Part 1

இது பூமிப்பந்திலே இரும்பைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பகுதி, இரண்டாம் உலகமகாயுத்தத்திற்கு விதை போட்ட பூமி, ஒரு மனிதனின் பேச்சால் மாண்டு மீண்டும் உயிர்த்தெழுந்து தலைநிமிர்ந்து நிற்கும் நாடு. இன்று மனிதநேயம் மேம்பட்டு பல்லின மக்களுக்குப் புகலிடம் தந்து மாண்புடன் திகழும் ஜேர்மனி என்று அழைக்கப்படும் நாடு.

                  இந்த ஜேர்மனி என்னும் நாட்டிலே தன் தாலி என்ற பந்தம் வந்து சேர்ந்ததால், அத்தாலிப்பந்தம் வாழும்நாடு தேடி வந்தாள் வரதேவி. தாலி ஒரு பெண்ணுக்கு வேலி என்பது ஒரு பழமொழி. தாலி தாங்கும் பெண் தன் கணவனை என்றும் தன் மார்பில் தாங்குவாள். தாலம்பனை  என்னும் பனையோலையினால், செய்யப்பட்ட மாலையையே ஆதி காலத்தில் மணமகன் பெண்ணுக்கு அணிவிக்கின்றான். அதனால், தாலம் தாலியானது. பனையோலை பழுதுபடும் என்ற காரணத்தினால், பின் மஞ்சள் கயிற்றில் அணிந்து பின்னர் உலோகத்தால்  உருமாறி, இன்று பெண்ணின் எடைக்கு ஏற்ப தங்கத்தால் அணியப்படும் அந்தஸ்துத் தாலியாக தரம் உயர்ந்திருக்கின்றது. எப்படியாயினும் இவனுக்கு இவள் என்ற அந்தஸ்தைப் பெண்ணுக்குக் கொடுப்பதும் இந்தத் தாலியே. அத்தாலியே வரதேவியை ஜேர்மனிக்குத் தளம் இறக்கியது.

                                  பெற்றோர் பெருந்தவமிருந்து பெற்ற மகள் என்ற காரணத்தால், வரம் பெற்று வந்த மகளை வரதேவி என்று வாயார  அழைத்து அப்பெயரிட்டனர் பெற்றோர். இளமைக் கனவுகளின் இதயத் துடிப்போடு இரு பாதங்களையும் ஜேர்மனி மண்ணில் பதித்தாள். பாதணி அணிந்த பாதமென்றாலும், உடல் சில்லிட்டது. காலநிலை மாற்றத்தில் புது உணர்வொன்று ஏற்பட்டது. யாழ்ப்பாணம் இப்படி உடலை விறைக்கச் செய்த அநுபவத்தை அவள் எங்கே பெற்றிருக்கின்றாள். வெள்ளைத் தோல்களுக்கு நடுவே இலங்கைப் பெண்ணாள், நம்பிக்கை என்னும் ஆயுதத்தின் வலு தாங்கியவளாக நடந்தாள். நாடோ நாட்டுமக்களோ அவளைப் பயமுறுத்தவில்லை. சஞ்சிகையிலும் திரைப்படங்களிலும் மாத்திரமே கண்ட அந்த வெளிநாட்டு இன்பம், இன்று அவளை ஒட்டி வந்து பற்றிக் கொண்டது. மனமெங்கும் மகிழ்ச்சி பிரவாகித்திருந்தது. என்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை என்று தன்னைத்தான் அறிந்து கொண்ட களிப்பில் பெருமிதம் கொண்டாள். விமானத்தளத்தினுள் நுழைந்தவள் கண்கள் பக்கம்பக்கமாய் நோக்கித் தன் குங்குமத்திற்குச் சொந்தக்காரனை ஆவலுடன் நோட்டமிட்டது.

                            “அந்நியர்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தினுள் இவர் எங்கே நிற்கின்றார். எப்படி வந்திருப்பார். வெளியிலே குளிர் எங்கிறார்களே. எப்படி இந்த உடுப்போடு போவது. ஒரு வார்த்தை முதலிலேயே சொல்லியிருந்தால் அதற்குரிய உடுப்பைப் போட்டு வந்திருப்பேன்” என்று மனம் பலவாறாக அங்கலாய்த்தது.

                                      பாதங்களோ பயணித்தது. மனமோ அலைபாய்ந்தது. வெளியேறினாள். பயணிகளை எதிர்கொள்ளும் உறவினர் பிரிவுக்குள் வந்தவள் எதிர்நின்ற தன் கணவனைக் கண்டாள். கையிலே மலர்ச்செண்டு, கண்ணிலே அளவுகடந்த ஆவல், மனமெங்கும் மலர்ந்துநின்ற காதல். கால்களுக்கு முன் மனம் அவனை வந்தடைந்தது. தாகம் தீரத் தழுவிக்கொண்டது. மெல்ல அருகே வந்தாள். கையிலே மலர்ச்செண்டைக் கொடுத்த கரன். அவளை ஆரத்தழுவிக் கொண்டான். இரண்டு  உள்ளங்களும் ஒன்று கலந்தன. நிம்மதிமூச்சு இருவருக்கும் வெளிப்பட்டது. பேச்சு விடைபெற்றது. உணர்வுகள் மட்டும் உறவாடின. வெட்கித்துப் போனாள் வரதேவி. தான் கொண்டுவந்திருந்து குளிர்அங்கியை (Jacket) அவளிடம் நீட்டினான் கரன். புன்முறுவலுடன்

 “என்னப்பா…..என்ன… புது இடம். பயமா இருக்கா. பயப்பிட வேணாம். நான்தான் இருக்கிறேனே. குளிருதா?….. அதெல்லாம் போகப்போகப் பழகிடும்”

என்றபடி வரதேவியைத் தாம் ஒன்றாய் வாழப்போகும் மனைநோக்கிச் செல்ல வாகனத்திற்கு அழைத்துவந்தான்.

                                     வருகின்ற வழியிலே விறைக்கின்ற பற்களுக்கிடையே வார்த்தைகள் ஒழிந்து கொண்டன. ஆனால், அங்கு பாதையெங்கும் கொட்டிக்கிடந்த பனிநுரைகளை வரதேவி அள்ளிக்கொள்ளக் கொள்ளை ஆசை கொண்டாள்.

            பனிமலர்கள் மேலிருந்து பவனி வர

            நனியாவல் கொண்டதனைக் கன்னம் வைக்க

            கனியாய்த் தன்கன்னம் சிவந்து வர

            கழிபேருவ கையுடன் கணவன் கைகோர்த்தாள்.

                    புதிய இடமும், புதிய சூழலும் பார்த்தவுடன் இன்பத்தை அள்ளித் தரும். அடியிலிருந்து கரும்பை உண்ணுமாப் போல் இன்பம் தோன்றும். நாளாகநாளாக இன்பத்தின் வேகம் குறைந்து செல்லத் துன்பத்தின் பலம் சோபையுறும். முதல் நாள் கண்ட அநுபவம் 20 வருடங்கள் கடந்தும் அனைவருக்கும் இனிப்பாய் இருக்கும். களவாய்ப் பொதிஅடக்கிகளில் கொண்டுவந்து, நாடுகள் பல கடந்து, கால்நடையாய் வந்து, உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி, குளிரிலே வாடி, மழையிலே நனைந்து, குற்றுயிராய்க் குறித்த நாட்டிற்குள் கால் வைக்கும் போது ஏற்படும் அந்தத் தரிசன இன்பம் இருக்கின்றதே, காலங்கடந்தாலும் நெஞ்சில் பசுமையாய்ப் புலப்படும். இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்பவே அமைகிறது. சந்தர்ப்பம் வந்தமைவதும் அவர்கள் சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது. நாம் கேட்டுக்கொண்டு இப்பூமியில் வந்து பிறப்பதில்லை. ஏற்றபடி வாழ்வு அமைவதும் இல்லை. சாதித்தவர், வாழ்வைத் தன் முயற்சியில் சாதித்துவிட்டேன் என்பார். முயன்றுமுயன்று தோற்றவர், முடிவு என் கையில் இல்லை என்பார். இந்த வரதேவி என்ன வரம் பெற்று ஜேர்மனிக் காற்றைச் சவாசிக்க வந்தாளோ?….. எந்தவித கடினமும் இன்றி நேரடியாக இலங்கையில் விமானம் ஏறி ஜேர்மனியில் இறங்கினாள்.

v

Comments are closed.