கதாசிரியர் உரை

நுழைவாயிலில் சில நிமிடங்கள்.

எழுத்துக்களை மனதில் சிறைப்பிடிப்போரே!

இந்நூலின் பக்கங்கள் உங்கள் கைகளில் சிறகடிக்கும் முன் சிலநிமிடங்கள் உங்களுடன் கௌசி நான் கலந்து கொள்கிறேன்.

                  வரிகளால் பாலம் போட்டு நான், உங்கள் நெஞ்சங்களை இந்நூலின் மூலம் வந்தடைகின்றேன். மூளைவீங்கி வெளியான என் எண்ணங்கள் கோர்க்கப்பட்ட முதல்நூல் என்னையே நானறியேன். இப்புதிய அகம் என்னை யார் என்று உலகுக்கு உணர்த்தும் என்று நம்புகின்றேன். இதனுள் புகுந்து வரும் வாசகர்கள் பெற்றுவரும் அநுபவங்கள் அவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் கருதுகின்றேன். என் அநுபவங்கள் சொல் ஆடை கட்டிச் சுதந்திரமாய் இந்நூலில் நடைபயின்றிருக்கின்றன.

தட்டச்சுப்பொறியில் விரல்கள் தடவ கணனித்திரையில் எழுத்துக்கள் காட்சிப்படுத்தப்பட கற்பனை கலந்து காலத்தைப் படம் பிடித்து புலம்பெயர் வாழ்வின் ஒரு விம்பம் கதையாக இங்கு விரிந்திருக்கின்றது. முதன்முதலாக ஒரு உண்மையை உலகுக் காதுகளுக்கு 2008 ஆம் ஆண்டு இலண்டன்தமிழ் வானொலியில் உரக்கச் சொல்லியபோது அது இன்று ஒரு நூலாகிக் கதைசொல்லும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. உலகமெங்கும் மனிதர்கள் அவர்கள் வாழ்க்கை ஒவ்வொன்றும் கதை சொல்லும். ஆயிரக்கணக்கான சம்பவங்கள் பாடுபொருள்களாக அமையும். அக்கதை எழுத்தாளர் கைகளில் பாவனையாகும்போது சிறந்த வாழ்வியல் இலக்கியமாகத் திகழும்.

                              பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம் பிடிப்பது திறம் அல்லவா?

அதனால், உண்மைச் சம்பவங்கள் பல கோர்க்கப்பட ,என்னோடு அடங்கியிருந்த அநுபவப் புதையல்கள் கலந்து கொள்ள, வாழும் நாடும் காலமும் பிரதிபலித்துக் காட்டப்பட, கதையின் கதாநாயாகி கண்ணீர்வரிகளுடன் இணைந்து வானொலியில் இலக்கியநேரத்தில் என்னையே நானறியேன் இலக்கிய வரிகளாயின. தமது வாழ்க்கையில் நடக்கின்ற விடயங்களை மறைத்து, சிக்கல்கள் போர்த்திய உடலாக வாழ்வோர் மத்தியில், தன் வாழ்க்கையைப் பலருக்கும் முன்னிறுத்திய கதையின் நாயகியின் துணிச்சலைப் பாராட்டியே தீரவேண்டும்.

கேள்வி ஞானத்தை மீட்டிப்பார்க்க வானொலி இடம்தராது. வரிகள் கோர்க்கப்பட்ட நூலே வசதிக்கேற்ப நினைத்த மாத்திரத்தில் அறிவுஞானத்தைக் கொடுக்கும். அதனால், இந்தக் கதையின் சம்பவங்களைச் சரித்திரமாக்க விரும்பிய தவமலர் அவர்கள் நூலாக்க முன்வந்தார். அகமிகமகிழ்ந்தேன். அவர் விருப்பிற்கேற்ப முதற்பதிப்புரிமையை மாத்திரமே அவருக்கு வழங்கினேன். அவர் எண்ணத்தெளிவிற்கு மனதார நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

முகவுரை, அணிந்துரை, சிறப்புரை, பதிப்புரை, நூலாசிரியர் பற்றிய உரை போன்றவற்றை இந்நூலுக்குத் தந்து அழகு சேர்த்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் இந்நூல் அழகாக கோர்க்கப்பட்டு கைகளில் தவழ தாயகத்தில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்த திருமதி. பரமேஸ்வரி இளங்கோ அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எனக்கு உடலும் உயிரும் தந்த பெற்றோர் நினைவுகளோடு நிஜங்கள் என்றும் என் எழுத்துக்களில் வாழும், உலகின் ஊமை வடிவங்கள் என் எழுத்துக்களில் பேசும், காலக்கண்ணாடி என் எழுத்துக்களில் விம்பம் காட்டும் அறியாத வாழ்வின் சிக்கல்கள் என் எழுத்துக்களில் அலசப்படும் என்னும் நம்பிக்கையோடு இன்று நான்……

தேடித்தேடிச் சலிக்காத மனத்தோடு
தேடிக் கொண்டே இருக்கும்

கௌசி

20.07.2013

Chandragowry.sivapalan

Felder Str – 56
42651 Solingen
Germany.
E.mail : c.gowry@yahoo.de
T.P: 0212/22605546
Web: www.gowsy.com
www.vanappu.gowsy.com

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *