வாழ்த்துரை

வலுவூட்டுவோம்…  வாழ்த்துவோம்….!

 மனம் கொண்டதே வாழ்க்கை. தனி மனிதராக பிறப்பிலும் இறப்பிலும் நினைத்ததை அடைந்து வாழ பிரயத்தனப்படும் நம்மில் பலர், சேர்ந்து வாழும் போது, அதனின்று வழுவி வாழ்வதும் நிதர்சனம். மாறாக அமைந்து விடுவதும் உண்டு. அதற்கு தனி மனிதன் பொறுப்பல்ல. இதில் கணவன் மனைவி உறவு முறையும் உள்ளடங்கும்.

 சேர்ந்து வாழும் கூட்டு வாழ்வில் விரும்பிய வாழ்வு இசைந்திடா விடில், மாற்றி வாழ ஏது வழி? இதுவே நம்மில் பலரிற்கு சவாலாகவும் அமைந்து விடுகிறது. இதற்கென தீர்வு காணும் தனிவாய்ப்பாடு உலகில் எவரிடமும் இல்லையென்பதும் புரிகிறது. எனவே, அவரவர் மனம் கொண்ட வாழ்வை வாழ்காலம் முழுவதும் இணைத்து வாழ, ஆசைகளை, ஆற்றல்களால் நிரவ வேண்டியது அவசியமாகிறது.

 இங்கே, எண்ணிய வாழ்வு கடந்த காலங்களில் கனிந்தது எனினும், அதற்கு தடையூறுகள் வரும்போது தடுமாறி, மீண்டும் மீள எழும் வாழ்வில் இசைந்திட எத்தனிக்கும் கதாபாத்திரம், இந்நூலில் நகர்ந்து போவதை வாசகர்களும் அவதானிக்க முடியும்..

 வாருங்கள் இக் கதாபாத்திரத்தை அதன் வலிகளில், தழும்புகளில் இருந்து இனம் காண முயல்வோம். மனம் கொண்டபடி மீள எழ முற்படும் எத்தனத்தை புரிந்து கொள்வோம். இயன்றவரை, இக்கதாபாத்திரத்தை உயிர்ப்புக் கொள்ள உரம் கொடுப்போம். வலுவூட்டுவோம்.

 நிஜக் கதாபாத்திரத்தை கருவாக்கி, அழகிய சொல்லூட்டங்களுடன் உயிரூட்டி, நம்மோடு இழையோட விட்டு, நேரில் இனம் காண வைத்த கதாசிரியர் மிகப் பாராட்டுதற்குரியவர். அவர் எழுத்தாற்றல் மட்டுமன்றி, அவர் எடுத்திருக்கும் சமூகப் பொறுப்பும் அவரை நிமிர்ந்து பார்க்க வைக்கின்றது. பாராட்டுக்கள்.

 இவ்வகைக் கருவூட்டங்கள் வெறும் ஆர்வத்தோடு பேசிவிட்டு, லண்டன் தமிழ் வானொலி காற்றலையில், இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பாகி கரைந்ததோடு மட்டும் ஆகிவிடாமல், அதனை பதிப்பாக்கி வெளியாக்க மனம் பதித்து, கரம் இணைத்து இன்று வெளியாக்கம் பெற வைத்த பதிப்பாசிரியரிற்கும் பெரு நன்றியுடன், மனம் கனிந்த வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.  தொடர்க இவ்வகைப் பணிகள் என்றும் வேண்டுகின்றோம்.

வலுவூட்டுவோம்…  வாழ்த்துவோம்….!

அன்புடன்

நடா மோகன்

First Audio

லண்டன் தமிழ் வானொலி

பா முகம் – FA Tv Tamil

www.firstaudio.net  –  +44 (0) 7956 256636

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *