Part 15

                 வரம் கொண்ட வாழ்வது

                 திறம் கெட்டுப் போனாலும்

                 உரம் கொண்ட வரமது

                 உருக்குலைக்கும் உருக்கினார் வாழ்வை

 வாழ்நாட்களில் வந்து போகும் சோகநினைவுகள் வரதேவி மூளைப் புதையலில் அழியாத அறிவுப்பலகையாய் அச்சடிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது தலைகாட்டும் நினைவுகளை விரட்டியடிக்க வரதேவி விரும்பிய பணி மீண்டும் வீடு தேடி வந்தது. திறமையும் அறிவும் மறைக்கப்பட்டாலும் மறுக்கப்பட்டாலும் மடைதிறந்த வெள்ளம் போல் ஒருநாள் பெருக்கெடுத்தே தீரும். இதனாலேயே அறிவுச்செல்வம் அழிக்கமுடியாத செல்வமாய்க் கருதப்படுகிறது. அறியாதமொழி, புரியாத மனிதர்கள் தெரிந்திராத வாழ்வு எதுவாய் இருந்தாலும் அறிவுச் செல்வம் கிடைக்கப்பெற்றார் அந்தஸ்து வாழ்வை அகிலம் எங்கு சென்றாலும் அடையப் பெறுவார். வரதேவி இவ்வாறே எதிர்காலத் தலைமுறைகள் தமிழால் தலைநிமிர்ந்து நிற்கத் தேடித் தன் மனைபுகுந்தார் தம் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்தாள். வீட்டிலிருந்தபடி வீடுதேடி கல்வி அணைத்தெடுக்க விரும்பும் சிறார்களை அவள் அணைத்தெடுத்தாள். வீடு கல்விக்கூடமானது.

            மீண்டும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மனதில் பிரகாசித்தது. மீண்டும் ஆர்வ வெள்ளம் மனமெங்கும் பாயத் தொடங்கியது. தொழிலாய்க் கொள்ளாது, பணியாய்க் கொண்டு பயின்ற பல கல்விக்களஞ்சியங்களைப் பாலர் தொட்டுப் பருவ வயதினர்வரைத் தாரைவார்க்கத் தீர்மானித்தாள். மனநிறைவு பெற்றாள். ஆசிரியத்தொழில் நாளுங்கற்று நாளுங்கற்பிக்கும் தொழிலல்லவா! அவள்; கவனம் இதில் ஈடுபடும்போது வேற்றுத் தாக்கங்கள் மனதைத் தொட்டுத் தொடராது. மாணவர்கள் கற்க ஆசிரியர்கள் கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் கடமை அல்லவா. இனியொரு தடவை இவ்வரதேவி கற்பித்தலில் தடை காணமாட்டாள். தடைசெய்வார் துணிவுதளர்ந்து நிற்கும் நேரமிதுவென முற்றாக நம்பியதனால் முடிவாய் இப்பணிக்கு முகங்கொடுக்கத் துணிந்தாள். வாரம் இருதடவைகள் காணும் தமிழ்ச்சிறுவர்கள் முகங்கள் அவள் மனதிற்கு மருந்தாகியது. நோயை விரட்டியடிக்கும் பயிற்சியாகியது.

           வானொலி வரதேவிக்குச் சேர்த்துத் தந்த சொந்தங்கள் உலகத்தையே ஆள்காட்டி விரலால் சுற்றி விடுவேன் என்னும் நம்பிக்கையைத் தந்தது. தொலைபேசி இலக்கங்கள் தாங்கிய புத்தகம் அவள் தினமும் படிக்கும் பகவத்கீதையானது. பலரின் அறிவுரைகள் வரதேவிக்கு உற்சாக பானமானது. மௌமாய்க் கேட்பாள். மனதிலே பதிப்பாள். பழைய வார்த்தைகளின் தீவிரம் அணைந்த நெருப்பாகியது. அமைதியான பொழுதுகளில் நடந்துவர வீதிக்கு இறங்குவாள்.

      சமயம் பார்த்துக் கரன் அன்று தொலைபேசிப் புத்தகத்தைப் புரட்டினான். அதிலிருந்து ஒரு இலக்கத்தைத் தட்டினான்.

 “ஹலோ……”

 “வணக்கம். நான் கரன். வரதேவியினுடைய கணவன் பேசுகிறேன்”

 முன்னமே வரதேவியால் கரன் பற்றி தெளிவாகத் தெரிந்திருந்த அந்த இலக்கத்திற்குச் சொந்தக்காரி நிலா.

 “சொல்லுங்கள். எப்படிச் சுகமாக இருக்கின்றீர்களா?

 “ஆம். நல்ல சுகம்..”

 “நான் உங்களிடம் ஒரு விசயம் கேட்கவேண்டும். என்னென்றால் ஒரு சஞ்சிகை வெளியிடுவதற்கு இருக்கிறேன். முதலிலே செய்து வந்தேன். பிறகு நிற்பாட்டி விட்டேன். ஆனால், உங்களுக்குத் தெரியாமல் இல்லைதானே. இடையில் வந்த பிரச்சினைகளால் நிற்பாட்டி இருந்தேன். மாதம் ஒரு புத்தகமாக வர வேண்டும் என்று நினை;கிறேன். உங்களால் முடிந்த ஆக்கங்களை எனக்குத் தரமுடியமா?”

 வீட்டினுள் நுழையத் துடிக்கும் பாம்பை வரவேற்று வீட்டிற்குள் வைக்கமுடியுமா? வரதேவியால் விபரிக்கப்பட்ட திரைப்படம் மூளைக்குள் ஓடுகின்றபோது திரைக்கதைக்குள் நாமும் நுழைய முடியுமா? என்று சிந்தித்த நிலா

 “எனக்கு இப்போது நேரம் இல்லை. நேரம் கிடைத்தால் மட்டுமே எழுத்துத் துறை பற்றிச் சிந்திப்பேன். முடியுமானால் எழுதி அனுப்புகிறேன். நிச்சயம் இல்லை”  நினைத்ததை மனதினுள் மறைத்து தொலைபேசியைத் துண்டிக்க முடிவெடுத்தவளிடம்.

 “பறவாயில்லை. ஒரு பாப்பாப் பாட்டாவது எழுதிக் கொடுக்கின்றீர்களா? மீண்டும் அவன் கெஞ்சல்.

 யாராவது எதுகேட்டாலும் இல்லை என்று தலையசைக்க முடியாத பண்பு கொண்ட நிலா

 “முயற்சிக்கின்றேன்”  என்று கூறினாள்.

 “என்னைப் பற்றி வரதேவி உங்களிடம் சொல்லியிருப்பா என்று நினைக்கிறேன். அவ அப்படித்தான் சொல்வா…. என்னிடமும் பிழை இருந்ததுதானே. அவவுடைய நிலையில் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள். அதனால் விட்டுவிட்டேன். அவ நினைப்பதுபோல் நடக்கட்டும். இனி என்னால் அவக்கு எந்தத் தொந்தரவும் வராது. எந்த மனிதனும் அப்படியே இருப்பதில்லை. காலம் அவன் போக்கை மாற்றும். அப்படித்தான் வரதேவிக்கும் எனக்கும் இடையே அடைபட்ட வாசல் திறக்கும் என்று நம்புகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். நீங்கள் நான் கேட்ட பாடல் அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன். சரியா…. இப்போது வைக்கிறேன்”

 காற்றலையிலிருந்து பிரித்தெடுத்து நிலாவின் காதினுள் தொலைபேசி தந்த கரனின் பேச்சலையானது என்ன காரணத்திற்காக தன் காதுக்குள் ஒலித்தது என்னும் உண்மை புரிந்து கொண்டாள்.

 “இவர் பேசியது எல்லாவற்றையும் வரதேவியிடம் நான் ஒப்புவிப்பேன் என்று இவர் நினைக்கிறாரோ! அவரவர் குடும்பப் பிரச்சினைக்குள் உள்நுழைந்து குழப்புவது  யாருக்குத் தேவை. பாப்பாப் பாட்டுக் கேட்டு தொலைபேசி எடுத்துத்  தான் பட்டபாடும் வரதேவியை படுத்தியபாடும் பற்றிக் கதைக்கத்தான் முயற்சித்தாரோ! இது நிலா மனதில் ஓடிய எண்ணப்பதிவு.

             ஆனால் நிலா எதுபற்றியும் வரதேவியிடம் ஒப்புவிக்கவில்லை. ஏனென்றால் நிலாவோ வரதேவி மனஓட்டத்தில் கல் விழுந்து குழப்பினால், அக்கல்லைப் பாறாங்கல் இல்லாமல் பனிக்கல்லாய் மாற்றும் கலையைக் கொண்டிருக்கின்றாள் அல்லவா! வரதேவியின் மனம் என்னும் அபாய ஊஞ்சல் அறுந்துவிடாமல் ஆறுதல் நூல் கட்டிவிட்டிருக்கின்றாள் அல்லவா! சுகமான நட்பு பல சுகந்தங்களை வாழ்வுக்கு காட்டிவிடும். தீநட்பு படுகுழியில் வீழ்த்திவிடும். இது அறிந்தும் சில மனிதர்கள் மாண்டுவிடுகின்றார்கள். வரதேவி மனதில் கடல்விழு பொதியாக கிடக்கும் நினைவுகள் மீளும்போது நிலாவுடன் நினைவுகளைத் திசைதிருப்ப வார்த்தைச் சங்கிலியைக் கட்டுவாள். நிலாவிடம் இருந்து அச்சங்கிலி பற்றித் தொடரும் வார்த்தைகள் மீண்டும் கடல்விழு பொதியாக நினைவுகளை அமிழ்த்திவிடும். அவளைப் பழைய நிலைக்குத் திருப்பி அனுப்பாமல் தொலைபேசி என்னும் மருந்து ஊடகம் கொண்டு மருத்துவம் பார்க்கும் நிலா கரன் தன் இலக்கத்தை களவாய் எடுத்துக் கதை அளந்த செய்தியைக் கூறுவாளா? நிலா மறைத்தாள். ஆனால் நிலா போல் யாவரும் இருப்பார்கள் என்பது நிச்சயம் இல்லையே. எப்படியோ தன் பேச்சுத் துணைகளுடன் கரன் தொடர்பு கொண்ட விடயத்தை வரதேவி அறிந்து கொண்டாள்.

           “வேண்டாம் என்று நான் ஒதுக்கினாலும் என் வழியில் ஏன் நுழைகின்றீர்கள். என் நண்பர்களுடன் நீங்கள் கதைக்க வேண்டியதன் அவசியம் என்ன….? நல்லவரென்று நாமம் போடப் போகின்றீர்களா…..? எல்லோருக்கும் உங்கள் நாடகம் தெரியும். தெரியாது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என் புத்தகத்தை எடுத்து எனது நண்பர்களுடன் கதைக்க உங்களுக்கு என்ன துணிவு இருக்கும். இது உங்களுக்கு நாகரீகமாகப்படுகின்றதா……உங்களுடைய தொடர்புதான் வேண்டாமென்று என்ர மன ஆறுதலுக்குச் சிலரோட கதைக்கிறன் அதுகூட உங்களுக்குப் பிடிக்கவில்லையா..?

 இரகசியமாகக் கரன் செய்த காரியத்தில் ஆத்திரமடைந்த வரதேவி வார்த்தைகளினால் சுடுநீர் ஊற்றினாள். மனம் வெந்த கரனும்

           “வரா! உன்னோட நல்லா எல்லோரும் பார்த்துப்  பெருமைப்படும்படியாக வாழவேண்டும் என்றுதானே உன்னை இலங்கையிலே இருந்து கௌரவமாக கூப்பிட்டேன். இப்போது ஏதேதோ எல்லாம் நடந்துவிட்டது. அதற்காக நான் முழுதாகக் கெட்டவன் என்றே கணக்கெடுத்துவிட்டாயா?

            “போதும் போதும் நிறுத்துங்கள். உங்களுடைய கதைகள் எல்லாம் கேட்டுத்தான் இன்று பொல்லாதவள் என்று பட்டம் சுமந்து வாழ்கின்றேன். மற்றவர்கள் பார்த்துப் பெருமைப்படும்படியாக வாழவேண்டிய அவசியம் என்ன வந்திட்டு. நாம் நமக்காக வாழவேண்டும். மற்றவர்களுக்காக வாழப்போய்த்தான் உங்கள் வாழ்வு இப்படிப் போனது. என்னை ஏன் இங்கே வரச் சொன்னீர்கள்? வந்ததாலேதான் எனக்கு இந்தநிலை. இப்போது என் நிம்மதிக்குப் பேசுகின்றவர்களையும் குழப்பத் தொடங்கிவிட்டீர்கள்”  தன் பக்கப் பார்வையை கரன் பக்கம் விரித்துரைத்தாள்.

  எதைத்தான் தான் செய்தாலும் அதில் எந்தத் திருப்தியும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த கரன்,

 “சரிவிடு….. நீ உன்ர எண்ணப்படி நட. நான் உன் குறுக்கே வரல்ல. நான் எப்போ உனக்கு நல்லவனாத் தெரியிறனோ அப்ப என்னோட மனத்தை அறிந்து சந்தோசமா என்னோட வாழ். இல்லையென்றால், நான் உன்ன விட்டிற்றுப் போனாப் பிறகு என்னைப்பற்றி யோசித்துப்பார். அப்ப என்ன நினச்சி நிச்சயமா கண்ணீர் விடுவாய் பார். இதுக்குமேல நான் எதுவும் சொல்லவில்லை” வரதேவி அன்புக்காய் ஏங்கிய கரன் சொற்கணையால் அரித்துப் பிய்ந்த மனதுடன் புறப்பட்டான். வரதேவி அதில் எந்தவித தாக்கமும் இன்றி விலகினாள்.

 சிலவேளை வீட்டில் சிலவேளை எங்கேயோ….. எங்கே அவன் என்று அவள் என்றுமே எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை. வாழ்க்கை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் வரதேவியும் கரனும் போகத் துணிந்தார்கள்.

         இவ்விரண்டு முரண்பட்ட மனங்களுக்கிடையே மகனாய் வரனின் வயது நிற்காது வளர்ந்தது. வாழ்வும் தொடர்ந்தது. பாடசாலைக் காலங்களும் நகர்ந்தன. தாயும் தந்தையும் போட்டிபோட்டுத் தன் மகனுக்குப் பாசத்தை வழங்கினார்கள். தம்முடைய பூசல் தம் மகனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதில் இருவரும் கவனம் எடுத்தனர். ஆயினும் அவர்களை மீறி நடக்கும் போராட்டத்திற்கு அவர்களால் தடை விதிக்க முடியவில்லை. தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான். தேவை அவதானம் என்றிருந்தாலும், தேவை தேவைப்படும்போது அவர்கள் விட்ட பிழை சரியான முறையான கல்வியை வரனுக்குக் கொடுக்கத் தவறியது. ஆனாலும், வரனோ சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து கற்றான்.

        வீட்டின் வாசல் அழைப்புமணி அடித்த ஓசை கேட்டு “யாரது…. யாராக இருக்கும்….” என்னும் கேள்வியுடன் கதவைத் திறந்தாள் வரதேவி. பொதுவாகவே ஜேர்மனியில் முன்னறிவித்தல் இன்;றி  விருந்தினர்கள் வருவது கிடையாது. வேலை பிள்ளைகளின் கலை வகுப்புக்கள் மருத்துவரிடம் அலுவல் அல்லது ஏதாவது விழா இப்படி வீட்டை வெறுமையாக்கிவிட்டுக்  கிளம்பிவிடுவார்கள். இக்காரணத்தினால் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் முன்னமே செல்கின்ற வீட்டிற்கு முன்னறிவித்தல் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று முன்னறிவித்தல் இன்றி வருவது யாராக இருக்கும் என்ற எண்ணஓட்டத்துடன் வாசல் கதவின் சங்கிலியை மாட்டிவிட்டுக் கதவைத் திறந்தாள் வரதேவி. இப்போதெல்லாம் அவள் மனிதஉருவில் நடமாடிய மிருகம் ஒன்று தன்னைச் சூறையாடத் துடித்த சம்பவத்தின்பின் வாசல் கதவு திறப்பதில் கொஞ்சம் கவனம் எடுப்பது வழக்கம். கதவில் பூட்டியிருக்கும் இரகசியக் கண்ணாடியினூடாக வருவது யாரென ரொம் அன்ட் ஜெரியில் (Tom and Jerry) வரும் எலிபோல் நோக்கினாள். வேறுயாருமல்ல கீதாவேதான். கீதாவின் இரு பிள்ளைகளும் கூடவே வர சந்தோசம் மிகுதியுடன் கதவைத் திறந்தாள்.

 “என்ன கீதா ஒன்றுமே சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று….. வாருங்கள் வாருங்கள்…..” என்று அன்பொழுக அழைத்தாள்.

 “சும்மாதான் அக்கா. கடைக்கு வந்தனாங்கள். ஒருதடவை உங்களையும் பார்த்திட்டுப் போவோம் என்று பிள்ளைகள் சொன்னார்கள். அதுதான்….. இந்தத் திடீர் பிரவேசம்…..” என்று கூறியபடி உள்ளே வந்தாள்.

 “எப்பிடி அன்ரி இருக்கின்றீர்கள்”

 “நான் நல்லாத்தான் இருக்கிறன். நீங்கள் எப்படி? அன்ரியைப் பார்க்க எண்ணம் வந்திட்டுதா? நீங்கள் வந்தது நல்ல சந்தோசமா இருக்கு. வரன் அறைக்குள்ள இருக்கிறார். போய்ப் பாருங்கள்” என்று வரதேவியைத் தனியே இருக்கும் தன் மகனிடம் பேச அனுப்பிவிட்டாள்.

 பிள்ளைகள் இருவரும் வரன் அறையினுள் சென்றுவிட பெரியவர்கள் இருவரும் வரவேற்பறையினுள் அமர்ந்தனர். தேநீர் தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிய வரதேவியிடம் அவள் உடல்நிலை பற்றி கீதா வினவினாள்.

 “எப்படி இருக்கின்றீர்கள் அக்கா?

 “ஆ….ஏதோ இருக்கிறேன்”

 “ஏனக்கா இப்படிச் சொல்றீங்கள்”

 “உண்மையைத்தானே சொல்லவேண்டும் கீதா”

 “அண்ணா எங்கே போயிட்டார் அக்கா?

 “எனக்கென்ன தெரியும் கீதா…. அவர் எங்கே போறார்? என்ன செய்கிறார்? இதெல்லாம் யார் கேட்கப் போறார்கள். என்னுடைய தலைவிதி இதுதான் என்று இப்படி வாழ்கிறேன். மாரிகால மரங்களைப்போலத் தான் என்ர வாழ்வும் அடங்கியிருக்குது. அவைகளுக்கும் உயிர் இருக்கு. உடலிருக்கு. உணர்வுகளெல்லாம் உதறித்தள்ளிவிட்டு பட்டமரமாய் நிற்குதுகள். நல்லகாலம் எப்போ வரும்? நாம் எப்போது இலைகள் விட்டுத் துளிர்த்து மீண்டும் குதூகலமாக இருப்போம் என்று எதிர்பாத்து நிற்குதுகள். நானும் அப்படித்தான். சொல்லப்போனால் நானும் பட்டமரம்தான். நானும் எனக்கு எப்போ நல்ல கலம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்”

 “இப்படிச் சொல்லாதீங்கள் அக்கா. எந்தக் குடும்பத்தில்தான் பிரச்சினை இல்லை. எவர்தான் 100 வீதம் நிம்மதியாக வாழுகின்றார்கள். எல்லோரும் தங்கள் பிரச்சினையை மூடி மறைத்துத் தம்பதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பார்க்கிறவர்கள் கண்களுக்கு அவரவர் பிரச்சினைகள் தெரிவதில்லை. பனிமூடிய நிலமாய் வாழுகின்றார்கள். புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அதிகமானவர்கள் நிலமைகள் இதுதான். என்ன உங்கள் நிலமை வெளியுலகத்திற்குத் தெரியுது. அதுதான்…”

 “என்னால் எதையும் மூடிமறைத்து வாழமுடியாது கீதா. ஏன் அவரவர் உண்மை முகம் வெளியில் நிச்சயமாகத் தெரியவேண்டும். பிறருக்கு எனது வாழ்க்கை பாடமாக அமைய வேண்டும். வெளிநாடு என்றவுடன் சொர்க்கம் என்று பறந்தடித்து பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் பெற்றோர்களுக்கு இந்த வாழ்க்கை புரியவேண்டும்”

 “ஏனக்கா இலங்கையில் இப்படிப் பிரச்சினைகள் குடும்பங்களில் இல்லையா? அங்கேயும் இப்படியான பிரச்சினைகளுடன் எத்தனை பெண்கள் கண்ணீர் உப்புக் கரைத்த கன்னங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்”

 “நிச்சயமாக கீதா…ஆனால் அங்கு உற்றார் உறவினர்கள்  சூழல் என்று தம் துயரை மாற்றவும் மறைக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இங்கு  என் நிலை….. தனிமை…… தனிமை…… தனிமை…..”

 “இங்கும் உண்டு அக்கா…. ஆனால், அதற்கு நாம்தான் மனம் வைக்க வேண்டும். தனிமையை விரட்ட வழிமுறைகளைத் தேடவேண்டும். இந்த நாட்டவர்கள் எத்தனையோ பேர் இப்படி வாழுகின்றார்கள். ஆனால், அவர்கள் தம்முடைய வாழ்க்கையைச் சுகமாகவும் சந்தோசமாகவும் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள்”

“தெரியும்….ஆனால் எங்களுக்கு மொழிப்பிரச்சினை இருக்கின்றது அல்லவா கீதா… அதனால் இப்படியான இடங்களுக்குப் போவதற்குக் கஸ்டமாக இருக்கிறது”

 “கரன் அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார்…”

 “ம்…..”

 “பாவம் அக்கா. ஆண்கள் அழுது நான் பார்த்ததே இல்லை. நேற்று எங்கட வீட்ட வந்தார். தன்ர கவலையச் சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார்”

 “எல்லாம் நடிப்பு. என்னை எப்டியெல்லாம் படுத்தினார். நினைத்து நினைத்து இரத்தமெல்லாம் கூட தண்ணீராய் கொட்டட்டும். என் கவலை எல்லாம் எப்படி இரத்தவாந்தியாய் வந்ததோ அப்படியே வரட்டும். நான் பட்ட வேதனையில் ஒரு சிறிதளவாவது அவர் படக்கூடாதா?

 “அப்படிச் சொல்லக்கூடாது அக்கா. அவரின் போதாத காலம் பொல்லாத பாடுபடுத்திவிட்டது. இப்போது திருந்தி வாழ நினைக்கிறார். மனித இயல்பே அதுதானே அக்கா. ஒன்றைச் செய்து பார்த்து பிழையைத் திருத்தும் (Trial and Error) இதைத்தான் பிழைவிட்டுத் திருந்தும் இயல்புடையது என்று Karl Popper என்பவர் The Growth of Scientific Knowledge என்ர நூலில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் வெற்றிபெற அவர் எடுத்த எத்தனம் பிழையானது என்பதைப் புரிந்து கொண்டார். இப்போது திருந்தி வாழ நினைக்கிறார். அவர் எவ்வளவோ பேருக்கு நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால், அவர் செய்த சில காரியங்கள் அவரைப் பெரிய குடிகாரனாக்கி இந்தநிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இது அவருக்குப் போதும். நீங்கள் ஏன் இப்படி நினைக்கக் கூடாது. சட்டரீதியற்ற முறையில் ஒரு காரியம் செய்வது பிழை என்று தெரிந்தவர்கள் ஏன் இவரிடம் இந்த உதவியைக் கேட்க வேண்டும்”

 “அவர்களைப் பழி சொல்லாதீர்கள் கீதா! இவருக்கெங்கே மதி போனது”

 “உதவி என்று ஒருவர் கேட்கும்போது எப்படி மறுப்பது என்று நினைத்திருப்பார். தனக்கு வரும் கெடுதியைக் கூட நினைக்காது விட்டிருப்பார்”

“ஒரு பிழையா? எத்தனை பிழை செய்திருக்கிறார். எல்லாரையும் ஏமாத்தலாம். கடவுளை ஏமாத்த முடியாது? பிழை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். அது யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்||

 “நீங்கள் தாலிகட்டிய மனைவி. நீங்களே அவரைத் தண்டிக்கலாமா?

 “கீதா…  என்னதான் அறிவாளியாக இருந்தாலும் வாழ்க்கையைப் படிக்கவேணும். மற்றவர்களின் மனதை நோகடிச்சு வாழ்ந்தால் அது எந்த வகையிலும் அவர்களைப் பாதிக்கும். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ மனிதர்கள் சாபம்  யாரையுமே விட்டுவைக்காது தொடர்ந்து வந்து நச்சுப்பாம்புபோல் தீண்டிவிடும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது”

 “சரி நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு அவரின் கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டிவரும் அல்லவா! அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆறுதலுக்கு யாரிடம் அவர் போவார்? அவர் சரியாக மனம் உடைந்து போய்விட்டார் அக்கா……அவருக்கு எந்த  மருந்தும் பலன் அளிக்காது. உங்கள் அன்பு ஒன்றுதான் அவருக்கு மாமருந்து”

 “ஓகே கீதா… முயற்சிக்கிறேன். எனது நிலமையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். என்னால் பழைய மாதிரி அவருடன் பழகமுடியவில்லை. அவர் நெருங்குகின்ற போது நடந்த கசப்பான நிகழ்வுகள் வந்து என்னைக் குழப்புகின்றன. நான் இலங்கையில் இருக்கும் போது அவர் வெகுதூரத்தில் இங்கு இருந்தார். ஆனால், அவர் என் பக்கத்தில் இருப்பது போலவேதான் நான் உணர்வேன். அவர் மூச்சுக்காற்று என் மேல் படுவதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்படும். ஆனால் இப்போது பக்கத்தில் இருக்கிறார். எங்கேயோ தூரத்தில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. நெருங்கி வருகின்றபோது எனக்கு ஏதோ ஒரு ஆபத்து வருவது போல் என் மனம் சொல்கிறது. என்னென்று தெரியல்லை. என் மனம் அவரை ஏற்றுக்கொள்ளுதில்லை. சிலவேளை பிழை என்று உணர்கிறேன். என்னால் முடியவில்லை கீதா….. என்னால் முடியவில்லை….. இந்த வேதனையே என்னைக் கொன்றுவிடும்போல் இருக்கிறது. நான் உண்மையில் அவரை மனதார நேசித்தேன். என் உயிராகக் கருதினேன். இப்போது நடந்தவைகள் எல்லாம் பூதாகரமாக எனக்குள் அடிக்கடி விரிகின்றன. ஆண்டவனே என் உயிரை எடுத்துவிடு என்று எத்தனை முறை வேண்டிக்கேட்டேன் தெரியுமா? மனச்சாட்சியைக் கொன்று என்னால் வாழமுடியவில்லை. ஆனால், அவரை நான் ஏற்றுக்கொள்வேன்….. நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்…  அதற்குக் காலம் இருக்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும்”

 மடைதிறந்து வந்த கண்ணீர் வெள்ளம் கன்னம் நனைத்து  வடிந்து நெஞ்சுப்பகுதி சென்றடைந்து மனதை ஈரமாக்கியது. அடிக்கடி சிந்திய மூக்குநீர் நாசியைப் புண்ணாக்கியது. சிரித்தாலும் அழுதாலும் உடலானது கண்ணீர் தானமே செய்கிறது. விக்கித்து நின்ற வரதேவிக்கு கீதா வார்த்தை ஒத்தடம் போட்டாள்.

“அழாதீங்க அக்கா… நான்தான் உங்களைக் குழப்பிப்போட்டன்”

 “பறவாயில்லை கீதா…. உங்களுடன் கதைத்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனதுக்குள்ளே வெம்பிவெம்பி வெடிப்பதை விட மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் கவலை கொஞ்சம் குறையும் இல்லையா?

 “அக்கா! காலம் எல்லாத்திற்கும் பதில் வைத்திருக்கிறது.  அப்போது சூறாவளி அடித்த உங்களுடைய வாழ்வில் இனிவரும் காலங்களில் தென்றல் காற்று வீசும். பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உங்களுக்கு மட்டும் இந்தச் சோதனை இல்லை. இங்குள்ள அனைவருக்கும் இருக்கிறது. அதை மனதில் நினைத்து நிம்மதி அடையுங்கள். நான் வீட்ட போய் தொலைபேசி எடுக்கிறேன். திரும்பவும் இதுபற்றிப் பேசி உங்கள் மனதை நோகடிக்கமாட்டேன். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் இருவரையும் சந்தோசமாகப் பார்க்கும் காலம் விரைவில் வரும். இப்போது நான் போயிட்டுவாறன்”

           பிள்ளைகளுடன் விடைபெற்ற கீதா வரதேவியின் சிந்தனைக்கு தைலம்போட்டு விட்டாள். நல்ல சில எண்ணங்களை ஏற்றிவிட்டாள். தொடரவிருக்கும் பாதைக்கு வெளிச்சமிட்டாள்.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Comments are closed.