Part 5

அன்று பனி மூடிய நகரிலே பகலவன் தன் கரங்களை பரவவிட்டிருந்தான். காலநிலை -5 காட்டியது. வீதிக்கு நுழைய உடல் விறைக்காவண்ணம் பாதுகாப்புக் கவசங்கள் அணியவேண்டியது அவசியமானது. காற்சட்டைக்குள் வரதேவி கால்கள் அடங்கின. குளிர்தாங்கும் உடைகளை உடல் தாங்கின. ஜக்கட்டை (குளிர்தாங்கும் ஆடை) அணிந்தாள். காதினுள் பனிக்காற்று விரவா வண்ணம் காது மறைத்து தொப்பியை அணிந்து கொண்டாள். கழுத்தை ஸோலால் (mafflar) சுற்றிக் கொண்டாள். கைவிரல்கள் விறைக்காவண்ணம் கையுறை அணிந்தாள். பாதங்கள் முழுவதுமாக மறைத்துப் பாதணிகளைப் பாதுகாத்தாள். கதவைத் தாளிட்டு வீதிக்குள் நுழைந்தாள். சூரியனின் கதிர்கள் கண்ணைக் கூசச் செய்தன. என்றுமில்லா வண்ணம் சூரியக்கதிர்கள் வரதேவி வசிக்கும் நகரத்தில் வாசம் செய்தன. நகரம் பளிச்சென்று அழகாகக் காட்சியளித்தது. வானிருந்து உலகில் வாசம் செய்ய வந்த பனிக்கூட்டம் நிலமெங்கும் நிறைந்திருக்க, சூரியக்கதிர்கள் அதன் மேல் பட்டதனால் சிறிதளவில் உருகின. இவ்வுருகும் பனிக்கூட்டங்களில் சுற்றாடலிலுள்ள குளிர்காற்று சூழுகின்ற போது உருகிய பனிகள் நிலமெங்கும் உறைகின்றன. இதனால், பளிங்குக் கண்ணாடிகளாய் பனித்துகள்கள் உருமாறின. இப்பளிங்குக் கண்ணாடிகளாய் காட்சியளித்த உறைபனிகளிலே சூரியக்கதிர்கள் பட்டுத் தெறிக்கின்றபோது கண்ணைக்கூசச் செய்யும் ஒளித்தெறிப்புக்கள் தோன்றுகின்றன. இயற்கை எது செய்தாலும் அழகே, ஆனால், அது ஆபத்தும் தரக்கூடியது. வீதியெங்கும் நடமாடும் மக்கள் வழுக்கி வழுக்கி மெல்ல மெல்ல தாண்டித் தாண்டி நடக்க வேண்டியது அவசியமாகிறது.

                                  வரதேவியும் தன் கவனம் முழுவதையும் தன் பாதங்களிலும் நடையிலும் செலுத்தினாள். சில வாகனங்கள் அசைய முடியாது தரித்து நின்றன. சிலர் தமது வாகனங்களில் கொட்டி மூடிக்கிடக்கும் பனிக்கூட்டங்களை அகற்றும் பணியில் அகப்பட்டிருந்தனர். சிலர் நெருப்பில்லாமலே புகை விட்டபடி சென்றனர். தமது அகச்சூடு வெளியே நிலவும் புறக்குளிருக்கு ஆவியாகிப் புகைக்கின்ற காட்சி அழகாக இருந்தது.  வரதேவியும் மூச்சுக்காற்றாலும் பேச்சுக்காற்றாலும் சிகரெட் இல்லாமலே புகைத்தாள். சிலர் தத்தம் வீட்டின் முன் வீதியிலே உறைந்திருக்கும் பனிக்கூட்டங்களை அகற்றும் பணியிலே ஆழ்ந்து உப்புமழை தூவினர். வாகனங்கள் வழுக்கி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வாகனங்கள் வழியெங்கும் பரவி இருக்கும் பனிப்பூக்களை வீதி ஓரங்களில் தள்ளிவிட்டபடி சென்று கொண்டிருந்தன. மனிதர்கள் ஆபத்தின்றி நலமே வாழ அவர்கள் தொடர்பற்ற எத்தனையோ உதவிகள் எட்டநின்று உதவி புரிகின்றன. இவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்தபடி வீதியோரம் வரதேவி மெல்லமெல்ல நடந்தாள்.

                                இவ்வேளை வரதேவியின் கைத்தொலைபேசி அவளை அழைத்துத் தொணதொணத்தது.  கையில் எடுப்பதற்குள் அழைப்புமணி நின்றுவிட்டது. கைப்பையினுள் இருக்கும் தொலைபேசியை எடுப்பதற்கு மாரிகாலத்தில் நிச்சயம் காலதாமதமாகும். கையுறை கழட்டி வெளியே எடுக்கும் விரல்கள் குளிர் பட்டவுடன் விறைக்கத் தொடங்கும். படபடப்புடன் தேடுகின்ற போது தொலைபேசி அழைப்பு நின்றுவிடும். இப்போது வரதேவி தொலைபேசி அழைப்பு இலக்கத்தைத் தேடத் தொடங்கினாள். நண்பி கீதாவே அழைத்திருந்தாள். கீதாவிற்கு அழைப்பை மீட்டினாள்.

“இதோ வந்திட்டன் கீதா. நீங்கள் சொன்னதுபோல் c&a  கடைக்குள் நில்லுங்கள்.  5 நிமிடத்தில் வந்துவிடுவேன்” என்று கூறி விரைந்தாள்.

 பனி பரவிய வீதிகளில் வழமைக்கு மாறாக குறித்த இடம் செல்ல தாமதமாவது ஒன்றும் புதிதல்ல. அவ்வாறே கீதா அழைப்பின் பேரிலே வரதேவி ஆடைகள் விற்கும் கடைக்குச் சென்றாள்.

               கடைக்குள்ளே  மக்கள் அதிகமாகத் திரண்டிருந்தனர். கதகதப்பான வெப்பத்துடன் கடைகள் திறந்திருந்தததனால், தமது உடல் வெப்பத்தைச் சிறிது உயர்த்துவதற்காகவும், ஆசைப்பட்ட ஆடைகளை ஆசைதீர உடுத்துப் பார்த்து கழட்டிப் போடவும், சகல உரிமைகளயும் கடைகள் வழங்கியிருக்கின்றன. வரதேவியும் கடைக்குள் சென்றாள். அங்கே அவளுக்காய் காத்துக் கொண்டிருந்த கீதாவுடன் இணைந்து கொண்டு உடுப்புக்களைப் பார்த்துத் தெரிவு செய்துகொண்டிருந்தாள். அழகழகான ஆடைகள் அத்தனையும் வாங்கிக் கொள்ள ஆசைதான். ஆனால், அது என்ன முடியும் காரியமா? வரதேவி கரனுக்கு ஒரு சேட் கொள்வனவு செய்தபின் கீதாவினுடைய மகளுக்கும் ஒரு உடுப்பு எடுத்துக் கொண்டு போவதற்கு ஆயத்தமானாள். அப்போது அங்கே வந்த ஒரு தமிழ்ப் பெண் கீதாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தாள்.  கீதா, வரதேவியை

“இவதான் கரனுடைய மனைவி. ஜேர்மனிக்கு வந்து இரண்டு வாரங்களே ஆகின்றன” என்று அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்தினாள்.

அவரும் “அப்படியா! என்னுடைய மகள் தமிழ்ப்பாடசாலையில் கண்டதாகச் சொன்னாள். நல்ல அன்பாகப் படிப்பிக்கின்றா என்றும் சொன்னாள். நானும் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். நல்லதாகப் போயிற்று எப்படி ஜேர்மனி பிடிச்சிருக்கா? என்று அன்பொழுகக் கேட்டாள்.

வரதேவியும் “இப்போதுதானே வந்திருக்கின்றேன். இந்தக் குளிர்தான் தாங்க முடியவில்லை. ஊருக்குப் போகவேண்டும் போல் இருக்கின்றது. போகப் போகப் பழகிப் போய்விடும் என்று நினைக்கின்றேன்”  என்றாள்.

 அப்போது அருகே “வணக்கம்…….” என்று சொன்னபடி அருகே வேறு ஒரு பெண் வந்தாள். கீதாவும் வணக்கம் சொன்னபடி அவளிடமும் வரதேவியை அறிமுகப்படுத்தினாள். அவளும். “ஓஹோ……….” என்றபடி வரதேவியினுடைய முகத்தைக் கூடப் பார்க்காமல் உடனே போய்விட்டாள். ஏனென்று புரியாத வரதேவியும் இப்படியும் சிலர் என்று நினைத்தபோது

 “இவர்களுடைய குடும்பம் கரனுடன் கதைப்பதில்லை. அதுதான் இப்படி வெட்டிக் கொண்டு போகுது. இவ இப்படிப் போனால், நாங்கள் என்ன குறைந்தா போய்விடுவம். எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வதென்பது முடியாத காரியம். எல்லோரும் மகாத்மாக்களும் இல்லை. எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை சிலரைச் சில சந்தர்ப்பங்களில் பிறர் பார்வைக்குக் கெட்டவர்களாய்க் காட்டி விடுகிறது. சிலரைச் சிலவேளை தவிர்த்துத்தான் ஆகவேண்டும். இன்று இப்படி இருப்பவர்கள் நாளை நிலைமை மாறி நாம்தான் தெய்வம் என்று வருவார்கள். இதுதான் மனிதப்பண்பு. விடக்கா இதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. நாங்கள் போவோம்”

 என்றபடி கீதா அடுத்த கடைக்கு வரதேவியுடன் மாறினாள்.  வரதேவியும்

 “என்ன கீதா வீட்டிற்குப் போகும் நோக்கமேயில்லையா? …”என்று கேட்டாள்.

 கீதாவும் “இன்னும் இரண்டு கடைகளுக்குப் போய்விட்டு வீட்டிற்குப் போவோம்”

 என்று கூறி இருவரும் இரண்டு கடைகள் ஏறி இறங்கினர். வீட்டிற்கு வர இருட்டிவிட்டது. மாரிகாலமென்றால், பிற்பகல் நான்கு மணிக்கே வானம் இருண்டுவிடுமல்லவா! கீதா வரதேவியை வீட்டில் கொண்டு விட்டு வருதாகக் கூறி வரதேவியுடனேயே வரதேவி வீட்டிற்கு வந்தாள். இருவரும் வீட்டுவாசலுக்கு வர கரன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வீடெங்கும் இருளாகக் காணப்பட்டது. வாசலுக்கு வந்த கரன் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். வரதேவியும்

 “வீடு முழுவதும் இருட்டாக இருக்கின்றது. லைட்டைப் போடுங்களேன்”

என்றபடி வாசல் மின்விளக்கைப் போடுவதற்காகச் சென்றாள்.

 “ம்….ம்….”

 என்றபடி அவளைத் தடுத்த கரன் அப்படியே அவளை அணைத்தபடி வரதேவி கண்கள் இரண்டையும் கைகளால் மறைத்துக் கொண்டு உள்ளே கூட்டிச் சென்று உள்லைட்டைப் போட்டான். ஆச்சரியம் அங்கே வீடு முழுவதும் விருந்தினர்கள் நிறைந்திருந்தனர். சுவரிலே அழகாக கரனால் வரையப்பட்ட வரதேவியின் பெரிய படம் காட்சியளித்தது. வீடு முழுவதும் வரதேவியின் பிறந்தநாளுக்காய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடியபடி விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். கரனும் ஹீபோர்ட்டை எடுத்துவந்து பிறந்தநாள் பாடலைப் பாடினான். வரதேவிக்கு என்ன செய்வதென்று புரியாத ஆனந்தம் அளவுகடந்து கண்ணீராய் கன்னங்களைக் கழுவியது. தானறியாது தன் பிறந்தநாளுக்காய் கரன் செய்திருந்த ஆயத்தங்கள் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எதுவுமே தெரியாத வரதேவி வந்திருப்பவர்களுக்கு உணவு எப்படித் தயாரிப்பதென கலங்கிப் போனாள். இது பற்றி விசாரிப்பதற்கு கரனை அறையினுள் வரும்படி சைகை காட்டிவிட்டு அறையினுள் சென்றாள். பின் தொடர்ந்து அறையினுள் நுழைந்த கரனைக் கட்டி அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். வார்த்தைகளற்ற கண்ணீர் மடைதிறந்தது. இன்பமோ துன்பமோ உள்ளத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் பங்கு கண்ணீருக்குத் தானே உண்டு.

                       கரன் தன் விரல்களால் வரதேவி தலைமயிர் கோதினான். கண்ணீரைத் துடைத்தெறிந்தான். நாடியில் கைவைத்து முகத்தைத் தனக்கு நேரே நிமிர்த்தினான். சிரித்தபடி “இஞ்சபார் வரா! இது என்ன நான் பெரிதாகச் செய்துவிட்டேன். என் ராசாத்திக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்னும்  எண்ணம் எனக்கிருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது பார்த்துக் கொள்வோம். சரிசரி எல்லோரும் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். கண்ணைத் துடைத்துக் கொண்டு வா. கேக் வெட்டியபின்  கதைத்துக் கொண்டிரு. நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டுவருகின்றேன்” என்று கூறினான் கரன்.

 “சாப்பாடா? இது பற்றிக் கேட்பதற்குத்தானே உங்களைக் கூப்பிட்டேன்‘‘ என்ற வரதேவியிடம்

 “சீன ரெஸ்டோரன்ரில் சாப்பாட்டிற்கு ஓடர் கொடுத்தாச்சு. அதுவும் போய் எடுக்க வேண்டும். இந்த சாரியைக் கட்டிக் கொண்டுவா‘‘ என்று கூறிய கரன் தான் முன்னமே வாங்கி வைத்திருந்த புடைவையை வரதேவியிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினான். அதிர்ச்சியாயும் ஆனந்தமாயும் ஆச்சரியமாயும் அமைந்த இன்றைய நிகழ்வுகளை மனதினுள் இரைமீட்டியவண்ணம் பொருத்தமான ஒரு ரவிக்கைக்குள் நுழைந்து புடைவையை பவித்திரமாய் அணிந்து வந்திருப்பவர்கள் முன் வந்தாள் வரதேவி.

                ஐரோப்பியர் கலாச்சாரம் ஒன்று தமிழர் வீட்டில் கேக் வெட்டும் நிகழ்வுடன் நடந்தேறுவதற்கான ஆயத்தங்களை கீதா செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருந்தாள். கீதா கூட எல்லாம் அறிந்தும் எதுவும் கூறாது ரகசியமாய் ஒளித்து வைத்திருந்தாள் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டாள் வரதேவி. மேசை மேல் அடுக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகளைக் கண்டு வரதேவி திகைத்துவிட்டாள். இத்தனை சிற்றுண்டிகளும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சிற்றுண்டியாகச் செய்து மேசையை நிரப்பியிருந்தார்கள். ரோல்ஸ் இல்லாத விழாக்களை ஜேர்மனியில் காண்பது அரிது. ஜேர்மனி வாழ் தமிழ் சிறுவர்களும் இளசுகளும் கேக் சாப்பிடுகிறார்களோ இல்லையோ ரோல்ஸ் சாப்பிடத் தவறமாடடார்கள். நீட்டுகின்ற தட்டிலே முதலில் கைவைப்பது ரோல்ஸ் என்னும் தின்பண்டத்திலேயே. அதனால் விழாக்களின் ராஜா ரோல்ஸ் என்றால் அது மிகையில்லையே.

                      கேக் வெட்டப்பட்டது. தம்பதிகள் தத்தமக்குக் கேக் ஊட்டும் சம்பவம் தொடர பரிசில்கள் வழங்கப்பட்டன. சீன உணவு பரிமாறப்பட்டது. கரன், மனமகிழ்ச்சி அத்தனையும் கொட்டி நண்பர்கள் சகிதம் மனதுக்கும் உடலுக்கும் போதை ஊட்டினான். போத்தல்கள் மேசை மேல் அடுக்கப்பட உள்ளிருந்த பதார்த்தங்கள், கரன் உட்பட நண்பர்கள் அனைவரது உடலினுள்ளும் பிரயாணம் மேற்கொண்டன. விரல்களிடையே இடுக்கிக் கொண்ட சிகரெட்டுக்கள் விடை பெற முடியாது எரிந்து விடைபெறத் தவித்தன. எரிகின்ற புகையை வெளியே அனுப்ப விரும்பாத சிகரெட் விரும்பிகள் அப்புகையை உள்வாங்கி இன்பம் கண்டனர். உதடுகள் தொட்டுத் தொட்டு நடம்புரிந்த  வெள்ளை அங்கி நாயகிகள் வாழ்வின் இறுதி நேரத்தில் ஆசைநாயகர்களுக்கு  இன்பம் கொடுத்து மெல்ல மெல்லச் சாம்பலானார்கள். இச்சுகங்கள் ஒவ்வொன்றாய்த் தீரக் கரன் நண்பர்களின் மனைவிமார்கள் தத்தமது கணவன்மார்களை அழைத்துக் கொண்டு விடைபெற்றார்கள். கரன் குடிப்பழக்கம் கொண்டவன் என்பதை அன்றே வரதேவி அறிந்துகொண்டாள்.  அமைதி கண்ட வீட்டை கரனும் வரதேவியும் இணைந்தே ஒழுங்குபடுத்தினர்.

                            அன்று எதுவுமே கேட்டறியாத வரதேவி அடுத்தநாள் இப்பழக்கத்திற்கு அடிமையான கரனிடம் இதிலிருந்து வெளியேறும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.

 “எப்போதும் இப்படியில்லை. ஏதாவது பார்ட்டி என்றாலேயே சந்தோசத்திற்காக எல்லோரும் பாவிப்போம். மற்றப்படி இதுதான் வேலை என்றில்லை‘‘ என்று சமாளித்துவிட்டான். அவன் பேச்சிலே நம்பிக்கை ஏற்பட வரதேவி அன்று அமைதியானாள்.

                                                                                ———

                      மீதமிருந்த வேலைகளை வரதேவி பொறுப்பெடுக்க வேலைக்குப் புறப்பட்டுவிட்டான் கரன். முதலில் கரன் வரைந்த தன்னுடைய படத்தைத் தனியளாய் நின்று இரசித்தாள், இன்புற்றாள், தனக்குள்ளே மகிழ்ந்தாள். வரம் பெற்ற தன் வாழ்க்கையின் வசந்தத்தை எண்ணினாள். உள்ளம்நிறை மகிழ்வுடன் அறையினுள் சென்று மேசைமேல் இருந்த பத்திரங்களை ஒழுங்குபடுத்தினாள். அப்போது புரியாத மொழியில் எண்களை மாத்திரம் புரிய வைத்த கடிதங்களைக் கண்டாள். என்ன இது 1000 ஒயிரோ 800 ஒயிரோ 450 ஒயிரோ போன்ற கணக்குகளுடன் கடிதங்கள் கிடக்கின்றனவே. என்ன இவை? எதுவுமே புரியாதவளாய் அவற்றை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு கரன் வரவுக்காய்க் காத்திருந்தாள். ஐரோப்பியநாட்டில் உழைப்பை நாடிச் செல்லாத பெண்கள் நாள் ஒன்றைக் கடப்பதென்றால், மாட்டுவண்டிப் பிரயாணமே. சிலர் தமது பொழுதுகளைக் கேட்டல் புலனுக்கு இனிமை கிடைக்க, இவர்களுக்காகவே தொழிற்படும் தமிழ் வானொலிகளில் செலவுசெய்வார்கள். சிலர் கேட்டல், பார்த்தல், உணர்தல், புலன்களுக்கு உதவும் தொலைக்காட்சிகளில் செலவுசெய்வார்கள். இரண்டும் அற்றவர்கள் தொலைபேசியில் காதை ஒட்டிக்கொண்டு ஊர்வம்பில் உலகத்தையே அளப்பார்கள். வரதேவிக்கு ஊர் புதிது. நண்பர்கள் அரிது. உதவிக்குத் தமிழ் தொலைக்காட்சி ஒன்று கரனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் எவ்வளவு நேரம்தான் அதில் செலவு செய்வது தனக்குப் பிடித்த ஆசிரியத்  தொழிலை மேம்படுத்துவதற்கான யோசனையில் தனது பொழுதுகளை அர்ப்பணிப்பது வரதேவி தொழிலானது. நேரம் கரைய கரனும் வீடு நோக்கி வந்தடைந்தான். உணவுப் பரிமாற்றம் முடியக் கடிதங்களைக் காட்சிப்படுத்தினாள்.

                   “இது எல்லாம் உனக்கு எதற்கு? ஐரோப்பியநாட்டில் வாழ்வது என்றால், இலகுவான காரியமா? எங்களுடைய நாட்டில் இருப்பவர்கள் இங்கு பணம் உழைப்பது ஓடுகின்ற தண்ணீரில் அள்ளி எடுப்பது என்று நினைப்பார்கள். இங்கு குடிக்கும் தண்ணீர் கடையில் வாங்குகிறோம். கழுவி ஊற்றும் தண்ணீருக்குக் காசு கட்டுகின்றோம். தண்ணீரைக்கூட பார்த்துப் பார்த்துச் செலவு செய்ய வேண்டும். கரண்ட் இல்லாமல் இங்கு வாழத்தான் முடியுமா? அதன் விலைகூட கட்டுக்கடங்காது கூடிக்கொண்டே போகிறது. ஹீற்றர் இல்லாமல் விட்டால் குளிரில் விறைத்துப் பிணமாகத்தான் போகவேண்டும். சேர்ந்த குப்பையைக் கொட்டுவதற்குப் பணம், வாகனத்தை வீதியில் செலுத்துவதற்குப் பணம், தொலைக்காட்சி பார்ப்பதற்குப் பணம், வானொலி கேட்பதற்குப் பணம். பணம், பணம், பணம், இப்படி எத்தனையோ. அத்தனையும் சமாளிக்கவேண்டுமென்றால், கைநிறையப் பணம் வேண்டும். ஓயாது உழைக்க வேண்டும். உழைக்கின்ற பணத்தில் அரைப்பகுதியை அரசாங்கம் இப்படியான காரியங்களுக்குப் பிடிங்கிக் கொள்ளும். இது ஒவ்வொரு மாதமும் ஆரம்பப் பகுதியில் நடப்பதுதான். இதையொன்றும் பெரிதாக நினைத்து நீ கவலைப்பட வேண்டாம். எல்லாம் சமாளிக்கலாம்….‘‘ என்ற நீண்ட விளக்கம் கரனால் வழங்கப்பட்டது.

 “அப்படியென்றால்….., இந்தத் தேவையில்லாத செலவெல்லாம் எதற்குச் செய்கின்றீர்கள்? நேற்றைய நாள் இப்படி செலவு செய்து என்னுடைய பேர்த்டேயைக் கொண்டாட வேண்டுமா?‘‘ என்றாள் வரதேவி.

 “என்ன கதைக்கிறாய்… இது வேறு. அது வேறு. இந்தச் செலவுகள் எல்லாம் இருக்கின்றன என்பதற்காக செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் இருக்க முடியுமா? என்ன கஷ்டமோ நஷ்டமோ உனக்கு ஒரு குறையும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன். வாழ்க்கை என்பது இதுவே. வாழ்ந்துதான் பார்க்கணும்‘‘ என்பவனை இடைமறித்தாள் வரதேவி.

 “இல்லையப்பா. நானும் ஒத்தாசையாக…..”என்றிழுத்தவளை. இடைமறித்தான் கரன்

 “வருவது வரட்டும் உன்னைக் கஷ்டப்படுத்தி வேலைக்கு அனுப்பி நாம் வாழ வேண்டும் என்பதெல்லாம் எனக்கில்லை. வருவாய்க்குத்தக்கபடி வாழ்வோம். மற்றவை கர்த்தர் கையில்” என்றபடி கடிதங்களை எடுத்துப் பக்கெட்டில் திணித்து உடை மாற்றிப் படுக்கைக்குச் சென்றான்.

 ஒரு கணவன் என்பவன் தன் மனைவி மகிழ்ச்சியைத் தன் மகிழ்ச்சியாய்க் கொள்வான். தாலியை அவள் கழுத்து ஏற்க அவள் வாழ்வு அத்தனையையும் அவன் ஏற்பான். தன்னால் ஒரு பெண்ணின் தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு ஆண்மகன் அவளை வாழ்க்கைத் துணைவியாய் ஏற்றுக் கொள்வதில் அர்த்தமே இல்லை. முடியும் என்னும் போதே அவளைத் திருமதியாய் மாற்றும் தகுதியைப் பெறுகின்றான். பிரச்சினை பிரச்சினை என்று கூறித் தானும் வாழாது தன்னை நம்பி வந்தவளையும் வாழவிடாது. காலம் முழுவதும் கஷ்டத்தைச் சொல்லி வாழும் எத்தனையோ ஆண்கள் மத்தியில் கரன் ஒரு தனிமகனாய் வரதேவி கண்டாள். ஆனாலும், உள்ளமெங்கும் இருவர் குடும்ப வாழ்க்கைக்கும் தன் பங்களிப்பு அவசியம் தேவை என்று வரதேவி மனதில் உறுதி கொண்டாள். தனியனாய்த் தன் கணவன் மாத்திரம் வீட்டிற்கும் தன் பாடசாலை சேவைக்கும் பணம் பெருக்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க வரதேவி மனம் இஷ்டப்படவில்லை.

                                                                          —————–

                  நாளும் வரதேவி போட்ட தூபம் பற்றிக் கொண்டதனால், வரதேவி சில மாதங்களின் பின் வேலைக்குப் போக ஆயத்தமானாள். மொழிப் பயிற்சி இல்லாத காரணத்தால், ஒரு பெரிய விற்பனை நிலையத்தில் துப்பரவு செய்யும் தொழில் வரதேவிக்கு வாய்த்தது. ஒரு குடும்பத்தில் மனைவியானவள் வீட்டு வரவு செலவில் பங்கேற்றல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை அநுபவம் மூலம் அறிந்து கொண்டாள் வரதேவி. உடலும் உள்ளமும் ஒத்துக்கொண்டதால், துப்பரவுத் தொழில் ஒரு ஆத்மதிருப்தியை அவளுக்குக் கொடுத்தது. காலைவேளை சூரியனுக்கு முன் விழித்துக் கொள்ளவேண்டும். கடை திறப்பதற்குமுன் தரையெல்லாம் பளிச்சிடவேண்டும். வீதி வெளிச்சம் மறைவதற்குமுன் வேலை முடிக்க வேண்டும். விறுவிறென்று செய்யும் வேலையில் அசுத்தம் இருந்த இடம் தெரியாது மறைந்து ஓடவேண்டும். தொட்டவேலை முடிந்தபின் மறவாது கடையை முறையாகப் பூட்டி கடமையை முடிக்கவேண்டும். குறிப்பிட்டநேரம் தொடங்கி குறிப்பிட்டநேரம் முடித்து குறிப்பிட்ட தொகையை மாதம்மாதம் பெற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் சந்தோசத்தின் உணர்வு எப்படியிருக்கும்? என்பதை அவள் வார்த்தையால் வர்ணிக்கமுடியாத ஆனந்தத்தைப் பெறுவாள். வரதேவிக்கு மெல்லமெல்ல ஜேர்மனி நாடு தன்நாடாகிப் போனது. இந்நாடுவிட்டு எந்நாடு போனாலும் இந்தத் திருப்தியை வரதேவி பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலை அவளுக்கு ஏற்பட்டது.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.