சிறப்புரை

இயந்திரமயமான இக்கட்டான காலகட்டத்தில் கட்புலனும், செவிப்புலனும் இணைந்த வெகுசனத்தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாக இளையவர் முதல் பெரியவர் வரை எழுத்துப் பழக்கமும், வாசிப்புப் பழக்கமும் குறைவடைந்து காணப்படுகிறது.  கீழைத்தேயநாடுகளில் மட்டுமல்ல அனைத்துலக நாடுகளிலும் இதுவே நிலைமையாக உள்ளது. எனினும் காலத்திற்கேற்றாற்போல் மொழிசார்ந்த செயற்பாடுகள் மக்களைச் சென்றடைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழி சார்ந்த இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. இலக்கணத்தால் தலைநிமிரும் மொழிகளெல்லாம் என்றைக்கும் அழிவதில்லை. இதை அறியாதார் அறியார். அறிந்தவரே அறிவர்.  இலக்கியம் என்பது ஒரு கலைவடிவம். இது இந்நூலாசிரியரான கௌசி அவர்களுக்குக் கைவந்தகலை. இந்நூலைப் பற்றிய சிறப்புக்களைக் கூறுவதற்கு முன், கௌசி என்பவர் உயர்கல்வி படித்த காலத்திலிருந்து இன்று வரை உறவுரீதியாகவும், நட்புரீதியாகவும் பழகுகின்றவர் என்ற முறையில் அவரைப்பற்றிச் சிலவற்றைக் கூறவேண்டி உள்ளது. பள்ளிப் பருவத்தில் இவர் சுறுசுறுப்புடனும் புன்சிரிப்புடனும் நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களைச் சந்தோசப்படுத்தித் தானும் மகிழ்ச்சியாக இருக்கும் குணமும், ஆற்றலும், அறிவும் நிறைந்த சிறந்த மாணவியாக இருந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன் கலைத்துறைப் பட்டப்படிப்பை முடித்து, பட்டதாரி ஆசிரியையாகவும், பின்னர் ஆசிரியர் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி, பல சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். இவர் மறந்தாலும் தன் மாணவர்களால் நல்லாசிரியை என்று அடையாளம் காட்டும் வகையில் அவரது கற்பித்தல் முறை அவர்களைக் கவர்ந்துள்ளது. சந்தேகங்களைத் தேக்கி வைக்காது எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் தன்மை கொண்டவர்.

           புலம்பெயர்ந்து வந்தும் அவரது கலைப்பயணம் தொடர்ந்தது. இலண்டன் தமிழ் வானொலியில் இணைந்து கொண்டு கவிதைகள், இலக்கியங்கள், வானொலிவாக்கு எனப் பலதுறைகளில் இவரது சேவை தொடர்ந்தது. பின்னர் அவ்வானொலியில் சிறுவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கடமையாற்றி, தற்காலத்துத் தகவல் தொடர்பு யுகத்திற்கேற்றாப்போல் சில முக்கியமானதும், தேவையானதும், சில மறக்கப்பட்டதுமான தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டுமென்று தனக்கென ஓரிடத்தை இணையத்தளத்தில் ஏற்படுத்தி அதனூடாக தனது உயிர்த் துடிப்புள்ள உணர்ச்சியின் வெளிப்பாடுகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றார்.

                           எழுத்தையும், வாசிப்பையும் வழமையான தொழிலாகக் கொண்டவர். பழைமையின் தோள்களில் ஏறிநின்று புதுமையை வரவேற்கும் சிந்தனைப்போக்குடையவர். சிந்திக்கும் சிறப்பான பண்பை மனிதருக்குக் கொடுத்திருந்தும் சிந்திக்க மறுக்கும் சிலரைச் சிந்திக்க வைப்பவராகவும், மறுத்தவரை வாதாடி உண்மையை வலியுறுத்துவதில் இவருக்கு நிகர் இவரே. இலக்கணத்தில் சொல்வதானால் பகுதி விகுதிக்கு இடந்தந்து நிற்கும் இடைநிலைபோல இளந்தலை முறையினருக்கு முன்னுரிமைகொடுத்து முதன்மைப் படுத்துபவர். கட்டுரைகள், கதைகள் எல்லாம் இலக்கியமாவது கண்டு, அடிக்காமல் அடிக்கின்ற அடிகள் மூலம் அருந்தமிழை எதிர்த்தவரை அடக்கிவைப்பார். காணும்  பொருட்களையும், காட்சிகளையும் கவிதையாகவும், இலக்கியமாகவும் காண்பவர். அந்தவகையில்  உண்மைக்கதையொன்று என்னையே நானறியேன் இலக்கியமாகிறது. ஒரு உண்மைச்சம்பவத்தின் கருவை கதையாய் உருவாக்கி அதை இலக்கியமாய் தவழவிட்டுள்ளார். கருவைக் கொடுத்த கன்னியை விட, உருவைக்கொடுத்த தாய்மை பெருமைக்குரியதல்லவா? அந்தவகையில் கௌசி பாராட்டப்பட வேண்டியவர்தான். என்னையே நானறியேன் என்னும் இலக்கியத்தில் அவர் பல உவமைகளையும், பொன்மொழிகளையும், சில ஆராட்சிக் கருத்துக்களையும் ஆதாரமாகக் கொண்டு கதையை நகர்த்தும் விதம் சிறப்பாக உள்ளது. திருமணத்தின் சின்னமாக விளங்கும் தாலியின் பிறப்புப் பற்றிய தகவல் சிலருக்குத் தெரியாமலும் இருக்கலாம். அதைவெளிப்படுத்திக் காட்டியுள்ளமையும், சில சொற்கள் இலக்கணச் சொற்களாகப் பிரித்தறியத்தக்கவையாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுக்காக ஒன்றைக் குறிப்பிடில் பெற்றோர் என்னும் சொல் காரணத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு காரணப்பெயர் என்பதை விளக்கும் வகையில் அமைந்த விதம். அதாவது பிள்ளைப் பேற்றை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்கின்ற காரணத்தால் தான் பெற்றவர்கள் என்பது பெற்றோராகின்றனர்.

                                                  அடுத்ததாக, தான் வாழும் நாட்டின் நாகரீகப் பண்புகளில் ஒன்றான விருந்தினரின் வருகையை முன்கூட்டியே அறிவித்து அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொள்வது, வாழ்விடத்தின் சட்டதிட்டங்களை மதித்தல், அதற்குக் கட்டுப்படுதல் போன்ற பல கோணங்களில் தனது எண்ணங்களை சுழல விட்டுள்ளார். எந்தப் பார்வையில் நின்று நோக்கினாலும்.அவரது இலக்கியத்தில் அதன் எல்லையைக் கண்டுவிடலாம். அனைத்தையுமே ஒரு கதைக்குள் அடக்கிய கவித்துவமும், புலமைத்துவமும் கொண்டு, நேரசையில் துள்ளுகின்ற தேமாபோல நினைவலையில் பின்னுகின்றது, அவரது இலக்கியம். காலமறிந்து கூவிடும் சேவல் போல காலத்தின் தேவைக்கேற்ற நல்ல இலக்கியங்களை மேலும் மேலும் உருவாக்கி ஊனமுறாவகையில் எம் தாய்மொழியினைக் காக்கும் கண்ணியமான பொறுப்பு ஒவ்வொரு கலைஞனுக்கும், இலக்கியவாதிக்கும் உண்டு என்பதை உறுதி கொண்டு, செயற்படுவதுடன், கௌசியையும் வாழ்த்தி அவரது படைப்புக்களுக்கு நல்லாசிகளும் ஆதரவும் கொடுத்து ஊக்குவிக்கும் முகமாக இந்நூல் அனைவரது கைகளிலும் தவழட்டும். தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்துவதோடு, உருவகத்தில் உவமையதன்ஆட்சிபோல் உயர் தமிழால்  ஒளிபெற்று உயர்ந்தே வாழ்க! என மனமார வாழ்த்துகின்றேன்.

தமிழ்மணி. திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன்

                               (காமன், ஜேர்மனி)

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *