Part 12

                                                                                          sa

மருத்துவமனையில் உடலுக்கு உரமூட்டும் திரவகம் செலுத்தப்பட்டது. தனியாய் இருக்க ஒரு அறை தரப்பட்டது. தாயொரு பக்கம் தந்தையொரு பக்கம் மகனொரு பக்கம் தவிக்கின்ற நிலைதான் இங்கே…..

                  மருத்துவமனை வரதேவிக்கு ஒரு ஹொட்டல் அறையாய் காட்சியளித்தது. தனியே ஒரு அறை. அங்கு தேவையான தளபாடங்கள், பார்ப்பதற்கு ரி.வி பேசுவதற்கு தொலைபேசி அங்குள்ளோர்  சேர்ந்து உரையாட வரவேற்பறை. உணவுண்ண ஓர் அறை. விருந்தினர் வருகை தந்தால் அவர்களை உபசரிக்க ஓர் அறை. தாதியரை அழைக்க படுக்கையருகேயே அழைப்புமணி, வேளாவேளைக்கு உணவு தினமும் படுக்கை புதுப்பித்தல் போன்று அத்தனை சுகங்களும் உள்ளடக்கிய வைத்தியசாலை அறை வரதேவி உடல்நலத்திற்கு ஏற்றதாகவே பட்டது.

               அனைத்துக் கடமைகளும் முடித்த வரதேவியின் மாணவிகள் இருவரும் விடைபெற்றனர். மொழி புரியாத நாட்டில் இவ்வாறான இடங்களில் மொழிபெயர்ப்புக்கு ஆள் தேவை. இத்தேவையை நிறைவேற்றிய இருவரும் விடைபெற அறையினுள் அமர்ந்தாள் வரதேவி. அவள் அங்கங்கள் தாங்கிய வேதனை அமைதி கண்டது. சுவரினுள் மாட்டப்பட்டிருந்த ஒர் சிலுவை மட்டும் அங்கே கர்த்தர் பட்ட வேதனையை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. ஆனால் சிறிது நேரத்தைக் கடத்தியிருப்பாள் அதன்பின் அந்தச் சிலுவை அவளுக்கு அகங்கோரமாய்க் காட்சியளித்தது. அதிலிருந்து தன்னை நோக்கி வரும் ஒளியைத் தன் வாய் மூலம் வெளியகற்றும் காற்றினால் இலவம்பஞ்சை ஊதித் தள்ளி விளையாடும் பிள்ளைபோல் ஊதிஊதி துரத்தித் துரத்தி விட்டாள். நரக வேதனையே அங்கு கிடைத்தது. அவள் நாடி வந்த மனஅமைதி மீண்டும் அவளை விட்டு வெளியேறியது.

           அறையினுள் அவள் நடிக்கும் நாடகத்தை தாதியர் தெரிந்து கொண்டதுதான் எப்படி என்பதை வரதேவி புரிந்து கொள்ளமுடியாதபடி மூளை மங்கியது. தன்னிலையைத் தான் உணர இடுப்பிலே ஊசி பாய்ச்சப்பட்டது. இவ் ஊசியினால்த் துடித்துப் போனாள். பொருத்தமானது இவ்வூசியே என்று தெரிந்த தாதியர் தொடர்ந்து இதனையே பயன்படுத்தினர். நிறுத்தும்படி வேண்டிக் கேட்டாள். தாயாய்த் தாங்கும் தாதியர் அதன் முக்கியத்துவத்தை அவளுக்கு எடுத்துரைத்தனர். ஒரு குழந்தைபோல் அவளைப் பராமரித்தனர். இடுப்பு ஊசி அவளுக்கு நிரந்தரமானது. அதுவே நோய்க்கும் மருந்தும் ஆனது.

          அன்று தாயைப்பார்க்க வரன் ஆவலுடன் மருத்துவமனை வந்தடைந்தான். கூடவே வந்த ஜேர்மனியப் பெண்  வரனை அணைத்துக் கோண்டே அழைத்து வந்திருந்தாள். இந்தப் பெண்தான் தற்போது வரனை பராமரிப்பவர். கின்டர்கார்டனில் கற்பிக்கும் ஆசிரியையாகிய இவர், அன்பும் ஆதரவுமான பெண். தாய் குணமாகும்வரை வரனைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தாள். வரதேவி ஆசைப்பட்டபடி பொருத்தமான இடத்தில் வரன் வளரத் தொடங்கினான். ஓடி வந்து தாயை அணைத்துக் கொண்டான் வரன்.

        ஊருக்குள் உலாவும் தந்தை பற்றிய சர்ச்சைகளும் தெரியாது, சிறைக்குள்ளே சிதைந்து போகும் தந்தையின் நிலைமையும் அறியாது, தாயின் தலைக்குள்ளே நடக்கும் பிரளயமும் விளங்காத இந்தப் பிஞ்சு மனம் கொண்ட வரன்

 “அப்பா எப்போ அம்மா வருவார்….” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

 ஊருக்குள் பலருக்கு என்ன ஊறு விளைவித்தாலும். தன் மகனுக்குக் கரன் அன்பான தந்தையே. தந்தை பாசம் இல்லாக் கல்நெஞ்சக்காரன் இல்லையே கரன். அன்பும் பாசமும் நிறைந்த உள்ளம் கொண்டவன்தானே. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் பலர் குணத்தையே மாற்றிவிடும் என்பது உண்மையே. பொல்லாத காலமும் பொருந்தாத ஆசையும் இன்று சிறையிலே கரன் வாழ்வைச் சிதைக்கிறது.

 வரதேவியும் தனக்குள்ளே இருக்கும் வெறுப்பை வெளிக்காட்டாது.

 “வந்திடுவார்…இன்னும் கொஞ்சநாளில் வந்திடுவார்….” என்றாள்.   என்னதான் மாற்றான் தாயிடம் பாசம் பெற்றாலும், பெற்றோரிடம் பெறும் பாசத்திற்கு ஈடாகுமா! சிலமணிப்பொழுதுகள் பசுவிடம் சேர்ந்த கன்று பிரிந்து சென்றது.            தாய்ப்பசு பாசத்திற்காய்த் தவித்தது.

                                                                          ————

               நாள்கள் கடந்தன. ஓரளவு சுகமான நிலையில் மருத்துவமனை வரதேவி வீடு செல்ல அநுமதி தந்தது. மருந்துகளைத் திருநீற்றுப் பொட்டலமாய் எடுத்துக் கொண்டு காலைமாலை தரிக்கும் விபூதியாய் உட்கொள்ளவேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. அவளைப் பராமரிப்பதற்காக துருக்கி இனப் பெண் எமல்  என்பவரும் நியமிக்கப்பட்டார். காலை வீடுவந்து வரதேவியுடன் பகலெல்லாம் வாழ்ந்து வீட்டுக்கடமைகள் அனைத்தும் முடித்து இரவில் வீடு திரும்புதல் அவள் வழக்கம். வரதேவியை வெளியே அழைத்துச் செல்வாள். அவள் கவனத்தைத் திசை திருப்புவாள். அவளோடு கூடவே இருப்பதற்கு சமூகநல பாதுகாப்பு அலுவலகம் எமலுக்கு வேதனம் வழங்கியது.

               அன்று சுகவீனம் காரணமாக எமல் கடமைக்கு வரவில்லை. வரதேவியோ வீட்டினுள் இருப்பதற்கு விரும்பவில்லை. உடல்புழுக்கமும் உளப்புழுக்கமும் இணைந்தே புழுங்கியது. அப்புழுக்கம் தீர்க்க காலாற வெளியே நடந்துவரத் தீர்மானித்தாள். மாலைப்பொழுது சுத்தக்காற்றை சுவாசிப்பது மனதுக்குச் சுகமாக இருந்தது. கால் போன போக்கில் மனம் போக களைத்து வீடு திரும்பினாள். மெல்ல மெல்ல நடை தளர வீட்டுப்படிகளில் பாதங்களைப் பதித்தாள். பின்னே யாரோ பின் தொடர்வது போன்ற ஒரு பிரேமை. இருப்பினும் அகக்கண் நோக்க புறக்கண் நோக்காது படிகள் ஒவ்வொன்றாகத் தாண்டின கால்கள். வீட்டுவாசலை வந்தடைந்தாள். கதவைத் திறந்தாள் தலையைத் திருப்பினாள். அதிர்ந்துவிட்டாள். கூடவே வந்த உருவமானது இளமை ததும்பும் உடல் அமைப்பு, அங்கங்களைத் தழுவும் கழுகுப் பார்வை, சிறியவன் ஆனாலும் சிந்தையில் மந்தப் புத்தியுள்ளவன். புன்னகைத்தான். பழகிய ஒருவனே ஆனாலும் தன்னைத் தொடர்ந்து வந்த மாயமென்னவென்று புரியவில்லை. பார்வையால் கேள்விக்கணை தொடுத்தாள். அவன் புரிந்ததுபோல் பாசாங்குபண்ணவில்லை. அடியெடுத்து உள்ளே வைக்க அவசரப்பட்டான். தடுத்தாள் வரதேவி.

 “நில். என்ன வேணும்”

 சில சமயங்கள் கைகளைவிட வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அவள் பலவீனமானவள்தான். ஆனால், உள்ளத்தால் அல்ல. அவள் கேள்விக்கு எதுவித பதிலுமில்லாது மீண்டும் உட்செல்ல எத்தனித்தான். உட்சென்று கதவை அடைப்பதற்கு அவள் எடுத்த எத்தனத்தை மீறி உள்ளே பாய்ந்தான். தனது மேலாடையைக் கழட்டினான். அவன் கழுத்திலே கிடந்த சிலுவை பாவிகளுக்கும் பாதுகாப்பளிக்குமோ!

 “கழுத்திலே சிலுவை மாட்டி வந்திருக்கிறாய். நான் நானாக இல்லை. என்னைச் சீண்டிப் பார்க்காதே. உன்னைக் கடித்துக் குதறவும் நான் தயங்க மாட்டேன். இந்த இடத்தை விட்டுப் போய்விடு…….சொல்லிவிட்டேன்……போய்விடு…” சொற்களால் அம்பு பாய்ச்சினானாள். மரத்த உடம்புக்கு அம்புமோர் பூப்பந்தே.

 அவன் எக்கதையையும் காதில் நுழைப்பதாக இல்லை. காமமயக்கம் அவன் கண்ணை மறைத்திருந்ததனால் அவன் காதும் செவிடாகியது. தன் இச்சையைத் தீர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக வரதேவியைக் கட்டியணைத்தான். அப்போது வரதேவிக்குள் அடங்கிக் கிடந்த மிருகம் மீண்டும் விழித்துக் கொண்டது. தன் பலமனைத்தும் சேர்த்தே பத்திரகாளியானாள். அவனை இறுக்கித் தள்ளினாள்.  தன் பாதங்களைத் தூக்கினாள். அவனை உதைத்து மிதித்தாள். விழுந்தவன் எழுந்தானா? இறந்தானா? இச் சந்தேகங்கள் அவளுக்கு எதற்கு? கதவை இழுத்து மூடினாள். கையில் கிடைத்ததை எல்லாம் பலம் கொண்டமட்டும் எடுத்தெறிந்தாள்.

 “ஐயோ….. எனக்கு என்ன கொடுமை…. பாவி மனுஷா! என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கி விட்டாயே….. நீ நல்லா இருப்பியா…..நீ நல்லா இருப்பியா……” வீடு அதிர்ந்தது. தனித்த வீட்டினுள் தனிமையில் புலம்பினாள் கத்தினாள்.  வார்த்தைகள் எதிரொலித்தன. திரும்பவரும் வார்த்தைகள் தன்னைக் கேட்கும் வார்த்தைகள் என நினைத்தவளாய் அதற்கும் எதிரொலி தந்தாள். மெல்லமெல்ல சக்தியனைத்தும் சோர்ந்துவிடத் தரையிலே சரிந்தாள்.

  வல்ல அரக்கர்கள் வாழும் பூமியடா – இங்கு

  வஞ்சனைப் பேய்கள் ஆயிரமடா!

  சொல்வொண்ணாத் துயரடா! – இவள்

  சோகத்திற்கு அளவேதடா!

  பாவிமகள் வாழுகிறாள்

  தனியே தவித்துப் புலம்புகிறாள்

  ஐயகோ! இதுவும் ஓர் வாழ்வா!

  இந்த வேதனைக்கு விடிவுதான் இல்லையா!

               ஒரு பெண்ணுக்குத் தான் செய்யும் தவறுகள் அவளுக்கு கறை படியச் செய்வதுண்டு. தன்னை சுற்றியுள்ள சுகங்களும் கறையினுள்  அமிழ்த்தி விடுவதும் உண்டு. இங்கு சுற்றியுள்ள கண்கள் வரதேவியின் சுகத்தைக் கெடுத்துவிட்டன.

                 அடுத்தநாள் கடமைக்காய் கதவு திறந்தாள் எமல். வாசலில் அலங்கோலமாய்க் கிடந்த வரதேவியைக் கண்டாள். திடுக்கிட்டுவிட்டாள்.

 “ஐயய்யோ ….. ஐயய்யோ….. என்ன நடந்ததிங்க…. எழுந்திருங்க…. வரதேவி…எழுந்திருங்க…”

 அவளால் எழுந்திருக்க முடியவில்லை.  ஓரக்கண்ணால் எமலைப் பார்த்தாள். தலையோ சரிந்து சரிந்து விழுந்தது.

 தைரியத்தைத் துணையாய்க் கூட்டிக் கொண்டு எமல் தொலைபேசியை எடுத்து அம்புலன்ஸை வரவழைத்தாள். பழந்;துணியாய்க் கசங்கித் துவண்டு கிடக்கும் வரதேவியைத் தூக்கி எடுத்து முகம் அலம்பினாள். முதல்நாள் உணவில்லாத களைப்பில் முள்ளந்தண்டு நிமிர்ந்து நிற்கத் தயங்கியது. சோர்ந்து துவளும் உடலுக்கு உற்சாகபானமாய் கோப்பியைப் பருக்கினாள். எமலின் முகத்தைப் பார்த்து ஏன் நேற்று வரவில்லை? வந்திருந்தால், எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? என்று கேட்பதுபோல் பார்வையால் பரிந்து பேசினாள். தன் நிலை உணர்த்திய எமல், வரதேவியிடம் என்ன நடந்தது என்னும் விபரம் கேட்க விரும்பாது. கேட்கும்போது அவள் பழைய நினைவுகள் மீட்டப்படலாம் என்பதை உணர்ந்தவளாய் பேசாமல் இருந்தாள். ஜேர்மனியில் அம்புலன்ஸ்க்கு அழைப்புவிடுத்த மறுகணமே அம்புலன்ஸ் வண்டி வாசலுக்கு வந்துவிடும். அவ்வாறே அன்றும் நான் இருக்கிறேன் உன்னைத் தாங்கிக் கொள்ள என்று கூறுமாப்போல் அம்புலன்ஸ் வண்டி வாசல் வந்தடைந்தது. அதிலிருந்து படபடவென்று படியேறி வைத்தியர் கையில் மருந்துகள் அடங்கிய பெட்டியுடன் உள்ளே வந்தார்.

