனால், கேட்பதற்கு வரதேவி நிற்க வேண்டுமே.

 “அவருக்கென்ன எத்தனை வருஷமென்றாலும் போய் நிற்பார். அவருக்கென்ன இங்கத்தையக் கவலை. மனிசர்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லம் நான்தானே பதில் சொல்ல வேண்டும்” மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள். பின் தொடர்ந்து வந்த கரன்

 “வரா! சமைத்து வை. நான் வந்து சாப்பிடுறன். உன்ர கையால சமைத்துச் சாப்பிட்டு எவ்வளவு காலமாயிற்று. இதைத்தானே எதிர்பார்த்து நான் வந்தேன்” என்று கூறியபடி கரன் வெளியேறினான்.

 “வருத்தமென்று ஜேர்மனிக்குத் திரும்பி வந்திட்டு என்ற கையால சாப்பிட வந்ததாம். எப்படியெல்லாம் நடிக்கிறார். இதெல்லாம் ஒரு கதை. இதை நான் நம்பவேணும்” என்று முணுமுணுத்தபடி சமையலறைக் கதவைத் தாளிட்டாள்.

                                                                                       ————

                                                    குடியிருக்கும் வீடானது அடிக்கடிப் பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. அதனால், வீடு மாற வேண்டும். வேறு மனை புகுந்தால் வேற்று எண்ணங்கள் மனதில் பதியத் தொடங்கும். புதியவீடு, புதிய சூழ்நிலை புதிய வீட்டின் மாற்று அலங்காரம், அனைத்திலும் ஏற்படும் மாற்றமானது மனதில் மாறுதலை ஏற்படுத்தலாம் என்ற தீர்மானம் கரன் மனதில் வலுப் பெற்றது. இதை வரதேவியும் வரனும் ஆதரித்தனர். இப்போது ஒரு புதிய முயற்சி முனைப்புப் பெற்றது.

                       பத்திரிகைப் பக்கங்கள் திருப்பப்படுகின்றன. வீடு வாடகைக்கு விடப்படும்……என்னும் விளம்பரங்களைத் தேடித் தேடி மூவரும் பார்த்தனர். இது எமது தராதரத்திற்கு ஒத்துவருமா? வீடு இருக்கும் சூழ்நிலை பொருத்தமாக இருக்குமா? தேடத் தொடங்கினர். அடுத்துவரப் போகின்ற காலத்தை எதிர்நோக்க வரதேவி தயாராகிவிட்டாள். கீதா அறிமுகப்படுத்திய வீடு எடுப்பதற்கு தயாராயினர். விலைகூட ஒத்துவந்தது. சமூகநல நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் தொகையாக இருந்தது. வீட்டு அங்கத்தவர் தொகைக்கு ஏற்ற வீட்டுவாடகைத் தொகையின் கணக்கை சமூகநல நிறுவனம் தீர்மானித்து வைத்திருக்கும். அத்தொகையையே அக்குடும்ப வீட்டுவாடகையாக வழங்கும். அதனால், இவ்வுதவி பெறுவோர் அதற்கேற்ப வாடகையுள்ள வீடே எடுக்கவேண்டியது அவசியமாகிறது. அதிலுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை வரன் விடுத்தான். வீட்டைப் பார்வையிடுவதற்கான நாளும் வீட்டுச்சொந்தக்காரருடன் பேசி முடிவானது.

           குறித்த திகதியில் குறிக்கப்பட்ட நேரத்தில் வீடு எப்படி என்று பார்ப்பதற்காக மூவரும் ஆயத்தமானார்கள். ஆனால், கரனால் விரைவாக படியிறங்க முடியவில்லை. படிகளில் இறங்கும்போது ஒற்றைப்பாதம் நோக் கண்டது.

 “அது கீழ் வீடுதானே அப்பா. நீங்களும் ஒரு தடவை வந்து பார்த்தாலேயே எனக்குத் திருப்தியாக இருக்கும். கொஞ்சம் நோவைப் பொறுத்துக் கொள்ளுங்கள் அப்பா”

 “சரி மகன். நான் வருகிறேன்”

 இப்போது வரதேவி மனதில் இருந்த தைரியம் கரனின் உடலிலோ மனதிலோ இருக்கவில்லை. பெருத்த முயற்சியில் பஸ் ஏறி குறிப்பிட்ட இடம் சென்றார்கள். மூவருக்கும் வீடு பிடித்துக் கொண்டது. இருந்த வீட்டின் ஒரு சுவடு கூட அடுத்த வீட்டில் இருக்க்கூடாது என்ற முடிவில் மூவரும் உறுதியாக இருந்தனர். மனதிலே மிக்க மகிழ்ச்சி. காலமே பதில் சொல்லும் என்பது போல் எதிர்காலத்தின் தென்றல்காற்று கரன் குடும்பத்தினரின் வாசல் தேடி வரும் நாளும் நெருங்கியது என்று மூவரும் எண்ணினர்.

                 வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான பத்திரம் கையெழுத்திட வேண்டியது அவசியமானது. கையெழுத்திட்டுவிட்டால் அவ்வீடு இவர்கள் வாடகைக்கு இருப்பதற்குச் சொந்தமாகிவிடும். அதன்படி கரன் பத்திரத்தில் தன் உரிமைக் கையெழுத்தைப் பதித்தான். வீட்டின் தலைவனாய் முத்திரை பதித்தான். ஆனாலும், கரன் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. தன் குழப்பம் தன் மனைவி பிள்ளைக்குத் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாகக் கரன் இருந்தான். புதிதாகப் புகுந்து வாழப் போகின்ற மனையில் அனைத்துப் பொருள்களும் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் மூவரும் உறுதியாக இருந்தனர். தடயங்கள் காட்டும் மன உழைச்சல் வாழ்க்கையில் என்றுமே வரல் கூடாது என்பதுவே முக்கிய நோக்கமாகும்.

            எறியும் பொருள்களைக் கண்டபடி எறிய முடியுமா? அதற்குரிய நகரசபைக்கு அறிவித்தல் வேண்டும். எறியப்படும் பொருள்கள் எவை என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வறிவித்தலைப் பார்த்த நகரசபையினர்  அப்பொருள்களை எடுத்துக் கொண்டு செல்லும் நாளைக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும். அந்தநாளே பொருள்கள் எல்லாம் வெளியேற்ற வேண்டும். பெற்றோர் செய்வார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதற்கு வரன் என்ன சின்னக்குழந்தையா? தானாகவே அனைத்துக் காரியங்களையும் செய்தான். பிள்ளைகளைத் தனித்துவமாக இயங்க விடும்போது சிறந்த ஆளுமையுள்ள பிள்ளைகளாக வளர்வார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. அவ்வாறே தனித்துவமாகத் தன் கடமைகளைச் செய்து பழகிய வரன் முழுக்காரியங்களையும் பெற்றோர் உதவியின்றி செய்து முடித்தான். பழைய வீட்டை துடைத்துத் துப்பரவு செய்து எப்படி வரும்போது இருந்ததோ அப்படியே உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். புதிய வீட்டில் பொருள்கள் கொள்வனவு செய்து போடவேண்டும். தமக்கு ஏற்றதுபோல் புதிய வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும். வீடு மாறுவது என்பது பெரிய காரியமே. ஆனால், தடயங்கள் ஞாபகங்களை மூளைக்கு மீட்டிக் கொடுக்கும் அரிய மருந்துகள். அதனாலேயே பழைய ஞாபகங்களை இழந்த சில நோயாளிகளுக்கு அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, அடையாளம் காட்டி சில சம்பவங்களை நினைவுறுத்தி பயிற்சிகளைச் செய்கின்றார்கள். இதனை மனம் வைத்தே மூவரும் வீடு மாறும் முடிவை எடுத்தனர்.

            அந்தநாள் வந்தது. வீட்டின் பொருள்கள் எல்லாம் வரன் நண்பர்கள் துணையுடன் வீட்டை விட்டுக் கிளம்பின. என்றோ ஒருநாள் எல்லாம் துடைந்தெறிந்து தனி உடலாய் நாம் செல்லத்தான் போகின்றோம். இதனாலேயே பட்டினத்தார் ஷஷகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே|| என்று கூறினார். எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. இருக்கும்வரை அனுபவிப்போம். இல்லாது போனால் சொந்தமில்லை என்று நினைத்திருப்போம். அநுபவித்த அனைத்தும் வெளியேறுகிறதே என்ற ஏக்கம் மூவருக்கும் இருந்தாலும் இப்பொருள்களை எப்படித்தான் திரும்பவும் வாங்கப் போகின்றோமோ என்ற எண்ணம் மனதில் நிறைந்திருந்தாலும், நடப்பவையெல்லாம் நன்மைக்கே என்னும் எண்ணப்போக்குடன் வெளியேறும் பொருள்களைத் துலைந்த பொருள்களாகக் கருதி வெளியேற்றினர். பொருள்கள் அனைத்தும் வெறுமையானது வீடு.

           மடித்து வைக்கும் 3 கதிரைகள் மாத்திரம் அவையும் புதியவை வீட்டில் ராஜ்ஜியம் செய்தன. படுப்பதற்கான 3 புதிய மெத்தைகள் தரையிலே மல்லாந்து கிடந்தன. நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தன் மகனின் ஆளுமையை நினைத்துப் பெருமையடைந்தவண்ணம் கரன் மெத்தையிலே படுத்திருந்தான். பொருள்கள் மறைந்தன. அவன் நெஞ்சுக்குள்ளே ஒரு பாறாங்கல் வந்து அழுத்தியது. தொண்டைக்குள்ளே இனம்புரியாத ஒரு அரிப்பு துளைத்தெடுத்தது. இருமஇரும நெஞ்சுப்புண் இரணகளமாகியது.

 “வரன்……. வரன்…….” மகனை அழைத்தான்.

 களைப்பில் தேநீர்க்கோப்பையுடன் அமர்நதிருந்த வரன்

 “என்னப்பா….”

 “இங்கே எனக்குப் பக்கத்தில வா…..”

பக்கத்தில் வந்தமர்ந்த மகனை கட்டிப்பிடித்தான். மனதுக்குள் பெருமை. நான் செய்த புண்ணியங்களின் வடிவமே என் மகன் என்று அவன் உள் மனம் உரக்கச் சொன்னது.

“என்னப்பா…”

 “எனக்குச் சந்தோசமா இருக்குடா. இனி சந்தோசமா என்ர கண்ணை மூடலாம். நீ எல்லாத்தையும் பார்த்துக் கொள்வாய் என்ர நம்பிக்கை எனக்கு வந்திட்டு”

 “இப்ப ஏனப்பா இந்தக் கதையெல்லாம்…”

 “இல்ல இல்ல இன்றைக்குக் கதைக்காட்டி என்றைக்குமே கதைக்கமுடியாது போயிடும். இஞ்சபார்…வரன் உன்ர அம்மா பிடிவாதக்காரி. அவவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளும் வருத்தக்காரி. மற்றவர்களுக்காக நீதியற்ற எந்தக் காரியத்தையும் செய்துவிடாதே. மற்றவர்கள் பாவம் கேட்கிறார்களே. இந்த உதவியைச் செய்து கொடுப்பம் என்று நினைத்து எந்தக் கரியத்தையும் செய்யாதே”

 “இப்ப எதுக்கப்பா ? இதெல்லாம். ஆறுதலாப் பிறகு அடுத்த வீட்டுக்குப் போய்க் கதைப்பம்”

 “இல்ல…இல்ல…. என்ற மறுகணமே “ஐயோ …. என்ர நெஞ்சுக்குள்ள தாங்க முடியல்லயே…. மாதாவே…. ” துடித்தான். சுருண்டான் கரன்.

“என்ன செய்யுது…. என்ன செய்யுது…..”அவதிப்பட்டாள் வரதேவி.

 வரனும் ஓடிப்போய் தொலைபேசியில் அவசரசிகிச்சைப் பகுதிக்கு அழைப்பை விடுத்த மறுகணமே அம்புலன்ஸ் வாகனம் வாசல் வந்தடைந்தது. அதிலிருந்து காற்றாய் உள்நுழைந்த வைத்தியர் கரனைப் பார்வையிட்டார். உடனடியாக மருத்துவசாலைக்கு கரனை அழைத்துச் செல்லவேண்டும் என்று கூறிக் நோயாளியைத் தூக்கிச் செல்லும் படுக்கையைக் கொண்டுவந்து கைத்தாங்கலாகக் கரனைத் தூக்கி அப்படுக்கையில் போட்டார்கள்;. வாகனத்துள் ஏற்றினார்கள். வரனும் அந்த வாகனத்திலேயே ஏறிவிட்டான். வாகனம் மருத்துவமனை நோக்கி விரைந்தது.

            என்ன கொடுமை. வீட்டிலுள்ள பொருள்கள் எல்லாம் வெளியகற்றப்பட்டு வீடு வெறுமையான மறுகணமே கரனும் வெளியகற்றப்பட்டான். மனதுக்குள் சொல்லமுயாத ஏக்கம் வரதேவியை வாட்டிஎடுத்தது. கையிரண்டும் படபடவென்று நடுங்கின. காலிரண்டும் வலுவிழந்து சோர்ந்தன. ஏன் இப்படி நடக்கிறது. பயமாக இருக்கிறது. வெறிச்சோடிய வீட்டில் இவள் கண்கள் இரண்டும் ஆந்தைபோல் விழித்திருந்தன. இருண்டு கிடந்த வீட்டினிலே அமைதி குடிகொண்டது. வரன் எப்போது வருவான். என்ன சொல்வான் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இப்போது வரதேவி விழிப்பின் காரணமாக இருந்தது.

             மருத்துவமனையில் கரனை தங்கவைத்துவிட்டார்கள். அதற்கான காரியங்கள் அனைத்தும் முடித்தபின் வரன் வீட்டைஅடைந்தான். அடைத்த தொண்டையிலிருந்து ஆறுதலாக வரதேவி வார்த்தைகள் வெளிவந்தன.

 “என்னப்பா என்ன நடந்தது?

 கண்களோ அவளை அறியாமலே குளமாகின. இந்த வாழ்க்கை என்பது ஒரு ஆச்சரியமே. தாலி பந்தம் என்பது எப்படி மனிதர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று விபரிக்க முடியாத சக்தி வாய்ந்தது. என்னதான் வெறுப்பு மனதில் இருந்தாலும் அத்தனையும் ஒரு நொடியில் சூறாவளிக்காற்றுப்போல் தூக்கி வீசப்படும்.

 “இப்போ பறவாயில்லை. படுத்திருக்கிறார். நாளைக்குப் போய்ப் பார்ப்போம்”

 பிள்ளை பாவம் நன்றாகப் பயந்து போய் விட்டான். வேலைக் களைப்பு ஒருபுறம். தந்தையின் கவலை மறுபுறம். அப்படியே படுக்கையில் விழுந்து உறங்கிவிட்டான்.

 இரவுமுழுவதும் வரதேவி உறங்கவில்லை. மணிக்கூட்டை அடிக்கடி பார்ப்பாள். அவள் பார்வையில் நேரமோ ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் பூமி தனக்குப் பூட்டி வைத்திருக்கும் சுழல் இயந்திரம் சுழன்று கொண்டே இருக்கும் அல்லவா. அதனால் ஜேர்மனி சூரியனைச் சந்தித்தது. வரனுக்குமுன் வரதேவி மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமானாள்.  மகனை எழுப்பினாள். வரனும் தாம் மூவரும் ஒன்றாக நின்று எடுத்த புகைப்படத்தை ஒரு பையினுள் போட்டு எடுத்தான். இருவரும் ஆயத்தமாகிப் புறப்பட்டனர்.

         இதயங்கள் இரண்டும் பேசவில்லை. அமைதியில்  ஆழ்ந்திருந்தன. வார்த்தைகளுக்கு இடமில்லை. உணர்வுகளே மேலெழுந்து நின்றன. மருத்துவமனை வாசற்படியை அண்மித்தனர். கால்களோ வேகமாகின. கரன் தங்கியிருந்தன கதவடி வந்து சேர்ந்தன. வாசற்கதவைப் பார்த்தபடி அவர்கள் வரவுக்காய்க் கரன் காத்திருந்தான். கதவு திறந்தது. காத்திருப்புக் கலைந்தது. இருவரும் அருகே வந்தனர். தனது படுக்கையருகே இருவரையும் அழைத்தான் கரன். மெல்லக் கொஞ்சம் இடம்விட்டு அக்கட்டிலின்மேல் இருவரையும் இருக்க வைத்தான். ஒரு கையால் வரதேவி கையையும் மறுகையால் வரனின் கையையும் பிடித்தான். கலங்கிய வரதேவி கண்களைப் பார்த்தான்.

“கவலைப்படாத வரா…. உனக்கு என்ர மகன் இருக்கிறான். அவன் உன்னைக் கவனமாப் பார்த்துக் கொள்வான்” மகனிடம் திரும்பினான்.

 “வரன்…அம்மாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன்… அவவ நீதான் பார்க்க வேண்டும். அவள் நல்லாக் கஷ்டப்பட்டிற்றாள். என்னைக் கல்யாணம் செய்ததால நல்ல வேதனைகளைக் கண்டிற்றாள். இனி நீதான் அவளைக் கண்கலங்காமக் காக்க வேணும். மாதா கோயிலுக்குப் போ….. அங்கு போய் மெழுகுதிரி கொழுத்திவை. நீங்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. எது நடக்கவிருக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும். யாருக்கும் பாரமாக இனியும் நான் இருக்கப் போவதில்லை. என் ஆசைகள் எல்லாம் நான் தீர்த்திட்டன். என்ர மனிசியும் என்ன நல்லாப் புரிஞ்சிட்டாள். அதுபோதும் இந்த ஜென்மத்திற்கு”  சொற்கள் வெளிவந்தன. கண்கள் கலங்கின. வேதனை விளிம்பில் நின்று தவித்தது.

 “அப்பா… நான் மாதா கோயிலுக்குப் போறன். மெழுகுதிரி கொழுத்துகிறேன். உங்களுக்கு ஒன்றும் நடக்காது. டொக்டர் சொன்னவர். நீங்கள் இப்போ ஓகேயாம். நாங்கள் மூன்றுபேரும் நிற்கிற போட்டோ கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வைக்கிறேன். நாங்கள் எப்பவும் உங்கள் பக்கத்தில் இருப்போம். கவலைப்படாதீங்க….” என்றான்.  வரதேவியும்

 “சும்மா பயப்பிடாதீங்க. உங்களுக்கு ஒன்றும் நடக்காது. புதிய வீட்டிற்குப்  போகவேண்டும். பழைய வாழ்க்கை நாங்கள் வாழவேண்டும். மனதைப்போட்டுக் குழப்பாதீங்க. மத்தியானம் ஏதாவது சாப்பாடு எடுத்துக் கொண்டு வாறன்” என்று கூறிய வண்ணம் மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்துவிட்டுத் தானும் ஒரு நம்பிக்கையை மனதில் நிறுத்திய வண்ணம் வரனுடன் விடை பெற்றாள்.

        கரனும் அவர்கள் கையை இறுகப் பிடித்து முத்தமிட்டு வழியனுப்பினான். அவர்கள் அறையைவிட்டு மறையும் வரை அவர்கள் போக்கை உறுத்துப் பார்த்த வண்ணம் கண்விழித்து இருந்தான். இருவரும் மாதாவின் பார்வைக்கு மெழுகுதிரி வெளிச்சமிட்டனர். மாதா பார்வை தம் பக்கம் திரும்பவே வெளிச்சம் பிரகாசமானது. கரனின் வேண்டுகோளின் படி கரனின் வணக்கதேவதையைத் துதித்தனர். வீடுவந்தடைந்தனர். மதியம் உணவு கொண்டு செல்வதற்கான ஆயத்தங்களை வரதேவி மேற்கொண்டாள்.

               வரதேவிக்கோ மனதுக்குள்ளே ஒரு மாய உணர்வு வந்து அழுத்திப்பிடித்துக் கொண்டு பாடாய்ப்படுத்தியது. அது என்னவென்று சொல்லி விளக்கமுடியாத உணர்வு. சில உணர்வுகள் தோன்றுகின்றன. அது ஏன் தோன்றுகிறது? எதற்காகத் தோன்றுகிறது? என்று விபரிக்கமுடியாது. மனதுள் வந்து ஆட்டிப்படைக்கும். அண்டம் தரும் அபூர்வ உணர்வு. பிணைப்புக்களின் பாச உணர்வு. எங்கேயோ இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்று நடக்கும் போது எல்லை கடந்து இருக்கும் உண்மை பாசம் உள்ளோரை உறுத்தும். இதனால்தானோ என்னவோ விக்கல் வரும்போது யாரோ நினைக்கின்றார்கள் என்று முன்னையோர் கூறுவர். வரதேவியோ மனதுக்குள் சில கேள்விகளைத் தனக்குத்தானே கேட்டுப் பார்த்தாள்.

“என் பிடிவாதத்தை விட்டு அவருடன் சில காலங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கக் கூடாதா? நான் பெரியபிழை செய்துவிட்டேன் போல் இருக்கிறதே”  இவ்வாறு அவள் மனம் அலைஅலையாய் அடித்துக் கொண்டிருந்தது.

                            தொலைபேசி அழைப்புமணி ஒலித்தது. ஓடிச்சென்று வரன் தொலைபேசியை எடுத்தான். காதினுள் நுழைந்த செய்தி கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தான். தொண்டை அடைத்தது. தலையைப் பின்புறம் நோக்கிச் சரித்தான்.

 “ஓ……” என்று கத்தினான். அவன் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்தாள் வரதேவி

 “என்ன…என்ன….என்ன நடந்தது”

 “அப்பா….அப்பா…..போயிட்டார் அம்மா…..போயிட்டார்….”

 விக்கித்து நின்றாள் வரதேவி.

 வெளியேறிய பொருள்களுடன் இணைந்தே கரன் உயிரும் வெளியேறிவிட்டது. புதிய வீட்டினுள் தன் வாசம் வீசாமலே காற்றாய் அவன் உயிர் பிரிந்தது. ஜேர்மனிய வானம் இடிஇடித்து மழை அஞ்சலி செய்தது. கரனின் வாழ்க்கைப் புத்தகத்தின் அத்தியாயத்தின் இறுதி அங்கம் முடிந்துவிட்டது. அலை அடித்து ஓய்ந்துவிட்டது.

v

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.