Part 17

            நாள்களின் நகர்வில் கரனின் தொடர்பு ஏதுமில்லை. ஆனால், கரனையோ எயர்லங்கா விமானம் ஏற்றிக்கொண்டு போய் இலங்கையில் தளம் இறக்கிவிட்டது.  “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்” என்ற பாடல்வரிகள் மனதுள்  ரீங்காரமிட வெப்பக்காற்றின் சுவாசத்துடன் உறைந்திந்த இரத்தஓட்டத்தின் சுறுசுறுப்புடன் சுருக்கம் கண்ட தோல்களின் விரிசலுடன் பளிச்சென்ற பார்வைத் தெறிப்புடன் இலங்கை மண்ணைத் தொட்டான். மனதுக்குள்ளே ஒரு ஆர்வம் எங்கேயோ இருந்து ஓடிவந்து இடம்பிடித்துக் கொண்டது.

            “இது என்நாடு. எனக்குத் தேவையில்லை பிறர் துணை. கவலையின் வாசம் விமானம் ஏறி வரவேண்டும். கையிருப்புக் கரையும்வரை நான் ராஜா. ராஜாதிராஜா. மனதுக்குள் கம்பீரம். கையிலே கைத்தடித்துணை. நேர் கொண்ட பார்வை. பழையது எதையுமே நினைப்பதில்லை என்ற போக்கு. அனைத்து இடங்களுக்கும் போகவேண்டும். அனைவரையும் சந்திக்க வேண்டும்ளூ நினைத்தது எல்லாம் முடிக்க வேண்டும். நிலையில்லா வாழ்வை சுவைக்க வேண்டும். நான் வாழ்ந்த நாள்களும் குறைவு வாழப் போகும் நாள்களும் குறைவதனால் இனிவரும் நாள்களில் நெஞ்சில் வஞ்சம் இன்றி வாழவேண்டும். இன்பம் இணைத்தே மாளவேண்டும்” மனதில் உறுதி கொண்டான் கரன்.

            கொழும்பு சென்று யாழ்நகர் நோக்கிப் பயணமானான். உடலைக் குலுக்கி எடுக்கும் பிரயாணத்தின் அசதியில் உறங்கி தன் ஊரில் விழித்தான். இறங்கிய தரையில் ஒரு தடைவ ஒற்றைக் காலால் உதைத்துப் பார்த்தான். ஆனந்தம் அளவுக்கு மீறிய ஆனந்தம்…..உறவினர் வீட்டில் வாசம் செய்வது முடிவானதால், கடுகதியாய் நுழைந்தான். அவன் முதல் ஆசையது ஆசைதீரக் கிணற்றுநீரை அள்ளி உடலில் வார்க்க வேண்டும். தீர்ந்துவிட்டது இவ் ஆசை. காலைக்குளியலில் கழுவி எறியப்பட்டது ஜேர்மனிய எண்ணங்கள். கரன் ஜேர்மனியில் இருந்து  வந்திருக்கிறார். செய்தி ஈமெயில் போட்டதுபோல் நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் பறந்துவிட்டது. அவர்களும் வந்தார்கள் கரனும் அவர்களைப் பார்க்கச் சென்றான். அனைவரையும் சந்தித்தான்.

 “எப்படிப் போகிறது காலங்கள்? இங்கேயே தங்கிவிடலாமே. திரும்பவும் ஜேர்மனி போகவேண்டுமா? கால் பூட்டியபின் எப்படி இருக்கிறது? ஜேர்மனி பிடித்திருக்கிறதா? இலங்கை பிடித்திருக்கிறதா? அடுக்கப்படும் நண்பர்கள் உறவினர் கேள்விப்பட்டியல்களுக்கு கரன் கூறும் ஒரேமாதிரியான பதில்கள்

  “ஜேர்மனி என்னை வாழவைத்த நாடு. இலங்கை என்னை ஈன்றநாடு. பெற்றதாயைப் பிடித்ததா? வளர்த்த தாயைப் பிடித்ததா? என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்விகள். உண்ண உணவு வாங்கப் பணம் இல்லை என்று நான் இருக்கவிடாது வாழ வைத்த நாடு. வேலைக்குப் போகாமலே பணம் சம்பாதித்தநாடு. பணம் வாங்காமலே எனக்கு வைத்தியம் பார்த்தநாடு. எந்தச் செலவுமின்றி என் பிள்ளையைப் படிப்பித்தநாடு. அந்த நாட்டை நான் இந்த நாட்டுடன் ஒப்பிட முடியுமா! நான் பாசத்தை தேடி இங்கு வருவேன். வசதிகளைத் தேடி அங்கு போவேன். ஆனால் இப்போது என்னுடைய இறுதிப்பயணம் இதுவே என்று என் உள் உணர்வு உணர்த்திக் கொண்டு இருப்பதனால் உங்கள் எல்லோரையும் என் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் நிறுத்தி வைக்க வந்தேன். பனங்கூழ் குடித்தேன் பழையசாதம் சாப்பிட்டேன். வெட்டவெளியிலே பாய் விரித்துப் படுத்தேன். என் மாதா கோயிலிலே மனம் விட்டுப் பேசினேன். என் ஆசை எல்லாம் தீர்த்து வைத்தேன். இரண்டு ஆசைகளைத் தவிர. ஒன்று எனக்குள் மட்டுமே ஒழிந்து போகும் ஆசை. அடுத்த ஆசை வாழவேண்டும். நீண்ட காலம் உலகத்துடன் இணைந்தே ஓடவேண்டும். இது எனக்கு மேலுள்ள ஒருவன் எடுக்கும் முடிவில் அடங்கி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் எல்லோரையும் இறுதியாகச் சந்தித்துவிட்டேன். உள்ளம் இளமையை நினைத்துக் கொண்டாலும் உடல் நோயின் வலிமையை உணர்த்துகிறது. இப்போதெல்லாம் என் மனதுக்குள் ஒரு இனம்புரியாத கவலை வருகிறது. அது என்னவென்று விபரிக்க முடியாது. ஆனால் திடீரென்று தோன்றுகிறது” இதுவே கரன் வாயிலிருந்து உதிர்க்கின்ற வார்த்தைச் சிதறல்கள்.

