Part 10

அவள் தேடலறிவின் பார்வை, ஆணிவேராய் நம்பியிருந்த தன் குடும்பத்தலைவன் குணங்களின் குழறுபடியில் நோட்டம் கண்டது. கரன் நல்லவனா? கெட்டவனா? மீண்டும் மீண்டும் இதே கேள்வி மனதுள் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதிகூடிய திறமையும், தன்னம்பிக்கையும், ஆசையும் சரியான முறையில் கையாளப்படவில்லையானால், ஒரு மனிதனை எந்தளவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டே கரன். போலி கடவைச்சீட்டுக்கள் தயாரித்தல், வெளிநாடுகளுக்கு மக்களைச் சட்டரீதியற்ற முறையில் தாயகத்திலிருந்து கொண்டுவருதல்,  பணமாற்றீடு செய்தல், இவ்வாறு இன்னோரன்ன காரியங்களில் அவன் கவனம் கலந்து கொண்டது.

        தூண்டியவரை எரிக்கும் மனத்தீ

        துயருறவைக்கும் வாழ்வைத் தீக்கிரையாக்கும்

        சொல்லும் செயலும் தடுமாறிய வாழ்வை

        நல்லவர்கள் கொள்வதில்லை.

இதனால், சிறிய அறையினுள் சிறைக்கம்பிகளுக்கூடாக உலகைப் பார்க்கும் கட்டளை கரனுக்குத் தாயகத்து நீதித்துறையினரால் வழங்கப்பட்டது. என்னும் உண்மை உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டாள். மனம்வெந்து தனியளாய்ப் புலம்பினாள். தன் உயிரும் உணர்வும் விரும்பாத உழைப்பு நோக்கிச் சென்ற கணவன் தொழிற்பாடுகள் கேட்டு இரத்தம் அவளுக்கு உள்ளிருந்து கொதித்தது.

            அவசரஅவசரமாகத் தன் கடவைச் சீட்டை வீடு முழுவதும் ஆராய்ந்து தேடி சோர்ந்து போனாள் வரதேவி. அப்போதுதான் அவள் மூளைக்குள் அகப்பட்டது கரன், தாயகம் நோக்கிச் சென்ற திடீர்ப் பயணம். வரதேவி கடவைச் சீட்டில் யாரோ ஒரு பெண்ணை வாழுகின்ற நாட்டிற்குள் சட்டரீதியற்ற முறையில் அரசுக்குக் கண்ணைக் கட்டி வரவழைத்து வருவதற்காகத் தாயகம் நோக்கிப் பறந்த மாயம் புலப்பட்டது. வாழ்வதற்கு வாழும் நாடு அங்கீகாரம் வழங்கிவிட்டால் அந்நாட்டின் புலனாய்வுத்துறைக்கு வேலை கொடுத்து ஏமாற்றத் தொடங்கிவிடுவார்கள் நன்றிமறந்தவர்கள். சட்டதிட்டங்களுக்குள் அடங்கிவாழ மாட்டாத மனிதன் சமூகத்துரோகி அல்லவா! தவறுகள் தண்டிக்கப்படல் தர்மம் அல்லவா!  நரம்பில்லாத நாவாலும், மனமறியவொண்ணா பிறப்பாலும், பொய்யையும் மெய்யாக்கி வாழும் நாட்டில் பிடுங்க வேண்டியவற்றைப் பிடுங்கி எடுப்பவர்கள் ஆயிரம். இல்லறத்தில் இருந்தபடியே, இல்லை இப்போ இல்லறம். இல்லறத்தான் இப்போ இல்லில் இல்லை. என் இதயத்திலும் இல்லை, என்று சொல்லால் சொந்தக்கதை மறைத்துச் சுரண்டி வாழ்பவர்களும் உண்டு. ஜேர்மனியர் எம் நாட்டைச் சுரண்டி வாழ்ந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லையே, இப்படியிருக்கும் போது நாம் மட்டும் ஏன் தஞ்சம் தந்தவரை வஞ்சிப்பது.

           ஆனால் வரதேவியோ உண்மையை மறைக்காது வாழ வழியின்றி ஆதரவு தேடி  அரசாங்கத்திடம் தஞ்சம் அடைந்தாள். அவர்கள் உதவியே எதிர்காலம் என்று முடிவெடுத்தாள். கைப்பணம் தீர வங்கிக் கணக்கைப் பார்வையிட வங்கிக்கு வழி எடுத்தாள். அங்கு சென்று தன் கையிலிருந்த வங்கி அட்டையைப் போட்டாள்.  சமூகப்பாதுகாப்பு அலுவலகத்திடமிருந்து தனக்கும் மகனுக்கும் சேர்த்து மொத்தமாக மாதச் செலவுக்காக 687 ஒயிரோக்கள் வங்கிக் கணக்கிற்கு போடப்பட்டிருக்கின்றது. வாடகை உட்பட மற்றைய செலவுகளை அவர்கள் பொறுப்பெடுத்து உணவு, உடை மற்றைய செலவுகளுக்கு மாத்திரம் அவர்கள் வழங்கியிருக்கும் தொகை அவளுக்குப் போதுமானதாகவே பட்டது.  நெஞ்சு குளிர்ந்தது. நிலைகெட்ட மாந்தர் வாழ்ந்தால், அதற்கெதிராக உதவிடும் மாமனிதர்களும் வாழ்வார்கள். தன் துயர் அவள் எடுத்துச்சொல்ல அது தம் துயராய்க் கருதி வாழ்வாதாரப் பணத்தை வழங்கிய நாட்டைத் துதித்தாள். பணத்தைப் பெற்றாள். இங்கு என்னாலும் வாழமுடியும் என்று துணிவை ஏற்படுத்திக் கொண்டாள். என்ன பிரச்சினையென்றாலும் ஓடிச் சென்று தாயிடம் உரைப்பதுபோல் இவ் அலுவலகம் சென்று கூறினால், பொங்கிப் பெருகும் பிரச்சினையையும் அடங்கிக் கொள்ளும் நீர்க்குமிழ்போல் ஆக்கிவிடுவார்கள் என்னும் தைரியம் அவளுக்கு ஏற்பட்டது

                                                                       ————-

வரதேவி மனம் ஆற சற்று வெளியே நடந்து வந்தாள். மீண்டும் நிம்மதியுடன் வீடு திரும்பினாள். வீடு திரும்பும் வழியில் உணவுப் பண்டங்களை வாங்கிச் சுமந்து வந்தாள். உடலயர்ச்சி போக்க மெத்தையிலே பொத்தென்று விழுந்தான். மனம் முழுவதும் சொல்லவொண்ணாத் துயரம். உடலெல்லாம் அயர்ச்சி. சோர்ந்திருந்த மூளை ஓய்வுகாணத் துடித்தது. கண் இமைகள் அவளை அறியாமலே கீழ்நோக்கிச் சாய்ந்தன.

                   கண்விழித்துப் பார்த்தால் நேரமோ 6.30 ஐக் காட்டியது. துடித்து எழுந்தாள். மகனை அழைத்து வரவேண்டுமே. அவசர அவசரமாக பாதணிக்குள் கால்களைப் புகுத்தினாள். நடை ஓட்டம் கண்டது. ஆறு மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தேனே. வரனுடன் படிக்கும் மத்தியாஸ் வீட்டில் விளையாடுவதற்காக வரனை விட்டிருந்தாள். சொன்ன நேரம் போகவில்லையானால், மரியாதை குறைந்துவிடுமே. ஓடிச் சென்று அழைப்பு மணியை அழுத்தினாள்.

             மத்தியாஸ் தாய் கதவைத் திறந்தாள். இவள் ஜேர்மனியப் பெண். அன்பே உருவானவள். பிள்ளைகள் சுதந்திரத்திற்கு எந்தவித தடையும் கூறாள். மகனின் மனம் மகிழ்ச்சிப்படக் கேட்பதெல்லாம் செய்து கொடுப்பாள். பொதுவாக ஜேர்மனியப் பெற்றோர்கள் தங்களுடைய அபிலாசைகளைப் பிள்ளைகள் மேல் திணிப்பதில்லை. அவர்கள் மனமகிழ்ச்சியில் அக்கறை கொள்வார்கள். அதனாலேயே பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கை நோய்நொடியின்றி பிரகாசமாய்த் தோன்றும் என்று கருதுவார்கள். இதனால்த் தானோ என்னவோ நீண்டகாலங்கள் ஆயுள் அவர்களிடம் நிலைத்திருக்கின்றது. அதிகூடிய சுதந்திரம் கொடுக்கும் பிள்ளைகள் கெட்டுப் போவதும் உண்டு.  ஆனால், எதற்கும் ஒரு வரன்முறை வைத்திருப்பார்கள். பிள்ளைகள் சுயமாகத் தொழிற்படுவதற்கு சிறுவயதிலிருந்தே பழக்கிவிடுவார்கள். இதனால் பெற்றோருக்கும் சுமையில்லை. பிள்ளைகளும் பெற்றோர் துணையின்றி தனித்து வாழும் தைரியத்தைப் பெற்றுவிடுவார்கள். குறிப்பிட்ட வயதில் காதலில் பிள்ளகைள் விழவில்லையானால், முதலில் கலங்குவது பெற்றோரே. அவ்வயதில் ஏற்படும் உடல் உள்தொழிற்பாட்டிற்கு ஏற்பத் தன் பிள்ளை இல்லையே! எனக் கணிப்பிடுவார்கள். அவ்வக் கால மகிழ்ச்சியைப் பெற்றுவிடாமல்ப் போனதேயென மனதால் வேதனைப்படுவார்கள். பிள்ளைக்கு அறிவுரை கூறி, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பிள்ளை காதலில் விழுந்துவிட்டால், நண்பர்கள் உறவினர்களிடம் அதைக் கூறி சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். தமிழர்களோ பிள்ளைகளின் கல்வி தொடக்கம் திருமணம் வரை தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று கருதுவார்கள். அதுவே பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாய் அமைய வழிவகுக்கும் என்று நம்புகின்றார்கள். சிறுவயதிலிருந்து சுயமாய் வாழ வழிவகை செய்யாது. எதற்கும் தம்மையே பிள்ளை நாடிவரவேண்டும் என்று கருதி உடைகள் வாங்குவதிலிருந்து பிள்ளைகளின் சிறுசிறு வேலைகளைக்கூட பெற்றோர்கள் செய்வதனால், பிள்ளைகள்  தனக்கென ஒரு துணையைக் கூட சரிவரத் தெரிவுசெய்யாது எனக் கருதுகின்றார்கள். எனவே தமிழ்ப்பெற்றோர்கள் தாமே பிள்ளைகளின் எதிர்காலத் துணையையும் தெரிவுசெய்து கொடுக்கின்றார்கள். அளவுக்கு மீறிய பாசம் எனக் காட்டி அவசியமில்லாத வாழ்க்கை நுழைப்புகளைச் செய்வதனால், பிள்ளைகளின் பாசத்தை இழந்த பெற்றோர்களாக ஆகிவிடுகின்றனர்.

        மத்தியாஸ் தாய் வரனுடன் அன்பாய் இருப்பாள். சிலவேளைகளில் வரதேவிக்கு முடியாது போனால், வரனை கின்டகார்டினிலிருந்து அழைத்து வருபவளும் அவளே. வரதேவியைக் கண்டவுடன் தன்னுடைய   வலது கையை வரதேவியினுடைய வலது கையினுள் சேர்த்தணைத்துக் குலுக்கினாள். தன்னுடைய உள்ளத்தைக் கைகள் மூலம் வரதேவி கைகளுக்குள் புதைத்தாள்.

“இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நேரத்தில் நானே வீட்டிற்குக் கொண்டுவந்து விடுகிறேன்”

என்று கூறி செவ்வாய்க்கிழமை புதிய பாடசாலைக்கு வரன் செல்லவிருக்கும் செய்தி பற்றியும் கேட்டாள். தனக்குத் தெரிந்த ஜேர்மனியச் சொற்களுடன் மத்தியாஸ் தாய்க்குப் புரியும் வகையில் முதல் வகுப்பை வரன் தொடங்க இருக்கும் செய்தியையும் அவனுக்குக் கிடைத்திருக்கும் பாடசாலையையும் கூறினாள். அவளிடம் இருந்து விடைபெற்ற வரதேவி வீட்டிற்கு வந்தாள்.

                                                                                   s

வந்ததும் முதல்வேலையாக முதல்நாள் பாடசாலைப்பைக்குள் (Schultüte)  அவனுக்காக வாங்கி வைத்திருந்த பொருள்களைப் போட்டாள். மூடிக்கட்டினாள். முதல்நாள் பாடசாலைக்கு அடி எடுத்து வைக்கும் பிள்ளைகளுக்கு இதை வாங்கி அவர்களுக்குத் தெரியாமலே சில பரிசுப் பொருள்களை அதனுள் போட்டு வைப்பது வழக்கம். பாடசாலை சென்று வீடு வந்ததும் பிள்ளைகள் முதல்வேலையாக இதைத்தான் திறந்து பார்ப்பார்கள். அதனுள் நிச்சயம் இனிப்பு இருக்கும். அவ்வாறே வரதேவியும் வரனுக்காக வாங்கிய இனிப்புக்களையும் பென்சில், சிறிய பாரம் குறைந்த விளையாட்டுப் பொருள்களும் போட்டு அவன் தூக்கக்கூடிய பாரத்திற்கேற்ப மூடிக்கட்டினாள்.

              வீட்டிற்கு வந்த வரன் அதைத் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து மேலே உயர்த்தி ஆடினான். பாடசாலை செல்வதை விட அதற்குள் என்ன இருக்கின்றது என்று அறியும் ஆவலே அவனுக்கு அதிகமிருந்தது.

              பாடசாலை முதல்நாள் ஒவ்வொரு மனிதனும் அரிச்சுவடு தொடங்கும் கோயில். கல்வி என்னும் கடவுள் அருள் தரும் ஆலயம். வாழ்வின் வெளிச்சத்திற்கு அடிகோலும் வசந்தவாசல். இதனுள் நுழைந்து சரியான முறையில் வாழ்வைப் பிரகாசமாக்குவோரும் உண்டு. விளையாட்டாக விரும்பியபடி நடந்து வாழ்வைத் தொலைப்பவர்களும் உண்டு. வாழ்க்கை வாழ்வது அவரவர் கைகளிலும் இருக்கிறது. சந்தர்ப்பம் சூழ்நிலைகளிலும் அதற்குத் துணைப் போகின்றன.

          இன்றையநாள் வரனின் பாடசாலை முதல்நாள். தாயும் தனயனும் பாடசாலை வாசல் வந்தடைந்தனர். சின்னச்சின்ன சிட்டுக்களாய் கைகளில் தாங்கிய பாடசாலை ரியூற்றவுடன் (Schultüte) பெற்றோர் சகிதம் நிறைந்திருந்த மென்னெஞ்சங்களிடையே வரதேவியும் வரனும் நின்றிருந்தனர். பாடசாலை, வகுப்பாசிரியர், வகுப்பறை, பாடசாலைச் சூழல் அனைத்தும் முன்னமே ஒருநாள் பெற்றோர்கள் பிள்ளைகளை  வரவழைத்து அறிமுகப்படுத்தப்பட்டாயிற்று. அதனால், பாடசாலை முன் மைதானத்திலேயே பெற்றோர்கள் தங்கிவிட வேண்டியது அவசியமாயிற்று. அவ்வவ் வகுப்பாசிரியர் பாடசாலை மணி அடிக்க முன் மைதானம் நோக்கி வருவார்கள். தமது வகுப்பறைச் சிட்டுக்களை அழைத்துக் கெண்டு செல்வார்கள். அவர்களைக் கண்டவுடன் பெற்றோர் தம பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள். அவ்வாறே வரனும் தனது பாடசாலைத் தாயிடம் சரணடைந்தான். பிள்ளைகள் இடமிருந்து மறைய, பெற்றோர்களும் தலைமறவாகிவிடுவார்கள். வழமையாக நடப்பது இதுவே.

           இன்று முதல்நாள் என்பதனால், பிள்ளைகளிடம் அச்சம் இருந்தது. ஆனால், அடுத்தநாள் ஆசிரியரைக் கண்டால் போதும் மாணவர்கள் துள்ளிக்குதித்து ஓடுவார்கள். அவரின் கைகளைப் பிடிப்பதற்குத் துடிப்பார்கள். அவரை நகரவெண்ணா  வண்ணம் பசுவைச் சூழ்ந்த கன்றுகளாய் சுற்றிக்கொள்வார்கள். அனைவரையும் அணைத்தபடி ஆசிரியர் செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகவே காணப்படும். உண்மையில் அடிப்படைப் பாடசாலை (Grundschule) ஆசிரியர்கள் மாணவர்களை அனைக்கும் பாங்கும் அவர்களிடையே ஏற்படும் பந்தமும் அற்புதமென்றே கூறவேண்டும். அடிப்படை மட்டுமன்றி மற்றைய பாடசாலை ஆசிரியர்கள் கூட மாணவர்களை அணைக்கும் பாங்கு தனித்துவமானது. இங்கு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர்கள் வைப்பதேயில்லை. ஏன் வைக்கவேண்டும்? அவர்கள்தான் பிள்ளகைள் எதிர்ப்பைச் சம்பாதிப்பதேயில்லையே.

                   வரன் அடிப்படைப் பாடசாலை வரதேவி மனதுக்குத் திருப்தியைத் தந்தது. மகனை பாடசாலையில் விட்டு வீடு வந்து, வீட்டுவேலை செய்து, திரும்பவும் அழைத்துவந்து, உணவளித்து, விளையாட அழைத்துச் சென்று என்று அவள் வாழ்வு தொடர்ந்தது. கரன் நினைவலைகளும், அவர் பற்றி மற்றையோர் கூறும் குற்றப்பத்திரிகைகளும், தன் ஆத்மார்த்தமான தொழில் பறிபோன கசப்பான உணர்வுகளும் அடிக்கடி வரதேவி மனவலைகளை கலக்கிக் கொண்டே இருந்தன. சிலவேளைகளில் உடல் களைத்து, உளம் நொந்து தன்னை மறந்து கண்அயர்ந்துவிடுவாள். கண் மூடிய மாயம் உணராது, பின் துடித்தெழுவாள்.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.