                இது இம்மண் மனித உடல்நலத்திற்குக் கொடுக்கின்ற மரியாதை. என்னைப் போல் மற்றவனும் வாழவேண்டும் என்று நினைப்பதே மனிதநேயம். நோயாளி பணம் கொடுக்கின்றரா? இல்லையா? இதுபற்றிய கேள்வி எல்லாம் நோயாளியைக் கொண்டு செல்பவர்களுக்குக் கிடையாது. மருத்துவக் காப்புறுதி நிச்சயம் எல்லோரும் செய்திருப்பார்கள். உழைப்பவர்களிடம் அறவிடும் பணத்தில் அவர்கள் பயன்படுத்தாத மருத்துவச் செலவுகளை அரசாங்கப்பணத்தில் வாழ்பவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இந்நாட்டில் மருத்துவவசதி இல்லாதவர் யாருமேயில்லை.

             அவள் உடல்நிலையைப் பார்வையிட்ட வைத்தியர் உடனடியாக வைத்தியசாலையில் அவளை அநுமதிக்க வேண்டிய அவசியத்தை எமலிடம் உணர்த்தினார். அம்புலன்ஸ் வண்டி வரதேவியை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தது. அங்கு நரம்புகளுக்கு அமைதியூட்டும் மருந்து தரப்பட்டது. அதன்பின் நிம்மதியாக உறங்கினாள். எமல் விடைபெற்றாள். மருத்துவமனையில் வரதேவி இருக்கும் சந்தர்ப்பத்தில் எமல் நாளும் மருத்துவமனை வருவதும், வரதேவி வீட்டைத் துப்பரவு செய்வதும் போன்ற காரியங்களில் ஈடுபட்டாள்.

              அடிக்கடி வரதேவி நண்பர்களும் கரனுடைய நல்ல நண்பர்களும் மருத்துவமனையிலே வரதேவியை அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார்கள். உருக்குலைந்த அவள் உடல்நிலை கண்ட கீதா,

“கவலைப்படாதீர்கள் அக்கா! ஆண்டவன் உங்களைக் கைவிட்டுவிட மாட்டார். ஆண்டவன் நல்லவர்களைத்தான் சோதிப்பார்….நீங்கள் விரைவில் குணமாகித் திரும்பவும் பாடசாலை நடத்துவீர்கள் பாருங்கள்……” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினாள்.

 “போதும் கீதா! நல்லவர்களை ஆண்டவன் சோதிக்கும் கதை…. என்று மனதில் நினைத்தவளாய். அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.  நல்லவர்களைச் சோதிப்பார். தீயவர்களைக் கண்டுகொள்ள மாட்டார். அவர்கள் நல்லபடியாக வாழ்வார்கள். இவர்களைச் சோதித்து வேதனைப்படுத்திக் கொண்டேயிருப்பார்…. பிறகு கைகொடுப்பார். இது என்ன நன்றிகெட்ட செயல். இதை எல்லாம் நான் நம்பி நீண்டநாள்களாகிவிட்டது. பூமி சுழலும் திசைக்குச் சுழலவேண்டியதுதான். ஒருநாள் காணமல் போய்விடுவோம். இதுதான் உண்மை” என்று விரக்தியில் வேதாந்த உணர்வுடன் நினைத்ததை உதிர்க்கும் சொற்கள் இன்றி சும்மா இருந்தாள்.

                 வருவோர் போவோரெல்லாம் அறிவுரை கூற வந்துவந்து தொல்லை தரும் நோயும் கூடவே சேர நாள்கள் நகர்ந்தன. தன்னையே அடையாளம் காணமுடியாத நிலைக்கு வரதேவி தள்ளப்பட்டாள். உண்பாள், உறங்குவாள், பேசுவோர் யாரென்று புரியாது பேசுவாள். மிகுதியான நேரங்களில் தலையின் பாரம் அதிகரித்து கழுத்துத் தாங்கமுடியாத வண்ணம் மடிந்துகிடக்கும்.

 

 

 

 

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.