               கரன் மனதுக்குள் அரித்துக் கொண்டிருக்கும் ஒரு ஏக்கம். அதனை ஆசையென்றும் விளக்கம் தரலாம். வரதேவி மீண்டும் தன் மனைவியாக முழுமனதுடன் தன்னிடம் வரவேண்டும். தன் பிழைகளையெல்லாம் மன்னித்துத் தன்னை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே. மனதுக்குள் ஏற்படும் சில தவிப்புக்களை விபரிக்கமுடியாது. வெளிப்படுத்தினாலும் பிறருக்கு விளங்கமாட்டாது. இவற்றுக்கு வார்த்தை இல்லை என்று நம்புகிறேன். அவ்வாறான ஒரு தவிப்பு. ஒருமுறை வரதேவி அருகே அன்புடன் அமரவேண்டும். அவள் கரங்கள் என் கரங்களைத் தீண்டவேண்டும். ஒரே வார்த்தையில் உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற ஒரு நம்பிக்கை வார்த்தையைப் பேச வேண்டும் என்ற பேராசை கரன் மனதில் இருந்தது. இதைப் பேசிப் பார்த்திருக்கிறான். நடத்திக் காட்டியிருக்கிறான். ஆனால் அவளுக்கு முழுவதுமாக அவனால் உணர்த்த முடியவில்லை. பழுத்துச் சீழ்பிடித்த காயத்தைக் குணப்படுத்த முடியாது. கட்டுப் போடலாம்.

                   உள்ளத்தை மீறிக் கரனுக்கு உள்உறுப்புக்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கின. பழுதுபட்ட நுரையீரல் மதுவாடையில் நனைந்திருந்ததனால் தன் சக்தியெல்லாம் சேர்த்துத் தன் தொழிற்பாட்டைக் கொடுத்தது. அடிக்கடி இரத்தவாந்தி பித்தவாந்திபோல் வெளிவந்தது. நடை மெல்லமெல்லத் தளர்ந்தது. சிகரெட் புகையிலே கறுத்து இறுகிப்போன நுரையீரல் விரிவடைய சங்கடப்பட்டு சுவாசத்தைச் சுதந்திரமாகத் தரத் தயங்கியது. இதனால் காற்றை உள்வாங்கவும் வெளிவிடவும் சுவாசப்பை சுதந்திரம் இழந்தது. மூச்சுவாங்கிய பேச்சு கரனுக்குச் சொந்தமானது. இனியும் இலங்கை தன் இறுதி வாழ்வுக்கு இடைஞ்சல் என்று கரன் உணர்ந்தான். உடனடியாக ஜேர்மனி செல்ல முடிவெடுத்தான். என்னதான் சிறந்த ஞானியானாலும் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது அதைக் காப்பாற்றவே முனைந்து நிற்பார்கள். இதனாலேயே ஆபத்து நேரத்தில் எங்கள் மிதமிஞ்சிய வலிமை மேலெழுகின்றது. நாய் கடிக்க வரும் போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் வகையில் ஓடுவதுபோன்ற  வேகம் தோன்றும். தீப்பிடிக்கும் வீட்டினுள் இருக்கும் போது சாளரத்தினூடாக பாய்வதற்குத் துணிச்சல் வரும். இவ்வாறு உடலினுள் சுரந்து கொண்டிருக்கும் ஓமோன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்குக் கைகொடுக்கும். அவ்வாறே கரனுக்கு ஜேர்மனி செல்லும் எண்ணம் வலிமையடைந்தது. அங்குதான் மருத்துவச்சேவை உலகத்து மருத்துவச்சேவையிலும் மாண்புமிக்கது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதை உணர்ந்த கரன் மீண்டும் ஜேர்மனி வந்தடைந்தான்.

v

Comments are closed.