பதிப்புரை

                      திரு. லோ. கல்விராஜன் அவர்களுக்கு

                                               சமர்ப்பணம்

                                          kal

எழுத்துக்கள் சக்தி வாய்ந்தவை. அதன் மூலம் உலகத்தையே திருப்பிப் போடலாம். கௌசி அவர்கள் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு தான் வாழும் மண்ணில் நடந்த ஒரு உண்மை வாழ்க்கைச் சரித்திரத்தை  பலருக்கும் பாடமாக அமையட்டும் என்று இலண்டன் தமிழ் வானொலியில் 4 வாரங்கள் தொடராகத் தன் குரலில் இலக்கியநேரம் என்னும் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தார். அதுவே இன்று இந்நூல் வடிவாக உருமாறியிருக்கின்றது.

                                                              இவர் தம் படைப்புக்களை இலண்டன்தமிழ் வானொலி மூலம் உச்சரிக்கும்போது அதன் கம்பீரத்தையும் சொல் அழுத்தத்தையும் கேட்டு உயிர் ஒன்றி உணர்ச்சி கலந்து என்னை மறந்திருப்பேன். உலகத்தின் ஊமை வடிவங்கள் இவர் படைப்புக்களின் மூலம் வாய்திறக்கும். மறைந்து கிடக்கும் மங்கிக் கிடக்கும் சில உண்மைகள் இவர் படைப்புக்களின் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டப்படும். இவர் எழுத்து நடையிலே காணப்படும் நயம் என்னைத் திகைக்க வைக்கும். வாழ்விலும் சரி எழுத்திலும் சரி உள்ளொன்று வைத்துப் புறமொன்றைக் கூறுவதில்லை என்பதைத் தனது “சொல்லும் செயலும் ஒன்றானால். உலகம் சொல்லும் உன் பெயர்” என்னும் சொந்த வாசகத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுபோலவே நான் இவர் எழுத்துக்களில் உண்மைத் தன்மையைக் காண்கின்றேன்.

                                           இவர் படைப்புக்கள் சமுதாயநோய்க்கு மருந்துக்கலவை தந்திருக்கிறது. எழுத்துக்கள் சேர்ந்து வெறும் சொற்கள் என்பதை மீறி காலக்கண்ணாடி என்பதை உணர்த்தி நிற்கின்றன. இவரின் கற்ற அநுபவமும் கற்பித்த அநுபவமும் வாழ்ந்த சூழல் அநுபவமும் இணைந்தே படைப்புக்களுக்கு மகுடம் சூட்டுகின்றன. நேரம் இடம் கொடுக்கும் போதெல்லாம் தனது சொந்த இணையத்தளங்களில்(www.gowsy.com) (www.vanappu.gowsy.com) தனது படைப்புக்களை வெளியிடுகின்றார். உலகத்து வாசகர்கள் இவர் படைப்புக்களுக்குத் தரும் ஆதரவே இவர் எழுத்துக்களின் அழகுக்கும் உள்ளடக்கத்திற்கும் அத்தாட்சியாகும்.

                                                               இவர் இலண்டன் தமிழ் வானொலியில் ஓடிவிளையாடுபாப்பா என்னும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். அந்நிகழ்ச்சி மூலம் பல அரிய செய்திகளை உலகத்திற்கு சொல்லியிருக்கின்றார். அத்துடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் இளையோருக்கு தன் சிறப்பான எண்ணத்தூண்டல்களை வழங்கியிருக்கின்றார். அச்சமயமே இவர் வாழ்வியல் இலக்கியம் கூறும் இலக்கியநேரத்தில் எழுதி ஒலிவடிவில் வழங்கிய என்னையே நானறியேன் என்னும் இவ்விலக்கியம் ஒலிபரப்பானது.

                                                          எனவே ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த கசப்பான உண்மைகள் உலகுக் கண்ணுக்குப் புலப்படுத்தப்படவேண்டும். வெளிநாட்டுச் சுகம்நாடி தாயகத்தைவிட்டு வரும் பெண்கள் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் போன்ற விடயங்கள் உலக மனங்களிலே படரவிடப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதற்கமைய எனது கணவன் ஒரு புத்தகப்பிரியர். தானாகவே ஒரு சஞ்சிகையை வழிநடத்திக் கொண்டிருந்தவர். அதனால், அவர் நினைவு தினத்தில் இந்நூலை அவருக்குச் சமர்ப்பணமாக வெளியிட விரும்பினேன். கௌசி அவர்களிடம் இந்நூலுக்கான முதல் பதிப்புரிமையைப் பெற்று இந்நூலை எனது கணவனுக்குச் சமர்ப்பணமாக வெளியிடுவதில் அகம்மிக மகிழ்கிறேன். நான் கேட்டவுடன் எந்த மறுப்பும் தெரிவிக்காது இந்நூலை வெளியிடுவதற்கு அநுமதி வழங்கிய கௌசி அவர்களுக்கு எனது மனமுவர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

 அன்புடன் மனைவி

  தவமலர் கல்விராஜன்

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *