அணிந்துரை

 தம்மிலும் தம் அறிவால் வளர்வார், சிறப்புடையவராயின். உள்ளம் குதூகலிப்பார் உண்மை ஆசிரியர். ஒருவர் கற்ற இன்பத்திலும் மேலாமே தான் கற்ற கல்வி பிறர் அறியச் சொலல். ஆசிரியப்பணி ஒரு ஆனந்தப்பணி. கல்விநாடிவரும் செல்வங்களுக்குள்ளே புகுந்துவிட்டால், கவலைகள் விடைபெறும். உள்ளம் துள்ளல் இசைபாடும். அதட்டவும் அணைக்கவும் ஆசானுக்குள்ள உரிமை பெற்றோருக்குள்ள உரிமை போலானது. இந்த வரிகள் என்னுடைய வரிகள் அல்ல. இக்கதையின் ஆசிரியை அவர்கள் ஆசிரியத் தொழில் பற்றி வர்ணிக்கும் ஒரு சில வரிகள் இவை. இவர் தாயகத்தில் பல வருடங்களாக ஆசிரியையாகவும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியையாகவும் தொழில் புரிந்தவர். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் விசேட பட்டம் பெற்றவர். அத்தோடு இக்கதையின் நாயகி கூட ஒரு ஆசிரியையாகக் காணப்படுகின்றார். ஆகையினாலேயே  தாம் கற்றவற்றை அறிந்தவற்றைப் புலம்பெயர் வாழ்வில் பெற்ற அநுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் நற்சிந்தனை அவருக்கு உருவாகியிருக்கவேண்டும்.

             தரமான இலக்கியங்கள் ஒரு இனத்தில் உருவாக வேண்டுமென்றால், அவ்வினம் செல்வச்செழிப்பின் உச்சத்தில் இருக்கவேண்டும், அல்லது சோகத்தின் பள்ளத்தில் இருக்கவேண்டும். என்பது ஆன்றோர் வாக்கு. இன்று ஈழத்தமிழினம் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வது நம் இனத்திற்கேற்பட்ட பெரும் சோகநிகழ்வல்லவா? அப்படி நாம் புலம்பெயர்ந்தாலும் நம்மவர் புலம்பெயர் படைப்புக்கள் தாயகத்திலும் ஏன் தமிழகத்திலும் கூட பெரும் வரவேற்புப் பெற்று வருகின்றன. அதனால், இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் எழுத்தாற்றல் கொண்ட பலரும் தமது புலம்பெயர் அநுபவங்களை பல்வேறு வடிவங்களிலும் பதிவு செய்து கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.

               அந்த வகையில் ஜேர்மனி நாட்டிலே புலம்பெயந்த ஒரு மத்தியதரக் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தைத் தனது கற்பனைத் திறனைக் கையாண்டு கதைக்குச் சுவையூட்டி வாசகர்களுக்குப் படைத்திருக்கும் கதாசிரியை கௌசி அவர்களையும் அக்கதையை உலகுக்கு அறிமுகப்படுத்த முன்வந்த தவமலர் அவர்களையும் பாராட்டியே தீரவேண்டும்.

               இந்தக் கதைக்குள்ளே கவிதையுண்டு, கதாபாத்திரங்களின் முரண்பட்ட உரையாடல்கள் உண்டு, அழகான வர்ணனைகள் உண்டு, அற்புதமான பொன்மொழிகள் உண்டு. கதையின் நாயகி முதன்முதலாக ஜேர்மனி நோக்கிப் பயணமாகும் போது அவள் பயணித்த விமானத்தில் எழுதியதாக கதாசிரியர் தந்திருக்கும் கவிதையிலே

          “விமானியோ தொட்டிலொன்று ஆட்டுகிறான்

           விண்வெளியோ சொர்க்கம் ஒன்று காட்டுகிறதே!

           சொற்களால் வடிக்கவொண்ணா அழகுணர்ச்சி

           சொர்க்கமென்ற ஒரு சொல்லில் அடங்கிற்றோ

           வர்க்கபேதம் அங்கில்லை, வழிப்பறித் தொல்லையில்லை

           வாகனத்தடையில்லை, வழியேதும் புரிவதில்லை

           கண்ணைக் கட்டிவிட்டதுபோல் கடக்கின்றோம் நாட்டைவிட்டு

           கண் கண்ட தெய்வமாய் கரைசேர்க்கின்றான் விமானியும் தான்‘‘

இந்த வரிகளில் விமானப் பயணத்தின் அநுபவ வரிகள் அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. 1920 ஆண்டுகளில் முதன்முதலாக கல்கத்தாவில் விமானம் அறிமுகப்படுத்தப்பட்ட போது எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அதில் பயணம் செய்த அநுபவத்தை அழகான கவிதையில் வடித்திருந்தார். அதனை இக்கவிதையைப் படிக்கும்போது நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இன்னும் ஓரிடத்தில் தன்னருகே வரத் தயங்கும் மகனை நினைத்துக் கலங்கும் தாயின் ஏக்கத்தை கவிதையாய் வடித்திருப்பதை வாசிக்கும்போது வாசகர் மனமும் தான் கலங்கும்;. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கதாசிரியர் கவியாற்றல் புலப்படுகின்றது.

          இயற்கையை இரசித்து இன்புறும் கதாசிரியர் வரிகள் சில இடங்களில் இவர் மொழிநடையை மேம்படுத்திக்காட்டுகின்றது. இயற்கையாகவே நடைபெறும் சம்பவத்தை ஆராய்வுக் கண்கொண்டு நோக்கி அதற்கான காரணத்தையும் அழகாக விளக்கியுள்ளார். “சூரியனின் கதிர்கள் கண்ணைக் கூசச் செய்தன. என்றுமில்லா வண்ணம் சூரியக்கதிர்கள் வரதேவி வசிக்கும் நகரத்தில் வாசம் செய்தன. நகரம் பளிச்சென்று அழகாகக் காட்சியளித்தது. வானிருந்து உலகில் வாசம் செய்ய வந்த பனிக்கூட்டம் நிலமெங்கும் நிறைந்திருக்க, சூரியக்கதிர்கள் அதன் மேல் பட்டதனால் சிறிதளவில் உருகின. இவ்வுருகும் பனிக்கூட்டங்களில் சுற்றாடலிலுள்ள குளிர்காற்று சூழுகின்ற போது உருகிய பனிகள் நிலமெங்கும் உறைகின்றன. இதனால், பளிங்குக் கண்ணாடிகளாய் பனித்துகள்கள் உருமாறின. இப்பளிங்குக் கண்ணாடிகளாய் காட்சியளித்த உறைபனிகளிலே சூரியக்கதிர்கள் பட்டுத் தெறிக்கின்றபோது கண்ணைக்கூசச் செய்யும் ஒளித்தெறிப்புக்கள் தோன்றுகின்றன. இயற்கை எது செய்தாலும் அழகே‘‘ ஆசிரியர் எது எழுதினாலும் அழகாகவே இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

     தாயகம் செல்ல விரும்பும் தந்தை மகனிடம் அதற்கான காரணத்தை விபரிக்கும் போது ஆசிரியர் அழகுநடை தெளிவாகின்றது. “அந்தக் காற்றைச் சுவாசிப்பேன் அந்த மணலில் புரண்டு எழுவேன், அந்தச் சூரியனின் கதிர்களை என் வெற்று உடம்பினால் உடைப்பேன். ஒரு காலால் இலங்கை மண்ணைத் தட்டித்தட்டி ஒத்தடம் கொடுப்பேன், உறவினர் மனதுக்குள் நுழைந்து திரும்புவேன், தியேட்டருக்குள் சென்று படம் பார்த்து மூட்டைப்பூச்சிகளுக்கு இரத்ததானம் வழங்குவேன்‘‘ இவ்வாறு தொடர்கின்றது கற்பனை வரிகள். இவ்வாறான உணர்வுகள் ஆரம்பகாலங்களிலே அந்நியநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து இப்போது முதுமையை எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் சாதாரண மனிதர்கள் எவருக்கும் ஏற்படக்கூடியதே. தாயகத்தில் வாழ்ந்த பழைய நினைவுகளை மறக்கமுடியாமலும் புலம்பெயர்ந்த நாட்டுமக்களின் கலாச்சரத்துடன் ஒன்றிவிட முடியாமலும் தவிக்கும் கதையின் நாயகன் உளரீதியான தாக்கம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.

      கதையை அழகுபடுத்தக் கதாசிரியர் கையாண்ட வார்த்தைகளைப் படிக்கும்போது இயல்பாகவே பொன்மொழிகளில் ஆர்வமுள்ள எனக்கு, இவ்வார்த்தைகள் சிறந்த பொன்மொழிகளாய் தென்படுவதால், அவற்றைத் தனியாகத் தொகுத்துள்ளேன். எதனையும் ஆழ்ந்து நோக்கி தேடலறிவை அதனுடன் புகுத்தும் தலைசிறந்த எழுத்தாளர்களால் மட்டுமே இவ்வாறான பொன்மொழிகளைப் புகுத்த முடியும். பக்கத்திலே பொன்மொழிகளின் புத்தகத்தை வைத்துக் கொண்டு யாராலும் கதை எழுத முடியாது. கதைக்குத் தகுந்தாற்போல் வார்த்தைப் பிரயோகங்களை வழங்குகின்ற பக்குவம் பக்குவப்பட்ட எழுத்தாளர்களல் மட்டுமே முடியும். இந்த வகையிலே கௌசி அவர்கள் உயர்ந்து நிற்கின்றார்.

          கதையினுள்ளே புகுந்து ஒவ்வொரு மனிதர்கள் வாழ்விலும் அழியாத கோலங்களாக மறைந்திருக்கும் சம்பவங்கள் பற்றிப் புரிந்து கொள்ளவும், உவமை உருவகங்கள் உள்வாங்கவும், ஜேர்மனிய நடைமுறைகள்  அறிந்து கொள்ளவும், அழகுநடை அநுபவிக்கவும் வாசகர்கள் அனைவரும் என்னுடன் இணைந்தே இன்புறுங்கள்.

          இன்று ஊடகத்துறையானது பல்வேறு பரிமாண வளச்சி அடைந்திருந்த போதிலும் அச்சுருப்பெறும் நூல்களின் பதிப்பும் மாண்பும் என்றும் குறைந்துவிடாது. ஆனால், அது தரமானதாகவும் நல்ல செய்திகளை மக்களுக்குக் கூறுபவையாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலேயே மக்களிடையே நீண்டகாலம் நிலைத்திருக்க முடியும். இந்நூலாசிரியை வானொலி, கணனி, பத்திரிகை போன்ற ஊடகங்களில் ஏற்கனவே அறிமுகமானவர். ஆனால், நூலுருப்பெறும் அவரது முதலாவது ஆக்கம் இதுவேயாகும். இது முதல் நூலானாலும் முத்திரை பதித்துள்ளது. இத்துடன் நிறுத்திவிடாது இவர் இதுபோல் மேலும் பல நூல்களை வாசிப்புப் பிரியர்களுக்குத் தந்துதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அன்புடன்

தம்பிராஜா பவானந்தராஜா

 

Hunsrück Str – 17

52477 Alsdorf

 

       கதைக்குள்ளே கௌசியவர்களின் பொன்மொழிகள்

 1. இன்பமோ துன்பமோ உள்ளத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் பாங்கு கண்ணீருக்குத்தான் உண்டு
 1. எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வது என்பது முடியாத காரியம்.
 1. எல்லோரும் மகாத்மாக்களும் இல்லை. எல்லோரும் கொடியவர்களும் இல்லை.
 1. ஒரு பெண்ணின் தேவைகளை நிறைவேற்றமுடியாத ஒரு ஆண்மகன். அவளை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
 1. ஆசிய நாட்டிலிருப்பவர்கள் இங்கு பணம் உழைப்பது ஓடுகின்ற தண்ணீரில் அள்ளி எடுப்பது என்று நினைப்பார்கள்.
 1. அறிவுடையார் தம் அறிவை மேம்படுத்தி உறவுகளை வலுப்படுத்தி ஆதாயம் பண்ணப் பார்த்தல் இயல்பே.
 1. பணம் ஒரு கேடுகெட்ட ஒரு நோய்ககிருமி. தம்மில் அளவுக்கு மீறி ஆசை கொள்பவர்களை ஆட்டிப்படைக்கும். அதைத் தேடிச் செல்லும் மனிதனை பைத்தியமாக்கும்.
 1. எந்தத் தொழில் நுட்பசாதனங்களையும் அவதானமாகக் கையாளும் போதே அதன் பயன்பாட்டைப் பெறமுடியும்.
 1. வாழ்க்கையை பொறுப்புணர்ச்சியுடனும் பொறுமையுடனும் வாழவேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
 1. பயிற்சி மூலமே ஒவ்வொருவரும் தமது திறமயைக் கொண்டுவர முடியும். எமக்குக் கிடைக்காது என்று மனதில் நினைத்துவிட்டால். நிச்சயம் கிடைக்காது. கிடைக்கும் என்று முயற்சி செய்தால், இதைவிடச் சிறப்பாக கிடைக்கும்.
 1. குழந்தை என்பது ஒரு பெண் என்ற உறவை தாய் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துகின்ற உறவு. எப்படி என்ற எடுத்துரைக்க முடியாத தாய்ப்பாசம் என்ற உணர்வைத் தாய்க்கு ஊட்டும் உறவு.
 1. ஒவருக்கு நல்லவராக்த் தெரிபவர்  வேறு ஒருவருக்குப் பொல்லாதவராக்

 தெரிவது இயற்கை.

 1. தாமரைப்பூ எந்தளவு நீரில் நின்றாலும் அந்தளவு நீர்மட்டத்திற்கு  மேலேயே நிற்கும். கல்வி அறிவு பெற்றவர்கள் தாழ்ந்து போவதில்லை. அதனாலேயே சரஸ்வதி தாமரைப்பூவில் அமர்ந்திருக்கின்றாள்.
 1. தன்னம்பிக்கையும் ஆசையும் சரியான முறையில் கையாளப்பட்டால், தீயவழிக்கே ஒரு மனிதனைக் கொண்ட செல்லும்.
 1. நிலைகெட்ட மனிதர் வாழ்ந்தால், அதற்கு எதிராக உதவிடும் மாமனிதர்களும் வாழ்வார்கள்.
 1. பாடசாலை முதல்நாள் என்பது ஒவ்வொரு மனிதனும் அரிச்சுவடு தொடங்கும் ஒரு கோயில். கல்வி என்னும் கடவுள் அருள்தரும் ஆலயம். வாழ்வின் வெளிச்சத்திற்கு அடிகோலும் வசந்தவாசல்.
 1. ஐரோப்பியநாடு சுகமானது அதுவே துணையின்றி வாழ்வார்க்குப்

 பயமானது.

 1. ஆடம்பரடான வாழ்வு வரும் போகும். ஆதரவான உள்ளம் கிடைப்பதும் அரிது தொடர்வதும் அரிது.
 1. எது எப்படி எங்கே வாழவேண்டுமோ. அது அங்கே அப்படியே வாழவேண்டும்.
 1. கலைகள் மனிதனுக்குக் கிடைப்பது கடவுள் கொடுக்கும் வரம்.
 1. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருப்பான். உறங்கிக் கொண்டிருக்கும் அவனைத் தட்டி எழுப்பினால். தனது வேலையைத் தாராளமாகக் காட்டத் தொடங்குவான்.
 1. உலகில் எது நடந்தாலும் ஏதோ ஒரு காரணத்தாலேயே நடைபெறுகிறது.
 1. விதையில் இருந்து செடி பிறத்தல் போல எண்ணத்திலிருந்து செயல் பிறக்கிறது.
 1. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பலர் குணத்தையும் மாற்றிவிடும் என்பது உண்மை.
 1. என்னதான் மாற்றான் தாயிடம் பாசம் வைத்தாலும் பெற்றோரிடம் பெறும் பாசத்திற்கு ஈடாகுமா.
 1. பூமி சுழலும் திசைக்கு சுழலவேண்டியதுதான் ஒருநாள் காணாமல் போய்விடுவோம் இதுதான் உண்மை.
 1. என்னைப் போல் மற்றவனும் வாழவேண்டும் என்று நினைப்பதுவே தான் மனிதநேயம்.
 2. குடும்ப வாழ்க்கை என்பது கண்ணாடிப் பாத்திரம்போல் பேணிப் பாதுகாக்க வேண்டியது. அத்தனை உறுப்பினரும் அதனை அவதானமாகப் பயன்படுத்தாது விட்டால் உடைந்து சுக்குநூறாகிவிடும்.
 1. சோகங்கள் என்றும் தொடர்வதில்லை. அடிக்கடி இன்பங்களும் வந்துபோகும். இது இயற்கை கற்பிக்கும் பாடம்
 1. வாழ்வின் அர்த்தமும் மகிழ்ச்சியும் ஆழமான அன்பிலேயே வரும்.
 1. சுகமான நட்பு சுகந்தங்களை வாழ்வுக்குக் காட்டிவிடும். தீநட்பு படுகுழியில் வீழ்த்திவிடும். இதை அறிந்தும் சில மனிதர்கள் மாண்டுவிடுகின்றார்கள்.
 1. சிரித்தாலும் அழுதாலும் உடலானது கண்ணீர்தானமே செய்கின்றது.
 1. பிரயாணம் செய்யும் வாகனத்தில் சாரதியை மீறி பயணம் செய்ய முடியுமா. பலரை ஏமாற்றலாம். ஆண்டவன் கண்களைக் கட்டமுடியுமா.
 1. கொழுத்த பிள்ளை அழகு என்பதற்காக கொழுப்பைப் பிள்ளைக்கு உண்ணக் கொடுக்க முடியமா.
 1. ஒரு மனிதன் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படும் வேளையில், அவன் ஆற்றிய புண்ணியங்கள் புதுப்பொலிவு பெற்றுத் துணை தரத் துடித்துக் கொண்டு ஓடிவரும்.
 1. முடியாது என்று வாழ்வில் எதுவும் இல்லை. முடித்துக்காட்ட முனையும் போது மூளையும் எம்முடன் இணைந்து வேகத்தைக் கூட்டும். வேதனை நோய் என்று விழுந்துவிட்டால் எழுந்து நிற்கவே மனம் துணையாகாது.
 1. காலத்தை வென்று வாழ மனிதன் முயற்சிப்பதே இவ்வுலகத்தின் வளர்ச்சி.
 1. இல்லை என்று உலகில் எதுவும் இல்லை. உள்ளதனைத்தும் கொண்டே வளர்வது மனிதன் கொள்கை.
 1. மனதுக்குள் ஏற்படும் தவிப்புக்கள் விபரிக்கவும் முடியாது. விளங்கப்படுத்தினால் பிறரால் விளங்கவுமுடியாது.
 1. என்னதான் ஞானியானாலும் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது அதைக் காப்பாற்றவே முனைந்து நிற்பார்கள்.
 1. வாழும்வரை உலகவாழ்க்கையை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். வானத்துக்குக் கீழே வீடு கட்டிவிட்டு வானம் விழுந்துவிடும் என்று பயப்படத்தான் முடியுமா.
 1. நினைவுகள் அப்படியே இருந்துவிடுவதில்லை. அது அழிக்கப்படும் அறிவுப்பலகையாகவும் இருக்கும். அதை அறிவுப்பலகையாக்குவதும் அழியாத கல்வெட்டுக்கள் ஆக்குவதும் அவரவர் மனதைப் பொறுத்தது.
 1. எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. நாம் உயிரோடு இருக்கும் வரை அநுபவிப்போம். இல்லாது போனால் சொந்தமில்லை என்று நினைத்திருப்போம்.
 1. மற்றவர்களுக்காக நீதியற்ற எந்தக் காரியத்தையும் செய்து விடாதே.
 1. இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அமைகின்றது. சந்தர்ப்பம் வந்து அமைவதும் அவர்கள் சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது.
 1. சாதித்தவர் வாழ்வை தன் முயற்சியில் சாதித்துவிட்டேன் என்பார். முயன்று முயன்று தோன்றவர் முடிவு என் கையில் இல்லை என்று நினைப்பார்.

License

என்னையே நானறியேன் Copyright © 2013 by kowsy. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *