Part 14

              இந்நிலையில் வீட்டில் தொலைக்காட்சி வரன் வாழ்வின் சகோதரனாய் ஆனது. வீட்டில் அது ஆரவார சாதனமே. வானொலி வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டே இருக்கும்ளூ பாடிக்கொண்டே இருக்கும். அதைக் கேட்பதற்கு யாருமில்லை என்றாலும் யாரோ கேட்கின்றார்கள் என்பதுபோல் அவ்வீட்டில் தன் வேலையைச் செய்து கொண்டேயிருக்கும்.

           தொலைத்தொடர்பு சாதனங்கள் அந்நியமொழி பேசும் நாடுகளில் வாழுகின்ற மக்களுக்கு உற்ற உறவுகள் போலவே தென்படுகின்றன. வீட்டை விட்டு வெளியேறினால் வித்தியாசமான மனிதர்கள் புரியாத பல மொழிகள், ஆரவாரமான பொழுதுகள் அந்நிய உணர்வு. இத்தனையையும் காணும் தமிழர்கள் வீட்டிற்குள் வந்தால் தாயுடன் உறவாடுவதுபோல் தாய்மொழியுடன் உறவாடப் பல தமிழ்மொழி வானொலிகள் தொலைக்காட்சிகள் ஐரோப்பியநாடுகளில் தொழிற்படுகின்றன.

          வானொலிகள் ஒவ்வொன்றும் தத்தம் கடமைகளை தத்தம் விருப்புக்களுக்கு ஏற்றாற்போல் நடத்திக் கொண்டிருக்கின்றன. பாடல்களே நோக்கமாகக் கொண்டவைகளும் செய்திகளை நோக்கமாகக் கொண்டவைகளும் தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தையுடையவையும் என பற்பல நோக்கத்துடன் தமது இலக்குகளை நோக்கித் தமது நிகழ்ச்சிகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. சில வீடுகளில் வானொலிகள் கேட்பதேயில்லை. தொலைக்காட்சிகளுக்கு மாத்திரம் தம் செவிப்புலன் கட்புலன் இரண்டையும் இணைத்து மகிழ்வடைகின்றனர். சில வீடுகளில் தொலைக்காட்சி முக்கியத்துவம் பெறுவதில்லை. வானொலிகளே வீட்டிலுள்ள அறைகள் எல்லாவற்றிலும் ஒலிக்கும் படியான வசதிகளைச் செய்து காற்றலைகளின் மூலம் தமிழர்கள் இன்பம் அநுபவிக்கின்றனர்.

        இவ்வாறே தினமும் காதுநுழை இன்பம் பெறவும், கற்ற இன்பம் பகிரவும் பயன்படும் இலண்டன் தமிழ் வானொலி என்னும் பெயருடன் இயங்கும் ஒரு வானொலி வரதேவி வீட்டில் வலம் வருவது இயல்பு. அதை அவள் கேட்கின்றாளோ இல்லையோ அவ்வீட்டின் ஒவ்வொரு பொருள்களும் கேட்கும். சுவர்களில் அதன் ஒலி பட்டுத்தெறிக்கும். அது வளருகின்ற எதிர்கால வாரிசுகளுக்காகவும் அவர் தம் திறமைகளை வளர்த்து எடுப்பதற்காகவும் இலண்டனிலிருந்து ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் தமிழ்ச்சுவை பருகவும் தம் தமிழறிவை மேம்படுத்தவும் என வயதானோரும் வந்து குவிவது வழக்கமாகப்பட்டது. இதனால் உயர்ந்தோர் பலர். தம் உயர்வுக்காய் இவ்வானொலிக்கு உதவுவோரும் பலர். இதனாலே உலகெங்கும் பல இதயங்களில் நீங்கா இடம்பிடித்த பெருமையுடையது இவ்வானொலி.

                அன்று வரதேவி சூடு பறக்கும் கோப்பிக் கோப்பையை கையில் எடுத்து தனது சோபாவில் அமர்ந்தாள். உதடுகளால் ஊதிய கோப்பியிலிருந்து  பறக்கும் ஆவியானது நடனம் போட்டு bye சொல்லிப் பிரிந்தது. கோப்பியோ அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. உதடுகள் முத்தமிட கோப்பியை உள் அனுப்பிய கோப்பிப் கோப்பை அவள் கரங்களின் பிடியில் அமர்ந்திருந்தது. ஆனாலும் மூளைக்குள்ளே ஒரு வெறுமை. அவள் பதிந்து வைத்த எதையுமே மூளை பக்குவப்படுத்தவில்லை. ஒருநொடியில் வெறுமையை வீழ்த்தி அதன்மேல் அமர்ந்து கொண்டது வானலை. இலண்டன்தமிழ்வானொலி காதினை வருடிக் தானாகவே உள்நுழைய இடம்தேடி இதயம் நுழைந்தது.

              அந்த ஒரு குரல் இதயத்து நரம்புகளை மீட்டியது. இளையவன் மீட்டிய இதயராகம். கவிதை என்னும் வரிகளால் காந்தமாய் வரதேவி இதயத்தை இழுத்தெடுத்தது. ஆன்மாவின் உன்னத ராகங்களைத் தட்டி எழுப்பியது. அக்கணமே அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. சிந்தனை தூண்டப்பட்டது. சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது. வானொலியில் ஒலித்த அந்தக் குரலுக்கும் வரதேவிக்கும் என்ன தொடர்பு. எங்கிருந்தோ தன் குரலால் வரதேவி நோய்க்கு மருந்தான மாபெரும் சக்தி அந்த இளையவன் குரலுக்கு எப்படி வந்தது. ஒலியலையின் சக்தியை வாய் மூலம் வர்ணிக்கமுடியுமா? இந்தப் பிரபஞ்சசக்திக்கு ஆற்றல் மிக அதிகம் என்று சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை.

               காற்றலை வாழ்வியல் கூறும். வாழ்வைக் குதூகலமாக்கச் சிரிக்க வைக்கும். அறிவுக்குப் புதிர் போடும். ஆனால் ஒரு மனம் பேதலித்த பெண்ணை மகிழ வைக்குமா? அழிந்து கொண்டிருக்கின்ற வாழ்வுக்கு ஆறுதல் அளிக்குமா? ஆம் வானொலி கூட சிலருக்கு வைத்தியக் கருவியாகின்றது. மின்னலென மூளையில் பட்டுத் தெறித்த அந்தக்  குரலுடன் அவள் பூரண நிறையறிவு நிரம்பப் பெற்றாள்.

                  யார்யாரோ இதயத்துள் வருகின்றார்கள் போகின்றார்கள். வந்தவர்கள் யாவரும் மனதுள் நிலைத்து நிற்பதுவுமில்லை. நிலைத்து நிற்பவர்கள் தொடர்வதுவுமில்லை. காலஓட்டத்தில் கடந்துவந்த பாதையில் நண்பர்கள் ஆயிரம் நல்லவர்கள் ஆயிரம். ஆனால் நின்று நிலைப்போர் எத்தனை?  இங்கு வரதேவி நோய்க்கு மருந்தான அந்தக் இளையவன் குரலானது வரதேவி என்றும் சந்தித்திராத குரல்.  இதுதான் அலைகளின் தாக்கம் என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றார்களோ! குரல்கூட மருந்தான மாயம் இங்குதான் கேள்விப்படுகின்றோம்.

       எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!

       உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே

       உன் இதயமது இருண்டுவிடும்

       உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்

       உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்

       தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு

       பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை

       கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே

       வீரத்துடன் எழுந்து நடந்து செல்

       உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்

       பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு

       நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்

       மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்

       பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல

       காலத்தை வென்று காவியம் படைக்க

       காலத்தை வென்று காவியம் படைக்க

வானொலியின் குரல் காதுக்குள் சென்று இரத்தநரம்புகளைச் சுண்டிவிட்டது. துடித்து எழுந்தாள். வானொலியின் ஒலியை வீட்டின் ஆட்சி ஒலியாக்கினாள். அவ்வானெலியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் அந்த வானொலிக்குச் சொந்தமான தொலைபேசி இலக்கத்தை மனம் எண்ணும் முன் விரல்கள் வரைந்தன. எண்களை மனதிலும் தொலைபேசியிலும் தட்டினாள்.

 “வணக்கம்…..” என்ற குரல் காதினுள் சென்று மனதுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். வானொலிக்குச் சொந்தக்காரர். பலரின் மூளையைத் தட்டி எழுப்பி வரிகள் மூலம் வாழ்வியலை ஆராய்ந்தெடுப்பவர். தூண்டித்தூண்டி அறிவு விளங்கச் செய்பவர். எதிர்முனையிலிருந்து பதிலில்லாத காரணத்தால் மீண்டும்

 “இருக்கிறீர்களா….?

இதுவரை வானொலிக்கு குரல் கொடுத்துப் பழக்கம் இல்லாத காரணத்தால், பதட்டமடைந்தாள் வரதேவி. வார்த்தைகள் உண்டு வாக்கியம் தொடரவில்லை. சொற்களைப் புணர்ந்து ஒருங்கமைத்து வாக்கியங்களை உருவாக்க மூளை தயங்கியது. பேச்சுக்கலையை முதன்முதல் பழகும் குழந்தைபோல்

 “வண…க்…க….ம்….” என்றாள்.

 “சொல்லுங்கள். காற்றலையில் இணைந்திருக்கின்றீர்கள். புதிய குரலாக இருக்கிறதே? நீங்கள் யாரென்று உங்களை அறிமுகம் செய்யுங்கள். நீங்கள் வானொலியை எப்போதும் கேட்பீர்களா?

 “நான்…நான்….வரதேவி….வரதேவி வரதராஜா. எங்கள் வீட்டில் வானொலி கேட்கலாம்”

 “கவிதை கேட்டீர்களா…? கவிதை பிடித்திருந்ததா….?

 “யாரது……? கவிதை சொன்னவர் யார்……? அதை நான் கேட்கவேண்டும். அந்தக் குரலைக் கேட்கவேண்டும்” வார்த்தையில் தெரிந்த துடிப்பு ஆவலை விளம்பரமில்லாமல் வெளிப்படுத்தியது.

 மூளை தெளிவடைந்தது. வார்த்தைகள் உயிர் பெற்றன.

 “எனக்குள் அச்சடித்த மொழியை என்னிடமிருந்து இலகுவில் அழித்துவிட முடியாது. உங்கள் உணர்வுகளுக்குச் சேவை செய்யும் ஊடகமாகிய மொழியை பாதகமில்லாமல் பதிந்து வைத்திருக்கும் ஞாபகப்பலகை நானே. தேவைப்பட்டால் அட்சயபாத்திரம்போல் அள்ளிவழங்குவேன். அழித்துவிடமாட்டேன்” என்று அழுத்திச் சொல்லிய மூளை அவளுக்காகத் தொழிற்படத் தொடங்கியது.

 மீண்டும் உரிமையாளர் நிகழ்ச்சித் தொகுப்பில் தன் கடமையை ஆற்றத் தொடங்கினார். புரிந்தது அவருக்கு. அவள் மனநிலையின் மயக்கத்தை நன்றாகப் புரிந்து கொண்டார். எத்தனை ஆண்டுகள் இத்தகு மனித மனங்களுடன் வானொலிக்கருவி கொண்டு அளந்தெடுத்திருக்கின்றார்.

 “கோபி என்னும் சிறுவன் தந்த கவிதையைத் தான் நீங்கள் கேட்டீர்கள். அதில் நீங்கள் உள்வாங்கிய வரிகளை உங்கள் உள்ளத்தைத் தொட்ட வரிகளைச் சொல்லுங்கள். கேட்போம். ஆயிரக்கணக்கான மக்கள் செவிவழி நுழைகிறது இவ்வானொலி. உங்கள் கருத்துப் பலரைச் சென்றடையட்டும்” என்று மீண்டும் அவள் வார்த்தைகளுக்கு அறிவிப்பாளர் தூபம் போட்டார்.

 ஆனால் வரதேவியால் தொடர்ந்து பேசமுடியவில்லை. ஆனாலும்

 “எனக்கு சரியாகச் சொல்லமுடியவில்லை. அந்தக்குரலைக் கேட்டேன். அந்தக்குரல் என்னை மீட்டுத்தந்துள்ளது. இத்தனை நாள்களும் நானாக நான் இல்லை. என்னையே நான் அறியேன். உங்கள் கேள்விக்கு எப்படிப் பதில் என்னால் தரமுடியும். ஆனால், இந்த வசியக்குரல் என்னுள் இணைந்ததனால், தொடந்து பேசுவேன். இந்த வானொலி எனக்கு உயிர் கொடுத்துள்ளது. அந்தக்குரல் என்னுள் இணையவேண்டும். தயவுசெய்து மீண்டும் ஒருமுறை அந்தக்கவிதையை ஒலிபரப்புவீர்களா?

மூளைக்குள் பிரகாசித்த சுடர். வெளிச்சத்தை வீசவேண்டுமானால் இதமான அந்தக் குரலுடைய சக்தி செலுத்தப்பட வேண்டும் என்று நிச்சயமாக வரதேவி எண்ணினாள்.

 மீண்டும் கோபியின் கவிதை வானலையில் வரதேவி விருப்பத்திற்கேற்ப வலம்வந்தது. இப்போதெல்லாம் வரதேவிக்கு மருந்து மாத்திரைகளை விட வானொலிச் சத்தம் சுகமாய் இருந்தது. காற்றலையில் அவள் குரல் வீசப்படுகிறது. கவிதைகளாய் அவள் எண்ணம் வெளிப்படுகிறது. பாடல்களாய் அவள் குரல் தெளிவடைகிறது. வானலை உறவுகளின் சொந்தம் பெருகுகிறது. ஆயினும், அடிக்கடி வந்து போகும் ஆதாரபுத்தியின் தடுமாற்றத்தில் அவள் சிலசமயங்களில் தடுமாறிப் போவாள். எதிர்காலம் என்ன சோதனைகளை வேதனைகளைத் தரப்போகின்றதோ எனத் துடித்துப் போவாள். சரியான முறையில் முழுவதுமாகத் தன்னால் வளர்க்க முடியாது போன தன் மகனை எண்ணி வேதனைப்படுவாள். நேர்மையற்ற வாழ்க்கைத் துணைவன் நிலை கண்டு ஆக்கிரோஷப்படுவாள். அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் நோயின் தாக்கத்தில் அக்கினியாவாள்.

           என்னையே நான் அறியேன் – என்

           இதயத்து வேதனை புரியேன் – பழைய

           நிலையது நினைவில் வருவதனால்

           மனதில் நிம்மதி மலர்வதெப்போ?

 இப்போது வரதேவி வரம் இழந்த தேவியானாள். சோகங்கள் என்றும் தொடர்வதில்லை. அடிக்கடி இன்பங்களும் வந்து போகும். இது இயற்கை கற்பிக்கும் பாடம். வாழ்வின் அர்த்தமும், மகிழ்ச்சியும் ஆழமான அன்பிலேயே வரும். காற்று மனதுக்கு அவசியம் போல் இன்பமான வாழ்வுக்கு நல்ல தொடர்பும் உறவும் தேவை. அன்பு செய்து உரிமை பாராட்டி வரவேற்புணர்வு தர ஒருவர் இருக்கும் போது மகிழ்ச்சி பெருகும் அந்த இன்பமான வாழ்க்கையை நோக்கி  நம்பிக்கையோடு  நடக்கிறாள் வரதேவி.

v

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.